தத்துவம் உணர்த்திடும் கார்த்திகை திருநாள்
- அர்த்தநாரீஸ்வரராய் காட்சியளிக்கும் அண்ணாமலையார்.
- ஆண்டுக்கு ஒருமுறை மகாதீபம் ஏற்றும் சமயத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.
இறைவனால் படைக்கப்பட்ட ஆணும், பெண்ணும் சரிசமம் என்பதை உணர்த்தும் வகையில் பார்வதி தேவிக்கு தனது இடப்பாகத்தை கொடுத்து அர்த்தநாரீஸ்வரராய் காட்சியளிக்கும் அண்ணாமலையார் ஆண்டுக்கு ஒருமுறை மகாதீபம் ஏற்றும் சமயத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். இங்கு மலையே இறைவனாக காட்சியளிப்பது சிறப்பம்சமா கும்.
ஒருமுறை விஷ்ணுவுக்கும், பிரம்மாவுக்கும் யார் பெரியவர் என்ற போட்டி ஏற்பட்ட போது, அவர்களின் அகங்காரத்தை அடக்கும் வகையில் தனது அடியையும், முடியையும் யார் முதலில் கண்டறிகிறார்களோ அவர்களே பெரியவர் என்றார். இதனால் விஷ்ணு பன்றி அவதாரம் எடுத்து சிவனின் அடியை காண முயன்று தோற்றுப்போனார்.
அதன்பிறகு பிரம்மா அன்னப் பறவை வடிவெடுத்து சிவனின் முடியை காண முயன்றார். அப்போது சிவனின் சிரசில் இருந்து உதிர்ந்து வந்த தாழம்பூவை சாட்சியாக கொண்டு சிவன்முடியை கண்டதாக பிரம்மா பொய் கூறுகிறார். இதனால் கோபம் கொண்ட சிவன் அப்போது பிரம்மாவிற்கும், விஷ்ணுவிற்கும் ஜோதிப்பிழம்பாய் காட்சி தந்து அவர்களின் ஆணவத்தை அழித்தார்.
இதன் காரணமாகவே பொய்யுரைத்த பிரம்மாவிற்கு பூலோகத்தில் தனிக்கோவில்கள் இல்லாமல் போனது. பொய் சாட்சி கூறிய தாழம்பூவும் சிவபெருமாள் பூஜையில் வைக்கும் தகுதியை இழந்தது என்பது ஐதீகம்.