வழிபாடு

2026 மாசி மாத ராசிபலன் - சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்

Published On 2026-02-12 14:45 IST   |   Update On 2026-02-12 14:46:00 IST
  • பொறுப்பான கன்னி ராசியினரே... அனுபவ அறிவால் வெற்றி பெறும் சாதகமான மாதம்.
  • துலாம் ராசியின் அதிபதி சுக்ரன் 6ம் இடத்தில் உச்சம் பெற்று சனியுடன் சேர்க்கை பெறுகிறார்.

எதிலும் முதன்மையான சிம்ம ராசியினரே!

பிறக்கப் போகும் மாசி மாதத்தில் ராசி அதிபதி சூரியன் சம சப்தமஸ்தானத்தில் உள்ள ராகுவுடன் இணைந்து கிரகண தோஷம் ஏற்பட போகிறது. இது சற்று சுமாரான மாதம் என்பதால் செயல்பாடுகளில் கட்டுப்பாடுகள் தேவை. இந்த காலகட்டத்தில் ஏதேனும் போட்டி பந்தயங்களில் கலந்து கொண்டால் வெற்றி நிச்சயம். ராகு கேது மற்றும் கிரகண தோஷ தாக்கத்தை இறை வழிபாட்டால் குறைக்க முடியும். பணவரவு சந்தோஷத்தை ஏற்படுத்தும். உங்கள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். உடல் நிலை சீராகும். ஸ்திர சொத்துக்கள் சேரும். சொத்துக்களின் மதிப்பு உயரும்.

குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புத்திரர்கள் வழியில் மனமகிழும் சம்பவங்கள் நடைபெறும். குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வம்பு, வழக்குகள் சாதகமாகும். பெயர், புகழ் அந்தஸ்து உயரும். கவுரவப் பதவிகள், குல தெய்வ அனுகிரகம் கிடைக்கும்.

அவசரத் தேவைக்கு அருகில் உள்ள நகைக் கடையில் அடமானம் வைக்காமல் வங்கியை பயன்படுத்த வேண்டும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். பேச்சுகளில் பொறுமை அவசியம். வாழ்க்கையை பாதிக்கும் முக்கிய முடிவுகளைத் தவிர்க்கவும். விழிப்புடன் செயல்பட வேண்டும். முன் கோபத்தை குறைத்துக் கொண்டு பொறுமையாக இருக்கவும். முறையான திட்டமிடுதலும், நேர்மையும், இறை நம்பிக்கையும் இருந்தால் எத்தகைய கிரகப் பெயர்ச்சியாலும் உங்களை அசைக்க முடியாது.

எனவே நம்பிக்கை மிக முக்கியம். கோட்ச்சாரம் உங்களுக்கு சாதகமாக இல்லாத காரணத்தால் எந்த விசயத்திற்கும் கோர்ட், கேஸ், போலீஸ் ஸ்டேசன் செல்லாமல் பேசி சமரசமாக பிரச்சனைய முடிப்பது புத்திசாலித்தனம். அரசுக்கு விரோதமான செயல்களில் ஈடுபட்டு அரசுக்கு அபராதம் கட்டும் சூழல் ஏற்படும் என்பதால் கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வியில் ஏற்பட்ட தடைகள் தாமதங்கள் அகலும். புதிய அரசாங்க ஒப்பந்தங்கள் கிடைக்கும். சகோதர உறவுகளால் மன சஞ்சலங்கள் உண்டாகும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகமாகும். சுய ஜாதக தசா புக்தி சாதகம் அறிந்து செயல்பட வேண்டும்.

சிலருக்கு காதல் கலப்பு திருமணம் நடக்கலாம். சிற்றின்ப நாட்டம் அதிகரிக்கும். வேற்று மொழி கற்பதில் ஆர்வம் உண்டாகும். ராகு தசா மற்றும் கேது தசா நடப்பவர்கள் கண்டிப்பாக சுய ஜாதகத்தை பரிசீலிக்க வேண்டும். ஒரு சிலருக்கு ஜோதிடம், மாந்தரீகம் கற்க ஆர்வம் மிகும். தியானம் பழகி மனதை கட்டுப்படுத்த முயல்வீர்கள்.

பொருளாதாரம்

தன வரவுகளில் இருந்துவந்த நெருக்கடிகள் மறையும். குடும்பத் தேவைகள் நிறைவேறும். விலகிச் சென்ற உறவுகள் விரும்பி வருவார்கள். பொருளாதார சிக்கல்கள் குறையும். நடக்குமா? நடக்காதா என கேள்விக்குறியாக இருந்த அனைத்து நிகழ்வுகளும் மனதிற்கு இனிய முறையில் திருப்பு முனையாக மாறும். எதிர்பார்த்த வங்கிக் கடன்கள் கிடைக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். பணம் பல வழிகளில் வந்து பையை நிரப்பும். சேமிப்புகள், முதலீடுகள் அதிகரிக்கும். கையில் பணம் தாராளமாக புழங்கும். வரவுக்கு மீறிய சுப செலவும் இருக்கும். குறுக்கு வழி வருமானத்திற்கு ஆசைப்பட்டு தவறான போன் தகவலை நம்பி அக்கவுண்ட் நம்பரை யாருக்கும் தரக்கூடாது.

