வழிபாடு

மேற்கு மாம்பலம் காசிவிசுவநாதர் கோவில் கும்பாபிஷேகம்; அமைச்சர் பி.கே.சேகர்பாபு பங்கேற்பு

Published On 2023-09-10 05:04 GMT   |   Update On 2023-09-10 07:05 GMT
  • 1,000-வது கும்பாபிஷேகம்.
  • காலை 7 மணிக்கு கலச புறப்பாடு நடைபெற்றது.

சென்னை, செப்.10-

சென்னை மேற்கு மாம்பலத்தில் புகழ்பெற்ற காசி விசுவநாதர் கோவில் உள்ளது. காசியில் உள்ள விசுவநாதர் கோவிலுக்கு இணையாக கருதப்படும் இந்த கோவில் 400 ஆண்டுகள் பழமையானது. நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டது. மூலவராக காசிவிசுவநாதரும் அம்பாளாக காசி விசாலாட்சியும் அருள்பாலிக்கின்றனர்.

இந்த கோவிலில் 2010-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. 12 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை மாநில வல்லுனர்குழு மேற்கொண்டது. திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில் கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 6-ந்தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கியது.

நேற்று முன்தினம் மூலவர், பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு வழிபாடு, அஷ்டபந்தன மருந்து சார்த்தும் நிகழ்வு நடந்தது. இன்று அதிகாலையில் 4-ம் கால பூஜை முடிந்து பூர்ணாகுதி நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து 7 மணியளவில் புனிதநீர் கலசங்கள் புறப்பட்டன. 7.15 மணியளவில் ராஜகோபுரம் உள்பட அனைத்து கோபுரங்களின் மீதும் புனித நீர் தெளித்து கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

கும்பாபிஷேகத்தை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு இருந்தனர். அவர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. ராஜகோபுரம் கும்பாபிஷேகம் முடிந்ததும் மூலவர், உற்சவர், மற்றுமுள்ள சன்னதிகளில் அபிசேகம் நடந்தது. காலை ௧௦ மணியளவில் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.

கும்பாபிஷேக நிகழ்வில் இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, கவுமார மடம் சிரவை ஆதீனம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள், திருக்கயிலாய பரம்பரை வேளக்குறிச்சி ஆதீனம் சீர்வளர்சீர் சத்யஞான மகாதேவ தேசிக பரமாச்சார்ய சுவாமிகள், சிவநெறிச்செம்மல் பிச்சை குருக்கள், சிவபுரம் கல்வி அறக்கட்டளை நிறுவனர் ஏ.வி.சுவாமிநாத சிவாச்சாரியார், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவில் சிவாச்சாரியார் செல்வசுப்பிரமணிய குருக்கள், எம்.எல்.ஏக்கள் மயிலை த.வேலு, ஜெ.கருணாநிதி, அறநிலையத்துறை சிறப்பு பணி அலுவலர் ஜெ.குமரகுருபரன், ஆணையர் முரளீதரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News