தீவினைகள் அகற்றும் நாமகிரி தாயார்
- நரசிம்மர் சன்னிதிக்கு நேர் எதிரே இரண்டு கைகளை கூப்பிய நிலையில் ஆஞ்சநேயர் தனிச் சன்னிதியில் வீற்றிருக்கிறார்.
- நாமகிரி தாயார் மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி நரசிம்மரை தரிசித்தவாறு தவம் செய்த கோலத்தில் காணப்படுகிறார்.
நாமக்கல் நகரில் குன்றின்மீது அமைந்துள்ளது. நரசிம்மர் குடைவரைக் கோவில். இக்கோவிலில் மூலவராக நரசிம்மரும், நாமகிரி தாயாரும் உள்ளனர். கட்டிடக் கலைக்கு பெயர்பெற்ற இந்த கோவில், 8-ம் நூற்றாண்டில் பாண்டிய மன்னரால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
திருக்கோவிலின் மூலஸ்தானமும், அர்த்தமண்டபமும் குகைக்குள்ளேயே அமைந்துள்ளது சிறப்பாகும்.
நரசிம்மர், கர்ப்பக்கிரகத்தில் ஒரு காலை மடக்கி, மற்றொரு காலை தரையில் ஊன்றி நான்கு திருக்கரங்களுடன் காட்சி அளிக்கிறார். ஒரு கை ஊதா நிறத்துடன் காணப்படுகிறது. இது இரணிய கசிபுவின் ரத்த சாயல் என்று கூறப்படுகிறது. இங்கு லட்சுமி தேவி வழக்கம் போல நரசிம்மரின் மடியில் இல்லாமல், சுவாமியின் இதயத்தில் இருக்கிறார். சுவாமி உடன் சனகர், சனாதனர், சூரியர், சந்திரர் ஆகியோர் சாமரம் வீச, சிவபெருமானும், பிரம்ம தேவரும் சுவாமியை வணங்கும் கோலத்தில் உள்ளனர்.
நரசிம்மர் சன்னிதிக்கு நேர் எதிரே இரண்டு கைகளை கூப்பிய நிலையில் ஆஞ்சநேயர் தனிச் சன்னிதியில் வீற்றிருக்கிறார். பிரமாண்டமாக காட்சி அளிக்கும் ஆஞ்சநேயர் சிலைக்கு மேற்கூரை கிடையாது. இந்த ஆஞ்சநேயர் மிகவும் சக்தி வாய்ந்தவர் என இங்கு வரும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.
நாமகிரி தாயார் மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி நரசிம்மரை தரிசித்தவாறு தவம் செய்த கோலத்தில் காணப்படுகிறார். தாயார், கவலைகளைப் போக்கும் கருணை கண்களுடன் அழகுற காட்சி அளிக்கிறார். இங்குள்ள நரசிம்ம தீர்த்தத்தில் நீராடி, தாயாரை பூஜித்தால் சகல செல்வங்களும் வந்துசேரும், தீவினைகள் அகலும், ஞானம், அறிவு கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் ஹஸ்த நட்சத்திரத்தில் நரசிம்மர், ரங்கநாதர், அனுமன் ஆகியோருக்கு தேர்த் திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது. மார்கழி மாதம் வரும் அனுமன் ஜெயந்தி விழாவும் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது.