வழிபாடு

திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்த காட்சி.

திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்

Published On 2023-05-30 05:28 GMT   |   Update On 2023-05-30 05:28 GMT
  • நாளை சனீஸ்வரர் பகவான் தங்க காக வாகனத்தில் கோபுர வீதியுலா நடக்கிறது.
  • 1-ந்தேதி தெப்ப உற்சவம் நடைபெறவுள்ளது.

காரைக்கால் அருகே உள்ள திருநள்ளாறில் உலகப் புகழ்மிக்க சனீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சனிக்கிழமைதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். இத்தகைய சிறப்புவாய்ந்த சனீஸ்வரர் கோவில் பிரமோற்சவ விழா கடந்த 16-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றாக 23-ந் தேதி இரவு அடியார்கள் நால்வர் புஷ்பப் பல்லக்கில் வீதியுலா செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. 28-ந் தேதி பஞ்ச மூர்த்திகள் வாகன ரூடராய் சகோதர வீதி உலா நடைபெற்றது. விழாவின் மிக முக்கிய நிகழ்ச்சியாக இன்று காலை 5.30 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. 5 தேர்களில் முதல் தேர் சொர்ண கணபதி, 2-வது வள்ளி சமேத சுப்பிரமணியர், 3-வது தேர் செண்பக தியாகராஜர், 4-வது தேர் நீலோத்பலாம்பாள், 5-வது தேரில் சண்டிகேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் இருந்தனர்.

நிகழ்ச்சியில், புதுச்சேரி குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய்.ஜெ. சரவணன் குமார், திருநள்ளாறு தொகுதி எம்.எல்.ஏ., பி.ஆர்.சிவா , மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன், கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், கோவில் கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.

நாளை (31-ந் தேதி) சனீஸ்வரர் பகவான் தங்க காக வாகனத்தில் கோபுர வீதியுலாவும், ஜூன் 1-ந் தேதி தெப்ப உற்சவமும் நடைபெறவுள்ளது. விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் தலைமையில், ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News