வழிபாடு

மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை கோவில் நடை இன்று மாலை திறப்பு

Published On 2025-12-30 10:09 IST   |   Update On 2025-12-30 10:09:00 IST
  • கடந்த ஆண்டை விட சுமார் 4 லட்சம் பக்தர்கள் இந்த ஆண்டு கூடுதலாக சபரிமலை வந்து சென்றனர்.
  • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மகரஜோதியை தரிசனம் செய்வார்கள்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் மண்டல மற்றும் மகர விளக்கு வழிபாடு காலங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வார்கள். இந்த ஆண்டு மண்டல பூஜை கடந்த மாதம் (நவம்பர்) 17-ந்தேதி தொடங்கி கடந்த 27-ந் தேதியோடு முடிவடைந்தது.

இந்த காலத்தில் சபரிமலை கோவிலுக்கு 36.33 லட்சம் பக்தர்கள் வந்து ஐயப்பனை தரிசனம் செய்தனர். ஆன்லைன் முன்பதிவு மற்றும் உடனடி பதிவு மூலம் இவர்கள் தரிசனம் பெற்றனர். கடந்த ஆண்டை விட சுமார் 4 லட்சம் பக்தர்கள் இந்த ஆண்டு கூடுதலாக சபரிமலை வந்து சென்றனர்.

மண்டல பூஜை நிறைவை யொட்டி 27-ந் தேதி கோவில் நடை சாத்தப்பட்டது. நாளை (31-ந் தேதி) முதல் மகர விளக்கு கால பூஜைகள் தொடங்குகின்றன. இதனை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. கோவில் தந்திரி முன்னிலையில் மேல்சாந்தி நடையை திறப்பார். தொடர்ந்து தீபாராதனைக்கு பிறகு இரவு 10 மணிக்கு நடை சாத்தப்படும்.

நாளை அதிகாலை 3 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம் உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் தொடங்கும். ஜனவரி 14-ந் தேதி பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜை மற்றும் மகரவிளக்கு தரிசனம் நடைபெறும். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மகரஜோதியை தரிசனம் செய்வார்கள். அவர்களுக்கு தேவையான வசதிகளை தேவசம்போர்டு செய்து வருகிறது.

இதற்கிடையில் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தற்போதே சபரிமலையில் குவிந்து வருகின்றனர்.

Tags:    

Similar News