நாளை மாசி முதல் நாள்- செல்வச் செழிப்பான வாழ்வை அருளும் விஷ்ணுபதி புண்ணிய கால வழிபாடு
- ஒரு விஷ்ணுபதி புண்ணிய காலத்தை தவறவிட்டால் அடுத்து இதே போன்ற ஒரு புண்ணியகாலம் வருவதற்கு மீண்டும் 60 ஆண்டுகள் ஆகும்.
- 27 முறை பெருமாளை வலம் வரும்போது உங்களுக்குத் தெரிந்த பெருமாள் சுலோகங்களை சொல்லலாம்.
மகத்துவமான மாசி மாதம் நாளை பிறக்கிறது. ஒரு வருடத்தில், வைகாசி 1, ஆவணி 1, கார்த்திகை1 மற்றும் மாசி 1 இந்த 4 நாட்களும் விஷ்ணுபதி புண்ணிய கால நாட்களாக சொல்லப்பட்டிருக்கின்றன. அந்த வகையில் மாசி மாத பிறப்பான நாளை (13-ந் தேதி) விஷ்ணுபதி புண்ணிய காலம் ஆகும்.
கும்ப சங்கராந்தி என்று போற்றப்படும் இந்த நாளில் நதிக் கரைகளிலும் சமுத்திரக் கரைகளிலும் சென்று நீராடி வழிபட சகல பாவங்களும் விலகி நன்மைகள் பெருகும் என்பது நம்பிக்கை. இந்த காலம் பெருமாளின் நரசிம்ம அவதாரத்தோடு தொடர்புடையது.
இரணியனை சம்காரம் செய்து தனது பக்தனான பிரகலாதனை காப்பாற்றிய நரசிம்மரின் கோபம் தணியாமல் தனது உக்கிரமான வடிவிலேயே இருந்த நேரம், தேவர்களும் முனிவர்களும் பயந்து மகாலட்சுமி தேவியிடம் வேண்டினர். மகாலட்சுமியும் பெருமாளை சாந்தப்படுத்த ஒப்புக்கொண்டு பயபக்தியுடன் நரசிம்மத்திடம் நெருங்கினாள். மகாலட்சுமி நிழல் பட்டவுடன் சாந்தமடைந்து அவள் வேண்டியபடி மடியில் வைத்து கருணை வடிவமான, லட்சுமி நரசிம்மராக மாறினார் மகா விஷ்ணு. இது நடைபெற்ற காலம் விஷ்ணுபதி புண்ணிய காலம் என கருதப்படுகிறது.
தமிழ் ஆண்டுகள் மொத்தம் 60 ஆகும். ஒவ்வொரு ஆண்டிலும் வரக்கூடிய 4 விஷ்ணுபதி புண்ணிய காலங்களும் ஒவ்வொரு விதத்தில் வேறுபடும். எனவே இந்தமுறை நாம் ஒரு விஷ்ணுபதி புண்ணிய காலத்தை தவறவிட்டால் அடுத்து இதே போன்ற ஒரு புண்ணியகாலம் வருவதற்கு மீண்டும் 60 ஆண்டுகள் ஆகும்.
எனவே அரிதான இந்த வாய்ப்பினைத் தவற விடாமல் இந்த விரதத்தை அனுஷ்டிப்பதன் மூலம் மகிழ்ச்சியான, செல்வ செழிப்பு மிக்க வளமான வாழ்வினையும் பெற முடியும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.
சிவன் கோவில்களில் பிரதோஷ கால பூஜை நடத்தப்படுவது போல் பெருமாள் கோவில்களிலும் இந்த விஷ்ணுபதி புண்ணியகால வழிபாடு உள்ளது. இந்த நாளில் அதிகாலை 1.30 மணியில் இருந்து 10 மணிக்குள் பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தால் அவர்களுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்படும் என்று சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.
முழுமையாக 9 மணி நேரம் இந்த புண்ணிய காலம் அமைகிறது. காலை 10 மணி வரை விஷ்ணுபதி புண்ணியகாலம் இருப்பதால் காலையில் சீக்கிரமாகவே கோவிலுக்குச் சென்று 10 மணிக்குள் இந்த வழிபாட்டை செய்து முடித்து விடலாம். இந்த வழிபாட்டை செய்ய கையில் 27 பூக்களை எடுத்துச் செல்ல வேண்டும்.
