வழிபாடு

கந்தசஷ்டி விழாவையொட்டி பழனி முருகன் கோவிலில் நாளை பூஜை நேரம் மாற்றம்

Published On 2022-10-29 12:27 IST   |   Update On 2022-10-29 12:27:00 IST
  • கந்தசஷ்டி விழாவில் சூரசம்ஹார நிகழ்ச்சி நாளை நடக்கிறது.
  • நாளை தங்கரத புறப்பாடு நடைபெறாது.

உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான கந்தசஷ்டி விழா கடந்த 25-ந்தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. விழாவையொட்டி பூஜை நேர மாற்றம் செய்யப்படுகிறது. இதுகுறித்து பழனி முருகன் கோவில் நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

கந்தசஷ்டி விழாவில் சூரசம்ஹார நிகழ்ச்சி நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி அன்றைய தினம் அதிகாலை 4 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4.30 மணிக்கு விளாபூஜை நடைபெறுகிறது. மதியம் 12 மணிக்கு உச்சிக்கால பூஜை, 1.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடக்கிறது. அதன்பின்னர் 2.45 மணிக்கு வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து கோவில் நடை சாத்தப்படும்.

எனவே நாளை காலை 11 மணிக்கு பின் அனைத்து கட்டண சீட்டுகள் வழங்குவது நிறுத்தப்படும். அதேபோல் படிப்பாதையில் 11.30 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். மேலும் 10 மணி முதல் ரோப்கார், மின்இழுவை ரெயில் ஆகிய சேவைகளும் நிறுத்தப்படும். 4 கிரிவீதிகளிலும் சூரசம்ஹார நிகழ்ச்சி முடிந்து சின்னக்குமாரர் மலைக்கோவிலுக்கு சென்று சம்ரோஷன பூஜை நடைபெறும். அதேபோல் அன்றைய தினம் தங்கரத புறப்பாடு நடைபெறாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News