உத்தியோகஸ்தர்கள்

உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சிறிய பதவி உயர்வுகள் கிடைக்க வாய்ப்புள்ளது. கண் துடைப்பிற்கான பதவி உயர்வே தவிர பிரயோஜனம் எதுவும் இருக்காது. வேலைப் பளு அதிகமாக இருக்கும். வேலை பார்த்த இடத்தில் ஏற்பட்ட வீண் பழிகள் அகலும். உங்களை தவறாக வழி நடத்திய கெட்ட நண்பர்கள் விட்டு விலகுவார்கள். ஆரோக்கிய குறைபாடுகள் சீராகும். வேலையின்மையால் பிறரின் வெறுப்பிற்கு ஆளாகியவர்களுக்கு கவுரமான வேலை கிடைக்கும். உழைப்பிற்கேற்ற ஊதியம் இருக்காது. இரண்டு நபர்களுக்கான வேலை செய்து ஒரு நபரின் சம்பளத்தை பெற நேரும். பனிச்சுமை காரணமாக விருப்ப ஓய்வு பெற வாய்ப்பு உள்ளது. சிலர் ஆன்லைனில் வேலை பார்த்துக் கொடுத்த பிறகு உரிய சம்பளம் கிடைக்காமல் ஏமாற்றம் அடைவார்கள்.

பெண்கள்

பெண்களுக்கு உடல் உபாதைகள் அகலும். பலருக்கு வாழ்வில் எதிர்பாராத நல்ல சம்பவங்களும் திருப்பு முனையும் உண்டாகும். கணவனின் அன்பு, அனுசரனைக் காக ஏங்கிய சிம்ம ராசிப் பெண்களுக்கு நல்ல காலம் பிறந்து விட்டது. கூட்டுக் குடும்பத்தில் இருக்கும் பெண்களுக்கு மாமியார், நாத்தனார் டார்ச்சர் குறையும். பண வரவில் இருந்த தடை தாமதம் விலகும். பொருளாதார முன்னேற்றம் மகிழ்ச்சியைத் தரும். ஒரு பெரிய அதிர்ஷ்ட தொகை கிடைக்கும். கஷ்டத்தையும், நஷ்டத்தையும் தந்த உடன் பிறந்த சகோதரரின் நடத்தையில் சிறு மாற்றம் உண்டாகும். விற்க முடியாமல் இழுபறியாக கிடந்த பூர்வீகச் சொத்துக்கள் நல்ல விலைக்கு விற்கும்.

சூரிய கிரகணம்

மாசி 5 (17.2.2026)ல் நடக்கப் போகும் சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது. துக்கங்களும் துயரங்களும் நீங்கும் இதுவரை நிலவிய மன சஞ்சலம், நோய் தாக்கம் குருவின் பார்வையில் கட்டுப்படும். எனக்கு எல்லாம் தெரியும் என்று சிந்திக்காமல் செயல்பட்டவர்கள் சற்று கவனத்துடன் செயல்பட துவங்குவார்கள். வேலைப்பளு குறைந்து வருமானம் அதிகரிக்கும். இளைய மனைவியால் ஏற்பட்ட பிரச்சனைகள் குறையும். தவறான போனை நம்பி சேமிப்பில் உள்ள பணத்தை இழக்கும் வாய்ப்பு இருப்பதால் கவனம் தேவை. சிலர் அதிர்ஷ்டத்தின் மேல் நம்பிக்கை வைத்து எந்திரம், மந்திரம், தந்திரம் என அலைந்து மிகுதியான பொருள் விரயத்தை விலை கொடுத்து வாங்குவார்கள். சிலர் செயற்கை கருத்தரிப்பு மூலம் புத்திர பாக்கியம் அடைவார்கள்.

சந்திர கிரகணம்

மாசி 19ம் தேதி (3.3.2026) அன்று சந்திர கிரகணம் நடக்கப் போகிறது. இது பகுதி சந்திர கிரகணமாக இந்தியாவில் சில குறிப்பிட்ட பகுதிகளில் தெரியும். சிம்ம ராசியில் சந்திர கிரகணம் நடக்கப் போகிறது. விரயாதிபதி சந்திரன் கேதுவுடன் இணைவதால் கடன் நோய் எதிரி சார்ந்த பாதிப்புகள் வரலாம். தவிர்க்க முடியாத கடுமையான உடல் பாதிப்பு உள்ளவர்கள் அன்று வைத்தியம் செய்யலாம். சுய வைத்தியம். சுயமாக மருந்து எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். கடன் வாங்குவது, கடன் கொடுப்பது, பெரிய பணப் பரிவர்த்தனைகளை தவிர்ப்பது நல்லது. எடுக்கும் காரியங்கள் முயற்சிகளில் தடை தாமதங்கள் இருக்கும். சுயக் கட்டுப்பாடு மிக அவசியம். திட்டமிட்டு செயல்பட வேண்டும். மனதின் எண்ண ஓட்டங்களை கட்டுப்படுத்துவது நல்லது. மன வளர்ச்சியற்றவர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவுவது நல்லது.

