வழிபாடு

பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் நிற்பதை படத்தில் காணலாம்.

திருவண்ணாமலையில் குருபவுர்ணமி: லட்சக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய கிரிவலம்

Published On 2023-07-03 04:11 GMT   |   Update On 2023-07-03 04:11 GMT
  • அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
  • சாமி தரிசனம் செய்ய சுமார் 5 மணி நேரத்திற்கு மேலானதாக கூறப்படுகிறது.

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. மேலும் திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

இந்த மாதத்திற்கான பவுர்ணமி குரு பவுர்ணமி என அழைக்கப்படுகிறது. நேற்று இரவு 7.42 மணியளவில் பவுர்ணமி தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதாலும், குரு பவுர்ணமி என்பதாலும் கிரிவலம் செல்ல காலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்த வண்ணம் இருந்தனர்.

இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் கோவிலில் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். சாமி தரிசனம் செய்ய சுமார் 5 மணி நேரத்திற்கு மேலானதாக கூறப்படுகிறது. மேலும் சில பக்தர்கள் பகலில் கிரிவலம் சென்றனர். காலையில் இருந்தே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

இதனால் பகலில் கிரிவலம் மற்றும் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக வரிசையில் நின்ற பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

பவுர்ணமி கிரிவலம் இரவில் தொடங்கியதால் மாலை வரை கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. மாலைக்கு மேல் கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. நள்ளிரவையும் தாண்டி விடிய விடிய லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்ற வண்ணம் உள்ளனர்.

முன்னதாக அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் எதிரில் உள்ள 16 கால் மண்டபத்தின் எதிரில் ஏராளமான பக்தர்கள் கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.

அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் தடுக்க தீயணைப்புத் துறையினர் தீ தடுப்பு தண்ணீர் வாகனத்துடன் தயார் நிலையில் இருந்தனர்.

திருவண்ணாமலை நகரில் உள்ள முக்கிய இணைப்பு சாலை பகுதிகளில் வாகனங்கள் செல்ல முடியாதபடி தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது.

பவுர்ணமி இன்று (திங்கட்கிழமை) மாலை 5.49 மணி வரை உள்ளது. இதனால் பவுர்ணமி கிரிவலம் இன்று மாலை வரை நடைபெறுகிறது.

போலீசார் கிரிவலப்பாதையில் ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதுமட்டுமின்றி தொடர்ந்து ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

குரு பவுர்ணமி கிரிவலத்தால் திருவண்ணாமலை நகரமே விழாக்கோலத்துடன் காணப்படுகிறது.

Tags:    

Similar News