லைஃப்ஸ்டைல்

வகுப்பு புறக்கணிப்பும், விடுமுறையும், வாழ்வில் வருத்தம் உண்டாக்கும்

Published On 2018-11-07 03:49 GMT   |   Update On 2018-11-07 03:49 GMT
மாணவச் செல்வங்களே வகுப்பு புறக்கணிப்பும், வேண்டாத விடுமுறையும் இப்போது இன்பம் தருவதாக இருந்தாலும், பின்னாளில் வாழ்வில் வருத்தம் உண்டாக்குவதாக அமைந்துவிடும் என்பதை மறந்துவிடாதீர்கள்.
மாணவச் செல்வங்களே... பள்ளி - கல்லூரி வாழ்க்கையைப் பற்றிய உங்கள் அபிப்பிராயம் காலம்தோறும் மாறக்கூடியது. அதில் வகுப்பு புறக்கணிப்பும், வேண்டாத விடுமுறையும் இப்போது இன்பம் தருவதாக இருந்தாலும், பின்னாளில் வாழ்வில் வருத்தம் உண்டாக்குவதாக அமைந்துவிடும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

தொடர்ச்சியான பாடங்களும், பயிற்சிகளும் மாணவர்களான உங்களில் சிலருக்கு சலிப்பைத் தரலாம். இதில் நன்றாகப் படிக்கும் மாணவர்கள் சிலரும் விதிவிலக்கின்றி அடங்குவர். பாடம் புரியவில்லை என்று சராசரி மாணவர்களும், தெரிந்த பாடம்தானே பிறகு படித்துக் கொள்ளலாம் என்று சிறந்த மாணவர்களும் வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபடுவது உண்டு.

‘இன்று அந்த ஆசிரியர்தான் வரவில்லையே ஜாலியாக வெளியே சென்று திரும்பலாம்’ என்று நினைப்பவர்கள் உண்டு. “தலைவர் படம் ரிலீஸ் ஆகிறது, முதல் ஷோ, ஸ்பெஷல் ஷோ பார்க்குறதுதான் கெத்து” என்று வகுப்பை புறக்கணிப்பதும், கூட்டாக சேர்ந்து கொண்டு விடுமுறை எடுத்து பொழுதுபோக்குவதும் சிலருக்கு இன்பமாக தெரிகிறது.

பள்ளி- கல்லூரி வாழ்க்கையில் கிடைக்கும் சுதந்திரம் சிலருக்கு பட்டாம்பூச்சியாய் மாறிவிட்டதைப்போல உணர்வைத் தரலாம். இப்போது இஷ்டத்திற்கு வகுப்பை ‘கட்’ அடித்துவிட்டு சினிமாவிற்கோ அல்லது வேறு எங்கோ செல்வது பெரிய சாதனையாகக்கூட தெரியலாம். ஆனால் அது எதிர் காலத்தை பாதிக்கிறது என்பது இப்போது புரிவதில்லை.

உங்களுக்காக எங்கோ உழைப்பைச் செய்து கொண்டிருக்கும் உங்கள் பெற்றோருக்கு இன்று இது தெரியாமல் இருக்கலாம். ஆனால் இறுதித் தேர்வு உங்களின் நடத்தையை தேர்வு முடிவாக காட்டும். அது வாழ்க்கைப் பாதையில் பிரதிபலிக்கும்.

‘இன்று வாழ்க்கையே சரியில்லை’ என்று புலம்பிக் கொண்டிருப்பவர்கள் எல்லாம், அன்று கல்விப் பருவத்தில் சரியாகப் படிக்காதவர்களாகவும், வகுப்பை புறக்கணித்து இன்பம் தேடியவர்களாகவும்தான் இருப்பார்கள். உங்கள் பெற்றோரோ, உறவினரோ கூட, “நீ நன்றாகப் படி, இல்லாவிட்டால் வாழ்க்கை கஷ்டமாகிவிடும்” என்று உதாரணம் காட்டி பேசுவதை கேள்விப்பட்டிருக்கலாம்.

உங்களுக்கு அதுபோன்ற சிரமங்கள் ஏற்பட வேண்டாம். அந்தச் சிரமம் வேண்டாமென்றால், பள்ளி-கல்லூரிப் பருவத்தை அலட்சியத்துடன் எண்ணும் பழக்கத்தை நீங்கள் கைவிட வேண்டும். பள்ளி-கல்லூரிப் பருவம் இனிமையை, சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தி வீணாக்கிவிட்டு பின்னாளில் வருந்தக்கூடாது.

கல்லூரிப் படிப்பை பொறுத்தவரை, ஒரு செமஸ்டருக்கு இத்தனை விடுமுறை வரை எடுத்துக் கொள்ளலாம் என்ற விதிமுறை இருக்கும். காரணமற்ற விடுமுறைகளை அனுமதிக்கமாட்டார்கள். தேவையற்ற விடு முறைக்கு அபராதம் விதிக்கவும் வாய்ப்பு உண்டு. நீங்கள் அலட்சிய எண்ணத்துடனும், தவறான நடத்தையுடன் வகுப்பு புறக்கணிப்பிலும், தேவையற்ற விடுமுறையிலும் கல்லூரிக் காலத்தை கழித்தால், தேர்வை எதிர்கொள்வதில் சிக்கல்கள் ஏற்படும். கூடுதல் விடுமுறைக்கு, தக்க அபராதம் கட்டி, ‘ஹால்டிக்கெட்’ பெற்றுக்கொள்ளும் விதிமுறை பல்கலைக்கழகங்களில் உண்டு. அதிகமான விடுமுறையால் செமஸ்டர் எழுதும் வாய்ப்பை இழந்த மாணவர்களும் இருக்கிறார்கள்.

பள்ளி-கல்லூரிப் பருவத்தில் உயர்ந்த லட்சியத்துடன் செயல்பட வேண்டும். வேண்டாத விடுமுறையும், வகுப்பு புறக்கணிப்பும் உங்கள் வாழ்க்கையை பாதிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்!
Tags:    

Similar News