வழிபாடு

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சித்திரை மாத பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2024-04-24 03:05 GMT   |   Update On 2024-04-24 03:05 GMT
  • பிரம்மோற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
  • நாளை காலை 5.15 மணிக்கு கருடசேவை நடக்கிறது.

சென்னை:

சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாளுக்கான சித்திரைமாத பிரம்மோற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முதல் நாளில் தர்மாதி பீடத்தில் அருள்பாலிப்பதுடன், புன்னைமர வாகனத்தில் வீதி உலா நடந்தது. இன்று பரமபதநாதன் திருக்கோலத்தில் சேஷ வாகன வீதி உலா மற்றும் சிம்ம வாகன வீதி உலாவும் நடக்கிறது. நாளை (வியாழக்கிழமை) காலை 5.15 மணிக்கு கருடசேவை நடக்கிறது.

வருகிற 26-ந்தேதி (வெள்ளிக்கிழமை) சூரிய பிரபை, சந்திர பிரபை, தொடர்ந்து வருகிற 27-ந்தேதி நாச்சியார் திருக்கோலத்தில் பல்லக்கு சேவையும் நடைபெறுகிறது. 6-ம் நாள் திருவிழாவான வருகிற 28-ந்தேதி அதிகாலை 5.30 மணிக்கு சூர்ணாபிஷேகம் நடக்கிறது. அன்று இரவு 8 மணிக்கு யானை வாகனத்தில் பெருமாள் வீதி உலா வந்து அருள்பாலிக்கிறார்.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகிற 29-ந்தேதி நடக்கிறது. அன்று அதிகாலை 3.30 மணிக்கு பெருமாள் திருத்தேரில் எழுந்தருள்கிறார். காலை 7 மணி அளவில் தேரோட்டம் வடம் பிடிக்கப்படுகிறது என்று இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கூறினர். விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News