திருப்பதி கோவிலில் வைகுண்ட வாசல் திறப்பு
- வருகிற 2-ந்தேதி முதல் நேரடி இலவச தரிசனத்தில் பக்தர்களுக்கு வைகுண்ட துவார தரிசனம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இன்று காலை ஏழுமலையான், ஸ்ரீதேவி, பூதேவி சமயதராய் தங்க ரதத்தில் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று அதிகாலை தனுர் மாத சுபமுகூர்த்தத்தில் 1.30 மணிக்கு வைகுண்ட வாசல் திறக்கப்பட்டது.
முதலில் வி.ஐ.பி.க்கள் வைகுண்ட வாசல் வழியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி, தனது மனைவி குடும்பத்தினருடன் தரிசனம் செய்தார்.
இதேபோல் நடிகர் சிரஞ்சீவி தனது மனைவி சுரேகா, மகள்கள் சுஷ்மிதா, ஸ்ரீஜா ஆகியோருடன் தரிசனம் செய்தார். காலை 6 மணிக்கு மேல் சாதாரண பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
இன்று முதல் 3 நாட்கள் ஏற்கனவே தரிசன டிக்கெட் வைத்துள்ள பக்தர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் மட்டும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். நேரடி இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டு உள்ளதால் பக்தர்கள் யாரும் தரிசனத்திற்கு வர வேண்டாம் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
வருகிற 2-ந்தேதி முதல் நேரடி இலவச தரிசனத்தில் பக்தர்களுக்கு வைகுண்ட துவார தரிசனம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை ஏழுமலையான், ஸ்ரீதேவி, பூதேவி சமயதராய் தங்க ரதத்தில் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
வைகுண்ட வாசல் வழியாக ஏழுமலையானை தரிசனம் செய்ய பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளதால் பக்தர்களை கட்டுப்படுத்த விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கய சவுத்ரி கூறியதாவது:-
வைகுண்ட ஏகாதசியையொட்டி வருகிற 8-ந்தேதி வரை அதிகாலை 1.30 மணி முதல் இரவு 11.45 மணி வரை தொடர்ந்து 20 மணி நேரம் சுமார் 70 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பக்தர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் மட்டும் வந்தால் 2 அல்லது 3 மணி நேரத்தில் சாமி தரிசனம் செய்யலாம். வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு 16 வகையான உணவுகள் வழங்கப்படுகிறது.
மேலும் குடிநீர், டீ, காபி போன்றவையும் வழங்கப்படுகிறது. சிறுவர்களுக்கு பால் வழங்கப்பட்டு வருகிறது. 4.50 லட்சம் லட்டுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்றார்.