லைஃப்ஸ்டைல்

குழந்தைகளுக்கான பொம்மைகளை தேர்ந்தெடுப்பது எப்படி?

Published On 2019-04-06 08:01 GMT   |   Update On 2019-04-06 08:01 GMT
குறிப்பிட்ட வயதை அடையும் வரையிலுமே குழந்தைகளுக்கு பொம்மைகள் தேவைப்படுகிறது. அப்படிப்பட்ட பொம்மைகளைத் தேர்ந்தெடுப்பதிலும் சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும்.
பொம்மை என்பது பெரியவர்களுக்குத்தான் உயிரற்ற ஒரு விளையாட்டு பொருள். ஆனால், குழந்தைகளைப் பொறுத்தவரை அதுவும் ஓர் உறவுதான். அதனோடு பேசுவது, விளையாடுவது, தான் சாப்பிடும் உணவை அதற்கு ஊட்டுவது, குளிப்பாட்டுவது, அழகுபடுத்துவது எனபொம்மையைச் சுற்றியே அவர்களின் உலகமும் இயங்கும். பெரியவர்கள் சமயங்களில் அலட்சியமாக பொம்மையைக் கையாண்டால்கூட குழந்தையின் முகமே வாடிவிடும். குறிப்பிட்ட வயதை அடையும் வரையிலுமே குழந்தைகளுக்கு பொம்மைகள் தேவைப்படுகிறது. அப்படிப்பட்ட பொம்மைகளைத் தேர்ந்தெடுப்பதிலும் சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும்.

‘‘குழந்தை பிறந்த முதல் மூன்று மாதங்களில் பெரிய அளவிலான வண்ணமயமான பொம்மைகள், சுழலக்கூடிய அல்லது இசை பொம்மைகளை வாங்கிக் கொடுக்கலாம். கீச்சொலிஎழுப்புகிற அல்லது கண்ணாடியில் பிரதிபலிக்கிற பொம்மைகள் அவர்களை அதிகம் வசீகரிக்கிறது. 3-லிருந்து 6 மாத குழந்தைகள் தங்கள் எல்லைக்குட்பட்ட அனைத்தையும்கற்றுக்கொள்ள முயற்சிப்பார்கள். அதனால் கிலுகிலுப்பை, ரப்பரால் செய்த பொம்மைகள் குழந்தைகள் பிடிக்க, கைகளில் அழுத்த சுலபமாக இருக்கும். குழந்தைகளின் தொட்டில் (அ)படுக்கைக்கு மேலே அவர்கள் கண்களில் படும் வகையில் சுழலும் வண்ணமயமான பொம்மைகளை தொங்கவிடுவதாலும் அவர்கள் உற்சாகமடைவார்கள்.

6-லிருந்து 9 மாதங்களில் குழந்தைகள் உட்கார, தவழ முயற்சிப்பார்கள். தொடுவது, பிடிப்பது, எறிவது, தள்ளுவது என எல்லா விளையாட்டையும் இந்த வயதில் செய்வார்கள். இந்தப் பருவத்தில் அவர்களுக்கு நகரும்படியான பொம்மைகள் வாங்கி தருவது நல்லது. உதாரணமாக கார், பஸ்கள், ரயில்கள், நடனமிடும் வாத்து, விலங்குகள் போன்ற பொம்மைகளைத் தேர்ந்தெடுக்கலாம்.

பல வண்ணங்களிலும், வடிவங்களிலும், மிக எளிதாகக் கையாளக்கூடிய வகையில் இந்தப் பருவத்தில் இருக்கும் பொம்மைகளைக் குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்கலாம். 9-லிருந்து 12 மாதங்களில் குழந்தை எழுந்து சிறிது தூரம் நடக்கவும், நகரவும் செய்யும். பற்கள் முளைக்கும் இந்த வயதுகளில் எல்லாவற்றையும் கடித்து இழுத்து முயற்சிப்பார்கள். அதனால் மரத்தால் ஆன நடை வண்டி போன்றவை பழகவிட வேண்டும்.
 
ஒரு வயது குழந்தைகளுக்கு பொம்மைகளை வைத்து செயல்முறை விளையாட்டுகளைக் கற்றுக் கொடுக்கலாம். பந்து, மட்டை பந்து விளையாடுவது, வாத்து, சமையல் பொருட்கள் மற்றும் கட்டிட பொம்மைகள். இவைகள் உணர்ச்சி திறன்களை மேம்படுத்தும். பொதுவாக, குழந்தைகளுக்குபாதுகாப்பான பொம்மைகளை கொடுக்க வேண்டும்.சிறியபேட்டரிகள் கொண்டஎலெக்ட்ரானிக் பொம்மைகளை குழந்தைகள் விழுங்கிவிடக்கூடிய அபாயம் உண்டு. அதேபோல கூர்மையான பொம்மைகள், நச்சு பெயின்டிலான பொம்மைகளும் ஆபத்தானவை.

வெல்வெட்டால் செய்த மென்மையான வழுவழுப்பான பொம்மைகளால் குழந்தைகளுக்கு அலர்ஜி ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. அதனால், இந்த வகை பொம்மைகளை எல்லாம் தவிர்க்க வேண்டும்.முக்கியமாக ஒரு நல்ல பொம்மை பார்க்க புதுமையாக அல்லது விலை அதிகமாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. தவறான பின்விளைவுகள் அல்லது வன்முறை எண்ணங்களைக் குழந்தைகளின் மூளையில் திணித்துவிடக் கூடாதுஎன்பதே மிக முக்கியம்!’’
Tags:    

Similar News