வழிபாடு

கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றதையும், சிறப்பு அலங்காரத்தில் பர்வதவர்த்தினி அம்பாள் காட்சி அளித்ததையும் காணலாம்

ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் 21-ந்தேதி தேரோட்டம்

Published On 2023-07-14 05:44 GMT   |   Update On 2023-07-14 05:44 GMT
  • 19-ந்தேதி வெள்ளி தேரோட்டம் நடக்கிறது.
  • 24-ந்தேதி திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.

ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆடி திருக்கல்யாண திருவிழா மற்றும் மாசி மகா சிவராத்திரி திருவிழா சிறப்பாக நடைபெறும்.

இந்த ஆண்டுக்கான ஆடி திருக்கல்யாண திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 29-ந் தேதி வரை விழா நடக்கிறது. விழாவின் முதல் நாளான நேற்று பகல் 11 மணி அளவில் அம்மன் சன்னதி எதிரே உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு விழா தொடங்கியது.

இதை முன்னிட்டு கொடிமரத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் கொடிமரம் மற்றும் பர்வதவர்த்தினி அம்பாளுக்கும் சிறப்பு தீபாராதனை நடந்தது. கொடியேற்ற பூஜைகளை உதயகுமார், சிவமணி உள்ளிட்ட குருக்கள் செய்தனர்.

நேற்று இரவு அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்தில் எழுந்தருளி ரத வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். 2-வது நாளான இன்று (வெள்ளிக்கிழமை) காலை அம்பாள் தங்க பல்லக்கில் வீதி உலாவும், இரவு தங்க காமதேனு வாகனத்திலும் வீதி உலாவும் நடைபெறுகிறது. 17-ந் தேதி ஆடி அமாவாசை அன்று காலை 11 மணிக்கு கோவிலில் இருந்து தங்க கருட வாகனத்தில் ராமபிரான் அக்னி தீர்த்த கடற்கரைக்கு தீர்த்தவாரி பூஜைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. 19-ந் தேதி இரவு வெள்ளி தேரோட்டமும், 21-ந் தேதி காலை 10 மணிக்கு முக்கிய நிகழ்ச்சியாக அம்பாள் தேரோட்டமும் நடைபெறுகிறது.

விழாவின் 11-ம் திருநாளான 23-ந் தேதி தபசு மண்டகப்படியில் மாலை மாற்றுதல் நிகழ்ச்சியும், 24-ந் தேதி இரவு 7:30 மணியிலிருந்து 8.30 மணிக்குள் சிகர நிகழ்ச்சியாக ராமநாதசாமி-பர்வத வர்த்தினி அம்பாள் திருக்கல்யாண வைபவமும் நடைபெறுகிறது. 29-ந் தேதி சுவாமி, அம்பாள், பெருமாள் தங்ககேடயத்தில் கெந்தமாதனபர்வதம் மண்டகப்படிக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியோடு திருவிழா நிறைவு பெறுகிறது.

Tags:    

Similar News