ராசிபலன்

2025 மார்கழி மாத ராசிபலன் - தனுசு, மகரம், கும்பம், மீனம்

Published On 2025-12-14 12:15 IST   |   Update On 2025-12-14 12:16:00 IST
  • உத்தியோகஸ்தர்களுக்கு உயர்பதவிகள் கிடைக்கும். கலைஞர்களுக்கு கவுரவம், அந்தஸ்து உயரும்.
  • மாணவ - மாணவிகள் படிப்பில் அக்கறை செலுத்துவது நல்லது. பெண்களுக்குப் பொருளாதாரப் பற்றாக்குறை அகலும்.

தனுசு ராசி நேயர்களே!

மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு அஷ்டமத்தில் உச்சம் பெற்றுச் சஞ்சரிக்கிறார். எனவே மாதத் தொடக்கத்தில் மனக்குழப்பங்கள் கொஞ்சம் அதிகரிக்கலாம். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. விரயங்கள் கொஞ்சம் கூடுதலாகத்தான் இருக்கும். மார்கழி 6-ந் தேதி குரு மிதுன ராசிக்கு வருகிறார். அப்பொழுது அவர் உங்கள் ராசியை சப்தம பார்வையாக பார்க்கிறார். எனவே அதன்பிறகு இடர்பாடுகள் அகலும். இனிய பலன் கிடைக்கும். தொழில் ரீதியாக எடுத்த புது முயற்சிகளில் வெற்றி உண்டு.

மிதுன - குரு

மார்கழி 6-ந் தேதி, மிதுன ராசிக்கு குரு வருகிறார். அவரது பார்வை உங்கள் ராசியில் பதிகிறது. பொதுவாக குரு இருக்கும் இடத்தைவிட பார்க்கும் இடத்திற்கு பலன் அதிகம் உண்டு. அந்த அடிப்படையில் குருவின் பார்வையால் குழப்பங்கள் அகலும். குதூகலம் கூடும். இழப்புகளை ஈடுசெய்ய எடுத்த முயற்சி வெற்றி தரும். உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதோடு மட்டுமல்லாமல் உதிரி வருமானமும் உண்டு. கல்யாண முயற்சிகள் கைகூடும். கடமையைச் செவ்வனே செய்து முடித்துப் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். குருவின் பார்வை சகோதர ஸ்தானத்திலும், லாப ஸ்தானத்திலும் பதிவதால் உடன்பிறப்புகளின் திருமண வாய்ப்பும் கைகூடலாம்.

உடன்பிறந்தவர்கள் பகை மாறி பாசம் காட்டுவர். பூர்வீக சொத்துக்களை தக்கவிதத்தில் பாகம் செய்துகொள்வீர்கள். தொழில் வளர்ச்சி திருப்தி தரும். பெற்றோரின் மணி விழாக்கள், முத்து விழாக்கள் போன்ற விழாக்களை நடத்தும் யோகமும் சிலருக்கு வாய்க்கும். இதுவரை விலகிக் கொள்வதாகச் சொல்லி அச்சுறுத்திய பங்குதாரர்கள் இப்பொழுது, தொழிலில் நீடிப்பதாக சொல்வார்கள். புகழ்பெற்ற புராதன கோவில்களுக்குச் சென்று வழிபட்டு வரும் எண்ணம் நிறைவேறும்.

தனுசு - சுக்ரன்

மார்கழி 7-ந் தேதி, தனுசு ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 6, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் உங்கள் ராசிக்கே வரும் இந்த நேரம் உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கொடுக்கல் - வாங்கல்கள் சீராகவும், சிறப்பாகவும் அமையும். உத்தியோகத்தில் பதவி உயர்வு வருவதற்கான சூழ்நிலை உண்டு. பயணங்கள் பலன் தருவதாக அமையும். பணிபுரியும் இடத்தில் இருந்து விலகிக் கொண்டு புதிய இடத்திற்குச் செல்லலாமா? என்று சிந்தித்தவர்களுக்கு, இப்பொழுது நல்ல தகவல் கிடைக்கும். இக்காலத்தில் எதிர்பாராத சில நல்ல நன்மைகளும் வந்துசேரும்.

மகர - செவ்வாய்

மார்கழி 30-ந் தேதி மகர ராசிக்குச் செல்லும் செவ்வாய், அங்கு உச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 5, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். விரயாதிபதி உச்சம் பெறும் இந்த நேரத்தில், விரயங்கள் கொஞ்சம் அதிகரிக்கும். வீடு மாற்றம், இடமாற்றம் வரலாம். புதிய சொத்துக்கள் வாங்க நினைப்பவர்கள் வில்லங்கம் பார்த்து வாங்குவது நல்லது. சகோதர அனுசரிப்பு சற்று குறையும். உடன்பிறப்புகள் ஒத்துழைப்பு திருப்தி தராது. சேமிப்பு கரையும் நேரம் இது.

பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எடுத்த முயற்சியில் வெற்றி கிட்டும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு வேண்டிய உதவிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர்பதவிகள் கிடைக்கும். கலைஞர்களுக்கு கவுரவம், அந்தஸ்து உயரும். மாணவ - மாணவிகளுக்கு கல்வி மேன்மை உண்டு. பெண்களுக்கு வரவைக் காட்டிலும் செலவு கூடும். வரன்கள் வாசல் தேடி வரும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

டிசம்பர்: 17, 23, 24, 27, 28, ஜனவரி: 7, 8, 12.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கருநீலம்.

மகர ராசி நேயர்களே!

மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, ராசிநாதன் சனி தன ஸ்தானத்தில் வலிமை பெற்று சஞ்சரிக்கிறார். எனவே தனவரவு தாராளமாக வந்து கொண்டேயிருக்கும். தொழில் வெற்றி நடைபோடும். துணையாக இருப்பவர்கள் தோள்கொடுத்து உதவுவர். உச்சம் பெற்ற குருவின் பார்வை மாதத் தொடக்கத்தில் அமைவதால் கல்யாணக் கனவுகள் நனவாகும். காரிய வெற்றியும், பொதுவாழ்வில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகளும் கிடைக்கலாம். குரு பகவான், மிதுன ராசிக்கு சென்ற பிறகு கொஞ்சம் கூடுதல் கவனத்தோடு செயல்பட வேண்டும். உத்தியோக மாற்றம், ஊர் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு.

மிதுன - குரு

மார்கழி 6-ந் தேதி, மிதுன ராசிக்கு குரு செல்கிறார். உங்கள் ராசிக்கு 6-ம் இடத்திற்கு வரும் குருவால் சில நல்ல மாற்றங்களும் வந்து சேரும். உங்கள் ராசியைப் பொறுத்தவரை 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு பகவான். அவர் வக்ரம் பெறுவது நன்மைதான். நல்ல சந்தர்ப்பங்கள் இல்லம் தேடிவரும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் கணிசமான தொகை கைகளில் புரளும். உடன்பிறப்புகளின் உதவி கிடைத்து மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு மட்டுமல்லாமல் பதவி உயர்வும் கூட ஒருசிலருக்கு வரலாம். கடன் சுமை படிப்படியாக குறையும்.

குருவின் பார்வை தொழில் ஸ்தானத்தில் பதிவதால் தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். வெளிநாட்டு நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரலாம். பணப்பற்றாக்குறை அகலும். புகழ்பெற்ற ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வரவேண்டுமென்ற எண்ணம் பூர்த்தியாகும். புதிய வாகனம் வாங்கிப் பயணிக்க எடுத்த முயற்சி கைகூடும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு மேலிடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். அதன் விளைவாக புதிய பொறுப்புகள் வந்துசேரும்.

தனுசு - சுக்ரன்

மார்கழி 7-ந் தேதி, தனுசு ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் விரய ஸ்தானத்திற்கு வரும் பொழுது விரயங்கள் கொஞ்சம் கூடுதலாகவே இருக்கும். வீடு மாற்றம், இடமாற்றம் ஏற்படும். மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பால் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கூட்டாளிகள் ஒரு சிலர் விலகினாலும், புதியவர்கள் வந்திணைவர். நீண்டதூரப் பயணங்கள் பலன்தருவதாக அமையும். உத்தியோகத்தில் இலாகா மாற்றங்கள் எதிர்பாராத விதத்தில் வரலாம். வளர்ச்சியும், தளர்ச்சியும் மாறி மாறி வரும் நேரம் இது.

மகர - செவ்வாய்

மார்கழி 30-ந் தேதி மகர ராசிக்குச் செல்லும் செவ்வாய், அங்கு உச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். லாபாதிபதியான அவர் உச்சம் பெறும்போது, பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். கிளைத் தொழில் தொடங்கும் வாய்ப்பும் ஒருசிலருக்கு உண்டு. வீடு வாங்குவது அல்லது வீடு கட்டுவது பற்றிய சிந்தனை அதிகரிக்கும்.

பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் வந்துசேரும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இலாகா மாற்றம் வரலாம். கலைஞர்களுக்கு புகழ் கூடும். மாணவ - மாணவிகள் படிப்பில் அக்கறை செலுத்துவது நல்லது. பெண்களுக்குப் பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். சுபச்செய்திகள் வந்துசேரும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

டிசம்பர்: 18, 19, 26, 27, 29, 30, ஜனவரி: 9, 10, 11, 14.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பிரவுன்.

கும்ப ராசி நேயர்களே!

மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்திலேயே உங்கள் ராசிநாதன் சனி வலிமை பெற்று சஞ்சரிக்கிறார். எனவே மனக்கிலேசங்கள் அகலும். உடல் நலம் சீராகி உற்சாகத்தோடு இயங்குவீர்கள். தொழில் மற்றும் உத்தியோகத்தில் உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கும்பத்தில் ராகு சஞ்சரிப்பதால் எடுத்த முயற்சிகளில் எளிதில் வெற்றி கிடைக்கும். புதியவர்கள் பங்குதாரர்களாக வந்திணைந்து பொருளாதாரத்தை மேம்படுத்தி கொடுப்பார்கள். சென்ற மாதத்தைக் காட்டிலும் இந்த மாதம் சிறப்பான மாதமாகவே அமையும்.

மிதுன - குரு

மார்கழி 6-ந் தேதி, மிதுன ராசிக்கு குரு வக்ர இயக்கத்தில் செல்கிறார். அவரது பார்வை உங்கள் ராசியில் பதியப் போகிறது. குரு பார்க்க கோடி நன்மை என்பதற்கேற்ப, இக்காலம் உங்களுக்கு ஒரு பொற்காலமாக அமையப் போகிறது. அதிலும் 9-ம் பார்வையாக குரு பார்வை பதிவதால் பொன், பொருள் சேர்க்கையும், பொருளாதார முன்னேற்றமும், நண்பர்கள் வழியில் நல்ல வாய்ப்புகளும் வந்துசேரும். குடும்பத்தில் மேலும் சிலர் வருமானம் ஈட்டும் சூழ்நிலை ஏற்படும். சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும்.

'நீண்ட நாட்களாக வரன்கள் வந்து விட்டுப்போகிறதே.. எப்பொழுதுதான் இல்லத்தில் மங்கல ஓசை கேட்கும்' என்று கவலைப்பட்டவர்களுக்கு, நல்ல தகவல் இல்லம் தேடி வரப்போகிறது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் விருப்ப ஓய்வில் வெளிவந்து சுயதொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவர். வெளிநாடு செல்வதில் தாமதம் ஏற்பட்டவர்களுக்கு அல்லது வெளிநாட்டிலிருந்து தாய்நாடு செல்ல முடியாமல் தத்தளித்தவர்களுக்கு இப்பொழுது வழிபிறக்கும். உங்கள் எண்ணங்கள் ஈடேறும் விதத்தில் குரு பார்வை கைகொடுக்கப் போகிறது.

தனுசு - சுக்ரன்

மார்கழி 7-ந் தேதி, தனுசு ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் லாப ஸ்தானத்திற்கு வரும்பொழுது, தொழில் முன்னேற்றம் ஏற்படும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். பெற்றோரின் ஆதரவோடு தொழிலை விரிவுபடுத்திக் கொள்வீர்கள். செய்யும் செயல்பாடுகளில் இருந்த தடைகள் உடைபடும். புதிய பணியாளர்கள் உங்கள் எண்ணங்களைப் புரிந்து கொண்டு செயல்படுவர்.

மகர - செவ்வாய்

மார்கழி 30-ந் தேதி, மகர ராசிக்குச் செல்லும் செவ்வாய், அங்கு உச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். தொழில் ஸ்தானாதிபதியான செவ்வாய் உச்சம் பெறும்போது, தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். கணிசமான தொகை கைகளில் புரளும். வாடகை கட்டிடத்தில் நடைபெற்ற தொழிலை, சொந்த கட்டிடத்திற்கு மாற்றும் முயற்சி கைகூடும். தேர்ந்தெடுத்த களம் எதுவாக இருந்தாலும், அதில் வெற்றி கிடைக்கும்.

பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பொன்னான நேரம் இது. வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு நட்பால் நன்மை உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அதில் இருந்தபடியே தொழில் செய்யும் சூழல் உருவாகும். கலைஞர்களுக்கு சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும். மாணவ - மாணவிகள், படிப்பில் கவனம் செலுத்துவது நல்லது. பெண்களுக்கு வருமானம் திருப்தி தரும். வளர்ச்சி கூடும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

டிசம்பர்: 16, 17, 20, 21, 27, 28, ஜனவரி: 1, 2, 12, 13.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ரோஸ்.