எந்த வகையான பூவாக இருந்தாலும் சரி. பெருமாளின் கருவறையை கொடிமரத்தோடு சேர்த்து 27 முறை வலம் வர வேண்டும். அந்த எண்ணிக்கை தவறாமல் இருப்பதற்காகதான் 27 மலர்கள். ஒவ்வொரு சுற்று முடிந்ததும் ஒரு பூவை கொடிமரத்தின் பாதத்தில் போட வேண்டும். பிரதட்சணம் முடித்து பெருமாளுக்கு துளசி மாலை சார்த்தலாம். அர்ச்சனை செய்யலாம்.
27 முறை பெருமாளை வலம் வரும்போது உங்களுக்குத் தெரிந்த பெருமாள் சுலோகங்களை சொல்லலாம். இல்லாவிட்டால் வெறுமனே "நாராயணா, நாராயணா!" என்று சொல்லிய படியே கூட பிரதட்சணம் செய்யலாம்.
வியாபாரத்திலும், செய்யும் வேலையிலும் சீக்கிரம் முன்னேற்றம் அடைய வேண்டும், காரியத்தடை விலக வேண்டும் என்று நினைப்பவர்கள், "ஓம் அனிருத்ரனே நமக!" என்று சொல்லி பிரதட்சணம் செய்யலாம். வீட்டில் நோய் நொடி பிரச்சனை என்றால், பெருமாளை விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் "ஓம் அச்சுதாய நமக! ஓம் அனந்தாய நமக! ஓம் கேசவாய நமக!" என்று துதித்து வழிபட வேண்டும். இது எதையும் உச்சரிக்க இயலாதவர்கள் "கோவிந்தா! கோவிந்தா!" என்று சொல்லி பிரதட்சணம் செய்து உங்கள் வேண்டுதலை பெருமாளிடம் சொன்னாலும் நிச்சயம் அது பலிக்கும்.
இவ்வாறு வழிபாட்டை நிறைவு செய்து விட்டு வீடு திரும்பும் போது கடையில் இருந்து ஒரு பாக்கெட் கல் உப்பை வாங்கி வந்து வீட்டு பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்ய வேண்டும். மறுநாள் இந்த கல் உப்பை சமையலுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த முறையில் செய்வதன் மூலம் பெருமாளின் அருளால் செல்வ செழிப்புடன் வாழ முடியும்.
இந்த முறைப்படி பெருமாளை நாளைய தினம் வழிபாடு செய்பவர்களுக்கு கடன் சுமை குறையும் பொன் பொருளை பெரும்பாலும் மகாலட்சுமியும் உங்களுக்கு வழங்குவார்கள். அதேபோல் கொடிமர பூஜைக்கும் மிகுந்த பலன் உண்டு. ஏகாதசி விஷ்ணுவிற்கு எவ்வளவு சிறப்பு வாய்ந்ததோ அதே போல இந்த விஷ்ணுபதி புண்ணிய காலமும் மிகவும் சிறப்பு பெற்ற புனிதமான நாளாகும்.
வருடத்திற்கு 4 முறை மட்டுமே இந்த விஷ்ணுபதி புண்ணிய காலம் வருகிறது. இந்த விஷ்ணுபதி புண்ணியகால வழிபாடு பல ஏகாதசிகளில் வழிபாடு செய்வதற்கு சமம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் உங்களின் பிரச்சனைகளை, வேண்டுதல்களை மனம் உருகி மகாவிஷ்ணுவிடம் கூறி வழிபட்டால் வேண்டுதல் எதுவானாலும் அடுத்த 3 விஷ்ணுபதி காலம் முடிவதற்குள் நிறைவேறும். பெருமாளின் அருளையும் கருணையும் பெறுவதற்கு மிகவும் உயர்ந்த நாளாகவும், மிகவும் அரிதான நாளான இந்த நாளில் செய்யும் வழிபாடு குடும்ப உறுப்பினர்களிடையே ஏற்படும் பிரச்சனை, குடும்பத்தில் பல காலமாக தீராமல் இருக்கும் பிரச்சனைகள் ஆகியவற்றை தீர்க்கும் அரு மருந்தாக உள்ளது.
விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணங்கள் கொடுப்பது மிக சிறந்த பலன்களை அளிக்கும். வயதில் முதிர்ந்த தம்பதிகளுக்கு இந்த நாளில் பாதபூஜை செய்து வழிபடுவது மிக சிறப்பானது. ஆலயங்களில் அரிசி மாவு கோலமிட்டு, அகல் விளக்குகள் ஏற்றுவதும் வாழ்வில் மங்களங்களை பெருகச் செய்யும்.
விஷ்ணுபதி புண்ணிய கால விரதம் மன அமைதியையும், மோட்சத்தையும் தரக்கூடிய புண்ணிய விரதமாகும். மகா விஷ்ணு மற்றும் மகா லட்சுமியின் துதிகளை இந்த நாளில் சொல்லி பாராயணம் செய்து, இயன்ற அளவிற்கு பூஜை செய்து இந்த விரதத்தை கடைபிடிக்கலாம். எதுவும் முடியாதவர்கள் துளசி இலைகளை மட்டும் சமர்ப்பித்து வழிபடலாம்.
இந்த நாளில் மகாலட்சுமி பூஜை, கோபூஜை ஆகியன செய்வது மிகவும் பலன் தரும். வீடுகளில் விளக்கேற்றி விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வதும் மிகுதியான பலன்களைக் கொடுக்கும். திருமண வரம் வேண்டும் இளைஞர்கள் தவறாமல் இந்த நாளில் ஆலயம் சென்று வேண்டிக்கொண்டால் விரைவில் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை. செல்வ செழிப்புடன் வாழ்ந்தவர்கள் ஏதாவது ஒரு சூழ்நிலையில் செல்வத்தை இழந்து வறுமை நிலைக்கு தள்ளப்பட்டிருந்தாலும், எவ்வளவு முயற்சிகள் செய்தும் வறுமை நிலையில் இருந்து எந்தவித முன்னேற்றமும் இல்லை என்பவர்களாக இருந்தாலும் அவர்கள் தவறாமல் விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் பெருமாளை வழிபாடு செய்வதன் மூலம் பெருமாள் மற்றும் மகாலட்சுமியின் அருளால் அனைத்து விதமான செல்வங்களையும் பெற முடியும்.
ஏகாதசியை விட கூடுதல் பலன்
பொதுவாக திதிகளில் சிறந்ததான ஏகாதசி திதியை மகாவிஷ்ணுவிற்கு மிகவும் உகந்ததாக சாஸ்திரம் கூறுகிறது.
ஏகாதசி அன்று ஒருவன் புரியும் பூஜைகளும், அனுஷ்டிக்கும் விரதமுறையும் அனைத்திலும் சிறந்த பலன் தருவதாக கூறுவர். மகாவிஷ்ணுவின் அருளும், கருணையும் மிகவும் அதிகமாகவும், பூரணமாகவும் துலங்கும் அரிதான நாளாக இந்த நாள் அமைந்து உள்ளது.
ஆண்டுக்கு 3 புண்ணிய காலங்கள்
ஒவ்வொரு வருடமும் 3 புண்ணிய காலங்கள் வருகிறது. முப்பெரும் தெய்வங்களான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோருக்கு உகந்த காலங்களாக இவை உள்ளன. முப்பெரும் தெய்வங்களுக்கு தலா 4 மாதங்கள் வீதம் வழிபாட்டு மாதங்களாக உள்ளன.
அந்த வகையில், தமிழ் மாதக் கணக்கின் படி வைகாசி, ஆவணி, கார்த்திகை மற்றும் மாசி மாதப் பிறப்பு விஷ்ணுபதி புண்ணிய காலம் எனப்படுகிறது. நாளை மாசி மாதம் பிறக்கிறது. இது விஷ்ணுபதி புண்ணிய காலம் ஆகும்.
இதேபோல், சித்திரை, ஆடி, ஐப்பசி, தை ஆகிய மாதப் பிறப்பு பிரம்மாவுக்கு உரியவை. இவை விஷு புண்ணிய காலம் எனப்படுகிறது. ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி ஆகியவை சிவனுக்குரியவை. இவை ஷடசீதி புண்ணிய காலம் ஆகும். ஷடாங்கன் என்றால் சிவபெருமானை குறிப்பதாகும்.