ஆன்மிகம்

பாவங்கள் தீர ‘பாப மோசனிகா ஏகாதசி’ விரதம்

Published On 2019-01-02 09:21 GMT   |   Update On 2019-01-02 09:21 GMT
சித்திரை மாதம் தேய்பிறையில் வரும் ஏகாதசியை ‘பாப மோசனிகா ஏகாதசி’ என்று கூறுவர். இந்நாளில் பெருமாளுக்கு விரதம் இருந்து மனம் உருகி வேண்டினால், நாம் செய்த பாவங்கள் தொலையும்.
எல்லாவிரதங்களில் சிறந்ததாகப் போற்றப்படுவது ஏகாதசி விரதம். ஒவ்வொரு மாதமும் இரண்டு ஏகாதசிகள் வரும். ஒவ்வொரு ஏகாதசிக்கும் ஒரு பெயர் உண்டு. சித்திரை மாதம் தேய்பிறையில் வரும் ஏகாதசியை ‘பாப மோசனிகா ஏகாதசி’ என்று கூறுவர். இந்நாளில் பெருமாளுக்கு விரதம் இருந்து மனம் உருகி வேண்டினால், நாம் செய்த பாவங்கள் தொலையும். வளர்பிறையில் வருவது ‘காமதா ஏகாதசி’ எனப்படும். அன்றைய தினத்தில் விரதம் இருந்து, இறைவனை வணங்க விருப்பங்கள் எல்லாம் நிறைவேறும் என்று நம்பப்படுகிறது.

ஏகாதசி விரதம் இருக்கும் முறை :

ஏகாதசி அன்று அதிகாலையிலேயே எழுந்து, காலைக் கடன்களை முடித்துவிட வேண்டும். பூஜை அறைய சுத்தம் செய்து, அலங்காரப் பிரியனான மகா விஷ்ணு படத்திற்கு  மலர்களைக் கொண்டு அலங்கரிக்க வேண்டும். ( பூஜைக்கு தேவையான துளசியை முதல் நாளே எடுத்து வைத்துக் கொள்வது சிறப்பு) பால், பழங்கள், சர்க்கரைப் பொங்கல் ஆகியவற்றைப் படைத்து, பக்தியுடன் பூஜை செய்ய வேண்டும். விரதம் இருப்பவர்கள், ஸ்வாமிக்குப் பழங்களை நைவேத்தியம் செய்து விட்டு உண்ணலாம்.

ஏகாதசி அன்று பகலில் தூங்கக் கூடாது. இரவில் பஜனை அல்லது மகாவிஷ்ணுவின் கதைகளைக் கேட்பது முதலியவற்றில் ஈடுபட்டு கண் விழிக்க வேண்டும்.

கோபம், கவலை, வீண்பேச்சு, சண்டை, புறம்பேசுவதைத் தவிர்த்து, இறைவனை வழிபட உங்கள் பாவங்கள் தொலைந்து நன்மை பிறக்கும்.

ஏகாதசி நாளில் எதுவும் உண்ணாமல் விரதம் இருந்து, மறுநாள் துவாதசியன்று விரதத்தை பூர்த்தி செய்து உணவு உண்பது உடல்நலனுக்கு மிகவும் நல்லது என்று மருத்துவ அறிவியல் கூறுகிறது.
Tags:    

Similar News