பரிகாரம்

மாசி மாதம் சிவராத்திரி அன்று விரதம் இருந்து சிவ வழிபாடு செய்வதால் பொருளாதார தேவைகள் நிறைவு பெறும். சிந்தனைகளில் தெளிவுகள் ஏற்படும்.

பொறுப்பான கன்னி ராசியினரே!

அனுபவ அறிவால் வெற்றி பெறும் சாதகமான மாதம். முக்கியமான இடங்களுக்கு குருவின் பார்வை சாதகமாக உள்ளதால் எதைப்பற்றியும் கவலைப்படத் தேவையில்லை. பொறுப்புடன் செயல்படுவீர்கள். உங்கள் பேச்சிலும், செயலிலும் அறிவு மேம்படும். உங்கள் சொல்வாக்கும், கவுரவமும் உயரும்.கடந்த கால சங்கடங்கள் விலகி முன்னேற்ற பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். இதுவரை சந்தித்த பிரச்சனைகள் பனி போல் விலகும். முடங்கி கிடந்த தடைபட்ட அனைத்து முயற்சிகளும் வெற்றி வாய்ப்பை தரும் இனிய ஆண்டாக மாறும். இழந்த அனைத்து இன்பங்களும் உங்களைத் தேடி வரப்போகிறது.

தொட்டது துளிர் விடும். பட்டது பூக்கும். திட்டமிட்ட காரியங்களை மெல்ல மெல்ல வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். குழந்தைகள் உங்கள் சொற்படி கேட்பார்கள். வீடு கலகலப்பாக இருக்கும். குடும்பத்தில் மனம் மகிழும்படியான நிகழ்ச்சி நடக்கும். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வதன் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வெளிநாட்டு வேலை அல்லது தொழில் மூலம் பணவரத்து கூடும். பிரிந்த உறவுகள் மீண்டும் இணைவார்கள். பூர்வீகச் சொத்து, தாய்வழிச் சொத்து போன்றவற்றில் பாகப் பிரிவினை நடக்கும். பூர்வீகச் சொத்துக்கள் கைக்கு வந்து சேரும். சிற்றின்ப நாட்டம் அதிகரிக்கும். வேற்று மொழி கற்பதில் ஆர்வம் உண்டாகும். தொழில் ஒப்பந்தங்களை நன்றாக படித்த பின்பு கையெழுத்திடவும்.

தாயின் அன்பும் ஆசீர்வாதமும் உங்களை மகிழ்விக்கும். சொந்த வீடு,வாகன கனவு நிறைவேறும். ஜாமீன் கையெழுத்திடுவதை தவிர்க்க வேண்டும். அனைத்து விதமான ஏற்றத் தாழ்வுகளையும் சமாளிக்கும் தைரியம், மனப்பக்குவம் உண்டாகும் பொறுப்புடன் செயல்படுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினை நீங்கும். மன உளைச்சல் மன அழுத்தங்கள் நீங்கும். உயர்கல்வி படிப்பவர்களுக்கு எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். விருந்து விசேஷங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு உண்டு. கண்டக சனி பகவனால் திருமணம் தடைபடாது. பொருத்தமான ஜாதகம் வந்து மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும். முதல் திருமணத்தில் தோல்வியை சந்தித்தவர்களுக்கு அடுத்த இல்வாழ்க்கை நல்வாழ்க்கையாக அமையும். சிலருக்கு வெளியூர், வெளி மாநிலப் புண்ணியத் தலங்களுக்குச் சென்று வரும் வாய்ப்பு உள்ளது.

பொருளாதாரம்

நீண்ட நாட்களாக வராமல் இருந்த வரா கடன்கள் இனி கொஞ்ச கொஞ்சமாக வசூலாகும். பணவரத்து வழக்கத்தை விட அதிகரிக்கும். ஆனால் செலவும் அதற்கு ஏற்றார்போல் இருக்கும். சிலருக்கு பெரிய தொகை கடனாக கிடைக்கும். பழைய கடன்களை அடைக்கும் முயற்சியில் இறங்குவீர்கள். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். வசிக்கும் வீட்டை விரிவு செய்வீர்கள். ஆனால், அரசாங்க வகையில் எதிர்பார்க்கும் ஆவணங்கள் கிடைப்பதில் தடை, தாமதம் ஏற்படக்கூடும். முன்பு வாங்கிப் போட்ட நிலத்தின் மதிப்பு உயரும்.

உத்தியோகஸ்தர்கள்

தன்னம்பிக்கையால் காரியம் சாதிக்கும் மாதம். உங்களின் புகழ், அந்தஸ்தை உயர்த்த அதிகம் உழைக்க நேரும். விரும்பிய வேலை கிடைக்கும். வெளியூர், வெளி மாநிலம், வெளிநாட்டிற்கு இடம் பெயர நேரும். பேச்சுத் திறமையால் சாதகமான பலனை அடைவார்கள். அரசுப் பணியாளர்களின் முக்கிய தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். சிலர் வேலையில் இருந்து கொண்டு ஓய்வு நேரத்தில் சிறு தொழில் மூலம் வருமானம் ஈட்டலாம். வேலைச் சுமை அதிகரிக்கும். அலுவலகத்தில் பயனற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது.

