வழிபாடு

அவினாசிலிங்கேசுவரர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்

Published On 2024-04-21 05:42 GMT   |   Update On 2024-04-21 05:42 GMT
  • பஞ்ச மூர்த்திகளும் பெருமாளும் திருத்தேருக்கு எழுந்தருளும் வைபவம்.
  • ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

அவினாசி:

கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்றதும், காசிக்கு நிகரான சிறப்பும் பெற்ற திருப்பூர் மாவட்டம் அவினாசி அவினாசிலிங்கேசுவரர் கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் தேர் திருவிழா நடைபெறும்.

அதேபோல் இந்த ஆண்டும் கடந்த 14-ந்தேதி கொடியேற்ற நிகழ்ச்சியுடன் தேர் திருவிழா தொடங்கியது. திருவிழாவையொட்டி 18-ந்தேதி இரவு பஞ்சமூர்த்திகள் 63 நாயன்மார்களுக்கு காட்சியளித்தனர். இதில் விநாயகர் பெருமான் மூசிக வாகனத்திலும், சோமஸ்கந்தர் ரிஷப வாகனத்திலும், கருணாம்பிகை அம்மன் காமதேனு வாகனத்திலும், சுப்பிரமணியர் மயில்வாகனத்திலும், பூமி நீளாதேவி கரி வரதராஜ பெருமாள் கருட வாகனத்திலும் எழுந்தருளினர்.

 நேற்று முன்தினம் இரவு கற்பக விருட்சம் திருக்கல்யாணம் நடந்தது. நேற்று காலை 6 மணிக்கு பூரம் நட்சத்திரத்தில் பஞ்ச மூர்த்திகளும் பெருமாளும் திருத்தேருக்கு எழுந்தருளும் வைபவம் நடைபெற்றது. இதையடுத்து தேரில் எழுந்தருளிய சுவாமியை பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணி அளவில் சிகர நிகழ்ச்சியான பெரிய தேரோட்டம் நடைபெற்றது.சிவாச்சார்யர்கள், ஆன்மீக பெருமக்கள், பக்தர்கள் `அவிநாசியப்பா', `அரோகரா', `நமசிவாயா', சிவ... சிவ... என பக்தி கோஷமிட, சிவனடியார்கள் கைலாய வாத்தியம் முழங்க திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. திருத்தேரில் சோமஸ்கந்தர்- உமாமகேஸ்வரி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

திருப்பூர் மாவட்டம் மட்டுமின்றி கோவை, ஈரோடு உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

கோவில் முகப்பில் இருந்து புறப்பட்ட தேரானது சிறிது தொலைவு இழுத்து செல்லப்பட்டு வடக்கு ரத வீதியில் நிலை நிறுத்தப்படுகிறது. தேரின் 2 பின் சக்கரங்களிலும் ராயம்பாளையம் மற்றும் புதுப்பாளையம் சன்னை மிராசுகள் சன்னை போட்டு தேரை நகர்த்தி கொடுத்தனர்.

நாளை 22-ந் தேதி மீண்டும் காலை 9 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து மாலை 4 மணி அளவில் நிலை வந்து சேர உள்ளது. 23-ந் தேதி அம்மன் தேரோட்டம் நடக்கிறது. 24-ந் தேதி மாலை வண்டித்தாரை, பரிவேட்டையும் 25-ந் தேதி தெப்ப தேர் உற்சவமும் நடக்கிறது. 26-ந் தேதி மகா தரிசன விழாவும், 27-ந் தேதி மஞ்சள் நீர் விழாவும் நடக்கிறது.

அவினாசிலிங்கேஸ்வரர் கோவில் தேரோட்டம் கோவில் முகப்பில் உள்ள தேர் நிலையில் தொடங்கி ரத வீதிகள் வழியாக மீண்டும் நிலை வந்து சேரும் வகையில் இன்று முதல் 3 நாட்கள் நடத்தப்படுகிறது. 92 அடி உயரம், 400 டன் எடை கொண்ட இந்த தேர் திருவாரூர் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் தேருக்கு அடுத்த படியாக தமிழகத்தின் 3-வது பெரிய தேர் ஆகும். எனவே தேரோட்டத்தில் கூட்ட நெரிசலை சமாளிக்க போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

முக்கிய இடங்களில் போக்கு வரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. வெயிலின் தாக்கத்தால் ரத வீதிகளில் ஆங்காங்கே நீர்-மோர் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News