ஆன்மிகம்

வயலூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா இன்று தொடங்கியது

Published On 2018-11-08 06:25 GMT   |   Update On 2018-11-08 06:25 GMT
வயலூர் முருகன் கோவிலில் இன்று(வியாழக்கிழமை) கந்தசஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
புகழ்பெற்ற முருகன் கோவில்களில் வயலூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலும் ஒன்றாகும். இங்கு ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் நடைபெறும் கந்தசஷ்டி விழா சிறப்பு வாய்ந்ததாகும். இந்த விழா இன்று(வியாழக்கிழமை) தொடங்கியது. வருகிற 14-ந் தேதி வரை இந்த விழா நடைபெறுகிறது.

விழாவையொட்டி இன்று காலை 7 மணிக்கு கணபதி ஹோமமும் அபிஷேகமும், அதனைத் தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமிக்கு சண்முகார்ச்சனையும் நடந்தது. மாலை 6 மணிக்கு ரக்‌ஷா பந்தனமும்(காப்பு கட்டுதல்), அபிஷேக ஆராதனையும் நடைபெறுகிறது. இரவு சிங்காரவேலர் பச்சை மயில் வாகனத்தில் திருவீதி உலா வருகிறார்.

நாளை(வெள்ளிக்கிழமை) முதல் 12-ந் தேதி வரை காலை 8 மணியளவில் சிங்காரவேலர், கேடயத்தில் திருவீதி உலா வருகிறார். அதனை அடுத்து சுப்பிரமணிய சுவாமிக்கு லட்சார்ச்சனையும், மதியம் சண்முகார்ச்சனையும் நடைபெறுகிறது. அன்றைய தினங்களில் இரவு 8 மணிக்கு சேஷம், ரிஷபம், அன்னம், வெள்ளிமயில் போன்ற வாகனங்களில் உற்சவர் சிங்காரவேலர் எழுந்தருளி திருவீதி உலா வருகிறார்.

11-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 8 மணிக்கு சிங்காரவேலர் யானைமுக சூரனுக்கு பெருவாழ்வு அளிக்கும் நிகழ்ச்சியும், 12-ந் தேதி இரவு 8 மணிக்கு சிங்காரவேலர் சிங்கமுக சூரனுக்கு பெருவாழ்வு அளிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 13-ந் தேதி காலை 9 மணிக்கு சண்முகார்ச்சனையும், அதனை தொடர்ந்து 10.40 மணிக்கு சூரபதுமனை வதம் செய்வதற்கு சக்திவேல் வாங்குதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இரவு 7.30 மணிக்கு சிங்காரவேலர் ஆட்டுக்கிடா வாகனத்தில் எழுந்தருளி சூரபதுமனுக்கு பெருவாழ்வு அளித்தல் நிகழ்ச்சி நடைபெறும். அதனையடுத்து முத்துக்குமாரசுவாமி வெள்ளி கேடயத்தில் எழுந்தருளி காட்சி அளிக்கிறார்.

14-ந் தேதி காலை 9 மணிக்கு அபிஷேகம், ஆராதனையுடன் சண்முகார்ச்சனை நடக்கிறது. இரவு 7 மணிக்கு தேவசேனா சுப்பிரமணியசுவாமி திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. கந்தசஷ்டி விழாவின் ஒவ்வொரு நாளும் இரவு இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. கோவிலுக்கு பக்தர்கள் வந்து செல்ல வசதியாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
Tags:    

Similar News