பெண்கள்

புதிய பெண் தொழில் அதிபர்கள் அதிகம் உருவாகுவார்கள். ஏற்கனவே சுய தொழிலில் இருக்கும் பெண்கள் தொழிலை பிவிருத்தி செய்வார்கள். புதிய தொழில் நண்பர்கள் கிடைப்பார்கள். தொழில் கடன் வழங்க நிதி நிறுவனங்கள் முன்வரும். பல பெண்கள் உபரி லாபத்தால் நீண்ட கால கடன் பிரச்சனையிலிருந்து விடுபடுவார்கள். கணவர், புகுந்த, பிறந்த வீட்டினரின் ஆதரவு மகிழ்ச்சி தரும். இதுவரை சரியில்லாத வேலை, குறைவான சம்பளத்தில் இருந்தவர்களுக்கு நல்ல கம்பெனியில் அதிக சம்பளத்தில் வேலை கிடைக்கும். தீராத நோயால் அவதிப்பட்டவர்களுக்கு நோய் கட்டுப்படும்.

சூரிய கிரகணம்

மாசி 5 (17.2.2026)ல் நடக்கப் போகும் சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது. கன்னி ராசிக்கு 6ம்மிடமான ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தில் கிரகணம் ஏற்படுவதால் கையில் பணம் புரள்வதால் கவர்ச்சியான விளம்பரத்தை நம்பி புதிய தொழிலில் இறங்க வேண்டாம். சற்று ஏற்ற இறக்கமான பலன்களே உண்டாகும். குடும்பத்தில் குழப்பம் நீங்கி மன நிறைவு, நிம்மதி அதிகரிக்கும். பூர்வீகத்தை விட்டு வெளியூர், வெளிநாட்டில் வாழ்பவர்களுக்கு வாழ்க்கை வசந்தமாகும். வழக்குகள் சாதகமாகும் அல்லது தள்ளுபடியாகும்.

குரு உபதேசம், ஜோதிடம், மருத்துவம், யோகா, தியானம் போன்ற துறைகளில் ஆர்வம் அதிகரிக்கும். நண்பர்கள், தொழில் கூட்டாளிகள், வாடிக்கையாளர்களிடம் அனுசரித்துச் செல்லவும். அசுப கிரகங்கள் மறைவு ஸ்தானத்திற்கு செல்வது நல்லது. வெளிநாட்டு குடியுரிமை, விசா சார்ந்த பிரச்சனைகள் அகலும். ராகு, கேதுக்களின் நிலைப்பாடு சற்று சுமாராக உள்ளது. தன்னம்பிக்கையுடன் உரிய வழிபாட்டு முறைகளை கடைபிடித்தால் தெய்வத்தின் அருட்கடாட்சம் கிடைக்கும்.

சந்திர கிரகணம்

மாசி 19ம் தேதி (3.3.2026) அன்று சந்திர கிரகணம் நடக்கப் போகிறது. இது பகுதி சந்திர கிரகணமாக இந்தியாவில் சில குறிப்பிட்ட பகுதிகளில் தெரியும். ராசிக்கு 12ம் மிடமான அயன சயன விரய ஸ்தானத்தில் லாப ஸ்தான அதிபதி சந்திரனுடன் கேது இணைந்து சந்திர கிரகண தோஷம் ஏற்படுகிறது. தூக்கம் சற்று குறைவுபடும். மனசஞ்சலம் பய உணர்வும் இருக்கும். குடும்ப உறவுகளுக்காக சூழ்நிலை கைதியாக இருப்பீர்கள். அதிர்ஷ்டம் சார்ந்த செயல்களில் ஆதாயம் குறைவுபடும். பங்குச்சந்தை ரேஸ் லாட்டரி சீட்டு போன்றவற்றை தவிர்க்க வேண்டும். கை, கால் மூட்டு வலி, பாதம், இடது கண் போன்றவற்றில் பாதிப்பு இருக்கும். கண், மூட்டு அறுவை சிகிச்சைகளை ஒத்தி வைக்கவும். ஆரோக்கியத்தை அதிகரிக்க கூடிய உணவு சாப்பிடுவது நல்லது. கண் அறுவை சிகிச்சை செய்தவர்களின் மருத்துவ சிகிச்சைக்கு உதவ வேண்டும். உயிர் காக்க தேவையான நிலையில் அறுவை சிகிச்சை செய்யலாம். மற்றவர்கள் ஒரு நாள் கழித்து அறுவை சிகிச்சை செய்யலாம். அறுவை சிகிச்சை அவசியம் செய்ய வேண்டிய கட்டாயம் இருப்பவர்கள் குல இஷ்ட தெய்வத்தை வழிபட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளலாம்.