மீன ராசி நேயர்களே!

மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு, பஞ்சம ஸ்தானத்தில் உச்சம்பெற்றும், வக்ரம் பெற்றும் சஞ்சரிக்கிறார். அதன் பார்வை உங்கள் ராசியில் பதிவது யோகம்தான். ஆனால் மாதத் தொடக்கத்திலேயே 6-ம் நாள் வக்ரமாகி 4-ம் இடத்திற்கு செல்கிறார். இதன் மூலம் அவர், அர்த்தாஷ்டம குருவாக மாறுகிறார். எனவே விழிப்புணர்ச்சியோடு இருந்தாலும் விரயங்கள் கூடும். ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். மருத்துவச் செலவுகளால் மனக்கலக்கம் ஏற்படும். ஏழரைச் சனியில், விரயச் சனியின் ஆதிக்கம் நடைபெறுவதால் எதையும் ஒருமுறைக்குப் பல முறை யோசித்துச் செய்ய வேண்டிய நேரம் இது.

மிதுன - குரு

மார்கழி 6-ந் தேதி, மிதுன ராசிக்கு குரு வக்ர இயக்கத்தில் செல்கிறார். அவரது பார்வை பலனால் மாற்றங்கள் ஏற்படும் என்றாலும் கூட, 4-ம் இடத்தில் குரு இருப்பது அவ்வளவு நல்லதல்ல. பணநெருக்கடி ஏற்படலாம். ஒரு கடனை அடைக்க, மற்றொரு கடன் வாங்கும் சூழல் உருவாகும். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. ஆரோக்கியத் தொல்லையால் கவலைப்பட நேரிடலாம். பணிபுரியும் இடத்தில் பதற்றமும், மனக்குழப்பமும் உருவாகும்.

'தொழில் மாற்றம் செய்யலாமா? அல்லது நடக்கும் தொழிலையே தொடரலாமா?' என்ற சிந்தனை அதிகரிக்கும். பொதுவாழ்வில் உள்ளவர்கள் வீண்பழிக்கு ஆளாக நேரிடும். குடும்பத்தில் பழைய பிரச்சினை மீண்டும் தலைதூக்கும். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. வாகனத்தால் தொல்லைகளும், வளர்ச்சியில் குறுக்கீடுகளும் வந்து கொண்டேயிருக்கும். எனவே இதுபோன்ற நேரங்களில் சுய ஜாதக அடிப்படையில் திசாபுத்திக்கேற்ற தெய்வங்களை தேர்ந்தெடுத்து வழிபடுவது நல்லது.

தனுசு - சுக்ரன்

மார்கழி 7-ந் தேதி தனுசு ராசிக்கு சுக்ரன் வருகின்றார். உங்கள் ராசிக்கு 3, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் தொழில் ஸ்தானத்திற்கு வரும்போது மிகவும் கவனமாக இருப்பது நல்லது. பிறரை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் நடைபெறாமல் போகலாம். நினைத்தது ஒன்றும், நடந்தது ஒன்றுமாக இருக்கும். பணியாளர் தொல்லைகளும், திடீர், திடீரென விரயங்களும் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் உயர் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவர். வேலைப்பளு கூடும். சகப் பணியாளர்களால் பிரச்சினைகள் உருவாகும். குலதெய்வ வழிபாடும், இஷ்ட தெய்வ வழிபாடும் இக்காலத்தில் அவசியம் தேவை.

மகர - செவ்வாய்

மார்கழி 30-ந் தேதி மகர ராசிக்குச் செல்லும் செவ்வாய், அங்கு உச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் வலிமையடையும் இந்த நேரம் பணப்புழக்கம் அதிகரிக்கும். பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். பூர்வீக சொத்துக்களை பங்கிட்டுக் கொள்வதில் இருந்த பிரச்சினை நீங்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறுவதில் தடை அகலும். எதையும் திட்டமிட்டு செய்து வெற்றி காண்பீர்கள்.

பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறுவதில் தாமதம் ஏற்படும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்கள், முன்பின் தெரியாதவர்களை நம்பி எந்தப் பொறுப்பையும் ஒப்படைக்க வேண்டாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இடமாற்றம் உறுதியாகலாம். கலைஞர்களுக்கு புது முயற்சியில் வெற்றி கிடைக்கும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் மிகுந்த கவனம் தேவை. பெண்களுக்கு விரயங்கள் கூடும். வீடு மாற்றம், இடமாற்றம் வரலாம்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

டிசம்பர்: 16, 19, 23, 24, 29, 30, ஜனவரி: 3, 4, 13, 14.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பச்சை.

Tags:    

Similar News