பரிகாரம்

மாசி மாதம் சிவராத்திரி அன்று விரதம் இருந்து சிவ வழிபாடு செய்வதால் கண்டகச் சனியின் தாக்கம் குறையும்.அனைத்து நன்மைகளையும் அடைய முடியும்.

துலாம் ராசி நேயர்களே!

துலாம் ராசியின் அதிபதி சுக்ரன் 6ம் இடத்தில் உச்சம் பெற்று சனியுடன் சேர்க்கை பெறுகிறார். நீண்ட கால திட்டங்களும் லட்சியங்களும் நிறைவேறும். சிறப்பான எதிர்காலத்திற்கான அஸ்திவாரமாக அமையும். கவுரவப் பதவிகள் தேடி வரும். மனதிற்கு மகிழ்ச்சி தரும் இனிய சம்பவங்கள் நடைபெறும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். உள்நாட்டு பணம், வெளிநாட்டு பணம் உங்கள் கையில் தாராளமாக புழங்கும். லௌகீக உலகில் அனுபவிக்க வேண்டிய அனைத்து இன்பங்களும் வந்து சேரும். பங்குதாரர்களிடம் இருந்து வந்த பிரச்சனைகள் அகலும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் உண்டாகும்.

சிலருக்கு புதிய நான்கு சக்ர வாகனங்கள் சொத்து வாங்கும் யோகம் உண்டாகும். ஒப்பந்த அடிப்படை பணிக்கு வெளியூர் சென்றவர்கள் பூர்வீகம் திரும்புவார்கள். கருத்து வேறுபாட்டால் முதியோர் இல்லம் சென்ற தாய், தந்தை இல்லம் திரும்புவார்கள். பெண்களுக்கு கணவர் மற்றும் புகுந்த வீட்டினரால் ஏற்பட்ட இன்னல்கள் குறையத் துவங்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. திருமண முயற்சி பலிதமாகும். சிலருக்கு காதல் திருமணம் நடக்கும். தந்தை வழி சுற்றத்துடன் இருந்து வந்த கருத்து வேறுபாடு அகலும். அனைத்து பிரிவினருக்கும் அவரவர் தேவைக்கு ஏற்ற அரசின் ஆதரவு கிடைக்கும்.

சில சிக்கலான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். புகழ் அந்தஸ்து கவுரவம் கிடைக்கும். சிறிய முயற்சியில் பெரிய தடைகள் தகறும். பூர்வீகம் சொத்து தொடர்பான மன சஞ்சலம் தீரும் காலம் வந்து விட்டது. கவுரவப் பதவிகள் கிடைக்கும். புத்திர பிராப்தம் சித்திக்கும். அதிர்ஷ்ட பொருள், பணம், நகை, உபரி வருமானம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. சேமிப்புகள் அதிகரிக்கும். குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க ஆசை வரும். செளக்கியமும், சுகமும், நோய் நிவர்த்தியும் உண்டாகும். முறையான உடல் ஆரோக்கியத்தை காக்க முழு உடல் பரிசோதனை அவசியம். மனதில் நிரம்பி வழிந்த துக்கங்கள் விலகும். வீடு மாற்றம், ஊர் மாற்றம் போன்ற நல்ல விதமான மாற்றங்கள் ஏற்படும். தலைமைப்பதவி தேடி வரும். உயர் கல்வியில் மேன்மை உண்டாகும். கல்லூரி அரியர்ஸ் பாடத்தை எழுதி முடிக்க ஏற்ற காலம். சுருக்கமாக அனைத்து சங்கடங்களும் விலகி நன்மைகள் அதிகரிக்கும்.

பொருளாதாரம்

குறைந்த வட்டிக்கு நீண்ட காலத் தவணையில் கடன் கிடைக்கும். பிறருக்கு பரிதாபப்பட்டு ஜாமீன் போடக்கூடாது. எதிர்பாராத சில விரயங்கள் ஏற்பட்டாலும் குருவால் காப்பாற்றப்படுவீர்கள். எதிர்பார்த்ததை விட லாபம் பணவரவு கூடுதலாகக் கிடைக்கும். பாக்கிய குருவால் அதிர்ஷ்டம் அரவணைக்கும். எதிர்பாராத அதிர்ஷ்டமான யோகங்கள் உண்டாகலாம். பங்குச் சந்தை ஆதாயம் அதிர்ஷ்ட பொருள் வரவு மனதை மகிழ்விக்கும். தாராள தன வரவால் குடும்பத்திற்கு மகிழ்ச்சி நிலவும். திருமணம், குழந்தை பேறு, வீடு, வாகன யோகம், பொன், பொருள் சேர்க்கை என பல்வேறு பாக்கிய பலன்கள் நடக்கும்.பட்ட கடனும், நோயும் தீரும் காலம் வந்துவிட்டது.

உத்தியோகஸ்தர்கள்

முன்னோர்களின் நல்லாசிகள் புண்ணிய பலனாக கவசமாக காத்து நிற்கும் நேரம். மனதில் தெளிவுடன். செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். கூடுதல் கவனத்துடன் செயல்பட்டால் எதிர்காலம் வளமாக மாறும். மறைமுக எதிர்ப்புகளையும் சூழ்ச்சிகளையும் போட்டிகளையும் வெற்றி கொள்வீர்கள். சிலருக்கு தடைப்பட்ட பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற பலன்கள் கிடைக்கும். அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கும் 'தனி வருமானம் 'மகிழ்ச்சியை தரும். நிலுவையில் உள்ள சம்பள பாக்கிகள் கிடைக்கும். வெளிநாடு தொடர்பான வேலை வாய்ப்புகளில் சாதகமான செய்திகள் கிடைக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் மிகச் சிறப்பாகச் செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். அரசு வேலை, வெளிநாட்டு வேலை முயற்சி வெற்றி தரும்.

பெண்கள்

சாதிக்கும் எண்ணம் மேலோங்கும். புண்ணிய பலன்கள் நடக்கும். மன வலிமை அதிகரிக்கும். பிள்ளைகளின் திருமணத்திற்கு நாள் குறிக்கலாம். வீடு கிரக பிரவேசத்திற்கு தயாராகுவீர்கள். சுப செலவிற்கு எதிர்பார்த்த இடத்திலிருந்து பண உதவி கிடைக்கும். கடனால் கவலை, கணவன் மனைவி பிரிவினை அல்லது வழக்கு, பிரச்சனைகள் முற்றிலும் நீங்கும்.சிலருக்கு புதிய மனை வீடு வாங்கும் வாய்ப்பு கிடைக்கும். பெண்கள், அழகு, ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழ்வார்கள்.

சூரிய கிரகணம்

மாசி 5 (17.2.2026)ல் நடக்கப் போகும் சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது. துலாம் ராசிக்கு ஐந்தாம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரிய கிரகணம் நடக்கப்போகிறது. பூர்வீகம் குலதெய்வம் குழந்தை அதிர்ஷ்டம் காதல் சார்ந்த விஷயங்களில் ஆர்வத்தை குறைப்பது நல்லது. ஆன்மீக குருமார்களின் ஆசீர்வாதம் பெறுவது நன்னடத்தையுடன் நடந்து கொள்வது சிந்தித்து செயல்படுவது உங்களை உயர்வான இடத்திற்கு அழைத்துச் செல்லும். சுய முடிவு எடுப்பதில் தடுமாற்றம் உண்டாகும். கொடுக்கல் வாங்கல் மற்றும் முக்கிய பேச்சுவார்த்தைகளில் நிதானம் தேவை.

பேராசையின் காரணமாக தவறான செயலில் ஈடுபடாத வரை ராகு கேதுக்களால் பெரிய பாதிப்பு ஏற்படாது. வட்டி தொழில், சீட்டுக் கம்பெனி, ஏலச்சீட்டு, பைனான்ஸ் போன்று பெரிய அளவில் பணம் புரளும் தொழிலில் உள்ளவர்களுக்கு கொடுத்த பணம் வசூலாகுவதில் தடை, முறையற்ற ஆவணங்களால் வம்பு, வழக்கு, பஞ்சாயத்து ஏற்பட வாய்ப்புள்ளது. புதிய எதிர்பாலின நட்பால் சில அசவுகரியம் உண்டாகலாம். எளிதில் ஜீரணமாகக் கூடிய சத்தான உணவை சாப்பிட வேண்டும்.

சந்திர கிரகணம்

மாசி 19ம் தேதி (3.3.2026) அன்று சந்திர கிரகணம் நடக்கப் போகிறது. இது பகுதி சந்திர கிரகணமாக இந்தியாவில் சில குறிப்பிட்ட பகுதிகளில் தெரியும். துலாம் ராசிக்கு 11ம்மிடமான லாப ஸ்தானத்தில் சந்திர கிரகணம் நடக்கிறது. தொழில் ஸ்தான அதிபதி சந்திரன் 11ம் இடமான லாப ஸ்தானத்தில் கிரகணம் அடைகிறார். அதிர்ஷ்டம் தொடர்பான செயல்களில் ஆர்வத்தை குறைக்க வேண்டும். குலதெய்வ வழிபாடு கோடி குற்றங்களை நிவர்த்தி செய்யும்.

பூர்வீகச் சொத்து தொடர்பான பேச்சுவார்த்தைகளை தவிர்க்கவும். குழந்தைகளை உங்களின் சொந்தப் பொறுப்பில் கண்காணிக்க வேண்டும். காதல் விவகாரங்கள் அவமானத்தை ஏற்படுத்தலாம். கால்நடை வளர்ப்பவர்கள், விவசாயிகள், பண்ணையாளர்கள் ஆதாயமான பலன் பெறுவார்கள். எளிதில் ஜீரணமாக கூடிய உணவுகளை சாப்பிட்டு ஆரோக்கியத்தை மேம்படுத்துதல் நல்லது. அன்று போரிங் போடுதல் கிணறு வெட்டுதல் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். தாயையும் தாய்வயதில் உள்ளவர்களை மதிப்பதும் ஆசீர்வாதம் பெறுவதும் இன்னல்களை நீக்கும்.

பரிகாரம்

மாசி மாதம் சிவராத்திரி அன்று விரதம் இருந்து சிவ வழிபாடு செய்வதால் தளர்வில்லாத வளர்ச்சி உண்டாகும். மன உளைச்சல் நீங்கி நிம்மதி கிடைக்கும்.

விருச்சிக ராசி நேயர்களே!

மாத ஆரம்பத்தில் ராசிக்கு மூன்றாம் இடத்தில் உச்சகதியில் இருக்கும் செவ்வாய் மாசி11(23.2.2026) முதல் நான்காம் இடமான சுகஸ்தானத்தில் சஞ்சரிப்பார். வாழ்க்கையில் இழந்த இன்பங்கள் மீளும். வீட்டிலும் வேலை செய்யும் இடத்திலும் உங்களின் திறமைக்கு பாராட்டும் நல்ல மதிப்பும் கிடைக்கும். சுய ஜாதக தசா புத்திக்கு ஏற்ப தொழிலில் அகலக் கால் வைப்பது நன்று. உடன் பிறந்தோர் நட்பும், நல்லுறவும் ஏற்படும். தம்பதிகளுக்குள் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் சுபமங்கள விரயச் செலவு உண்டாகும். சுப கடன் வாங்கி பூமி, வீடு, வாகன, வசதியை பெருக்குவீர்கள்.

ஆயுள் ஆரோக்கியம் பற்றிய பயம் அகலும். புதிய சொத்துக்களின் சேர்க்கை ஏற்படும். பிள்ளைகளால் ஏற்பட்ட மன உளைச்சல் சீராகும். வழக்கு விசாரணையில் தீர்ப்பு சாதகமாகும். சுபகாரியங்களால்.குடும்பத்தில் மகிழ்ச்சி ஆனந்தம் அதிகரிக்கும். வேலைப்பளுவும் அலைச்சலும் அதிகரிக்கும்.புதிய நட்பு வட்டாரம் உருவாகும். விலகிச் சென்ற நண்பர்கள் மீண்டும் நட்பு பாராட்டுவார்கள். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். பெண்களுக்கு பொன், பொருள் ஆபரண சேர்க்கை உண்டாகும். சனி தான் பார்த்த வீட்டின் வேலையை தாமதப்படுத்தி வழங்குவார். என்பதால் திருமண வாய்ப்புகள் இழுபறியாகும். ஜாதகம் சரியாக இருந்தால் வரன் பிடிக்காது. வரன் ஒத்து வந்தால் ஜாதகம் பொருந்தவில்லை போன்ற சங்கடங்கள் நிகழும்.

முதல் திருமணத்தில் தோல்வி அடைந்தவர்களுக்கு மறு வாழ்க்கை அமையும். உடல் நலம் மற்றும் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். பூர்வீகம் தொடர்பான விசயங்கள் விரைவில் முடிவிற்கு வரும். தாய் அன்பும், தாய்வழி உறவுகளின் ஆதரவும் மகிழ்ச்சியை அதிகரிக்கும். மூதாதையர் சொத்தில் அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். சமூகத் தொண்டு செய்யும் ஆர்வம் உண்டாகும். தொழிலில் நல்ல லாபம் உண்டாகும். சிலர் ஊர் மாற்றம் அல்லது வீடு மாற்றம் செய்யலாம்.

வயது முதிர்ந்த பெண்கள் உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டும். அடமானத்தில் இருந்த நகைகள் மீட்கப்படும். புதிய அணிகலன்கள், அழகு, ஆடம்பரப் பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். உங்கள் பேச்சிற்கு மதிப்பு அதிகரிக்கும். பருவ வயதினருக்கு சுற்றுலா சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும்.

பொருளாதாரம்

பண விஷயத்தைப் பொருத்தவரை திருப்திகரமான மாதமாக இருக்கும். அதிர்ஷ்டம் நீங்கள் இருக்குமிடம் தேடி வரும். செல்வ செழிப்பில் மிதப்பீர்கள் பணவசதி சிறப்பாக இருக்கும். பொருளாதார நிலையிலே மிகப் பெரிய வளர்ச்சி ஏற்படும். வராது என்று நினைத்த பணம் வந்து சேரும். இல்லை என்ற நிலை இனி இல்லை. பண வரவுகள் சிறப்பாக இருக்கும். பழைய கடன்களை அடைத்து ஆறுதல் அடைவீர்கள். வருமானத்தில் ஏற்பட்ட தடைகள் விலகி வாழ்க்கைக்கு, ஜீவ னத்திற்கு தேவையான, வருவாய் கிடைக்கத் துவங்கும். கடன்களை அடைத்து நிம்மதி அடைவீர்கள். தாய், தந்தை பொருள் உதவி செய்து வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். மூத்த சகோதர, சகோதரியால் ஆதாயம் உண்டு.

உத்தியோகஸ்தர்கள்

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வுடன் கூடிய பதவி உயர்வு கிடைக்கும். வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தற்காலிக வேலையில் இருப்பவர்களுக்கு பணி நிரந்தரம் ஏற்படும். தடைபட்ட பதவி உயர்வு கிடைக்கும். உயர் அதிகாரிகளின் அனுசரனையும் ஆதரவும் உண்டு. உங்கள் அலுவலக வேலை தொடர்பாக வெளிநாடு சென்று வருவீர்கள். அரசு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு அரசு வேலை கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். விரும்பிய மாற்றத்தை தரும் நல்ல மாதம் இதுவாகும். வழக்குகளால் ஏற்பட்ட மன உளைச்சல் குறையும். ஆயுள் சார்ந்த பயம் விலகும். உடம்பும் மனதும் புத்துணர்ச்சியடையும். சிலர் இன்சூரன்ஸ் பாலிசி எடுப்பீர்கள்.

பெண்கள்

பெண்களுக்கு இது மிக மகிழ்ச்சியும் உற்சாகமும் தரும் மாதமாகும். சுய தொழில் புரியும் பெண்களின் திறமை வெளிநாடு வரை பரவும். குடும்ப பிரச்சனைகள் அகலும். எடுக்கும் முயற்சிகளில் படிப்படியான முன்னேற்றமும் முடிவில் வெற்றியும் உண்டாகும். பெண்கள் வேலை பார்க்கும் இடத்திற்கு விசுவாசமாகவும், நன்றியுடனும் இருப்பீர்கள். தொழில் முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். உங்கள் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு நீங்கள் காணும் கனவுகள் பலிதமாகும். கணவர் மற்றும் பிள்ளைகளால் மகிழ்ச்சியும் நிம்மதியும் நிரம்பும். தங்கம், வெள்ளி, அழகு, ஆடம்பரப் பொருட்கள் அதிகம் சேரும். வீட்டில் சுப நிகழ்வுகள் நடக்கும். பழைய கடனை அடைத்து புதிய வாழ்க்கைக்கு அஸ்திவாரம் அமைப்பீர்கள். மாதவிடாய் கோளாறு சீராகும்.

சூரிய கிரகணம்

மாசி 5 ( 17.2.2026)ல் நடக்கப் போகும் சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது. விருச்சிக ராசிக்கு 4ம் இடமான சுகஸ்தானத்தில் சூரிய கிரகணம் சம்பவிக்க போகிறது. தாய் தந்தை, தந்தை வழி உறவுகளுடன் மோதல் கருத்து வேறுபாடு வரலாம். தாயின் ஆரோக்கியத்தில் சிறு குறைபாடுகள் உண்டாகலாம். வீடு மாற்றம் செய்வதை தவிர்க்கவும்.தாய் தந்தையரை அனுசரித்துச் செல்வதால் அவர்களின் ஆசீர்வாதத்தை பெற முடியும். கிணறு வெட்டுவது போரிங் போடுவது ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது.

சொத்து வாங்குவது விற்பது ஆகியவற்றில் தவறான விலை நிர்ணயம் ஏற்படலாம். முதல் முறையாக நோய்க்கு வைத்தியம் செய்வது நல்லதல்ல. தாயின் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் வரலாம். விவசாயிகள் கால்நடை வளர்ப்பவர்கள் பண்ணையாளர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும்.பெற்றோர்கள் பெரியோர்கள் முன்னோர்களின் நல்லாசிகளை பெறுவதால் சுய ஜாதக ரீதியான தோஷங்களும் சாபங்களும் விலகும்.

சந்திர கிரகணம்

மாசி 19ம் தேதி (3.3.2026) அன்று சந்திர கிரகணம் நடக்கப் போகிறது. இது பகுதி சந்திர கிரகணமாக இந்தியாவில் சில குறிப்பிட்ட பகுதிகளில் தெரியும். விருச்சிக ராசிக்கு பத்தாமிடமான தொழில் ஸ்தானத்தில் சந்திரன் கேது சேர்க்கை ஏற்படுகிறது. அன்று உங்களின் ஒன்பதாம் அதிபதி சந்திரன் பத்தாம் இடத்தில் சஞ்சரிக்கிறார். சுப விரயங்கள், சுப நிகழ்வுகள் மிகுதியாகும். புதிய வெளிநாட்டு வேலை, தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். வருமானத்தை அதிகரிக்கும் சொத்துகள் சேரும்.

கூட்டுத் தொழில்கள் சிறப்படையும், பூர்வீக சொத்துக்கள் மூலம் வருமானம் அதிகரிக்கும். வெளிநாடு செல்லும் யோகம் வருகிறது.குழந்தை இல்லாதவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும். இந்த கால கட்டத்தில் கல்வி நிறுவனங்கள், தர்ம ஸ்தாபனங்கள், வழிபாட்டு ஸ்தலங்களுக்கு உதவி செய்தால் பாக்கிய பலன்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல மாற்றம் ஏற்படும்.

பரிகாரம்

மாசி மாதம் சிவராத்திரி அன்று விரதம் இருந்து சிவ வழிபாடு செய்வதால் தளர்வில்லாத வளர்ச்சி உண்டாகும். மன உளைச்சல் நீங்கி நிம்மதி கிடைக்கும்.

'பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Tags:    

Similar News