ஆன்மிகம்

பித்ரு சாபம், பித்ரு தோஷம் போக்கும் விநாயகர்

Published On 2018-10-17 04:45 GMT   |   Update On 2018-10-17 04:45 GMT
விநாயகர் வழிபாடு பித்ரு தோஷத்தையும் போக்கும் வல்லமை பொண்டது. தாங்கள் மூதாதையர் இறந்த நாள் தெரியவில்லை என்றாலும் ஆதி விநாயகர் கோவிலில் எப்போது வேண்டுமானாலும் பித்ருகடன் செய்யலாம்.
விநாயகர் வழிபாடு பித்ரு தோஷத்தையும் போக்கும் வல்லமை பொண்டது.

கோதாவரி நதிக்கரையில் போகவதி என்னும் பட்டணத்தை நற்சோமதிமகராஜா என்பவன் ஆண்டு வந்தான். அவனது சபைக்கு நாரத மகரிஷி ஒரு சமயம் வந்தார். அப்போது, இந்தப் பூவுலகில் எந்த தலம் மிகவும் சிறந்த புண்ணியஸ்தலம்?...’ என மன்னன் கேட்டான்.

அதற்கு நாரதர், ‘‘எந்தப் புண்ணியத் திருத்தலத்தில் பித்ருக்கள் திலநீர் பிண்டதானத்தை எதிரே தோன்றி ஏற்பார்களோ, அதுவே உத்தமமான புண்ணியஸ்தலம்!... ’ என்று பதில் அளித்தார். தலத்தின் பெருமையை மன்னவனே அறியட்டும் என ஊர்ப் பெயரைக் கூடச் சொல்லாமல் விடை பெற்றார் நாரதர். நாரதர் சொன்னபடி நற்சோதி மன்னன் இந்தியாவில் உள்ள அனைத்து தலங்களிலும் தில் (எள்) தர்ப்பணமும், பிண்டதானமும் செய்து கொண்டு வந்தான். கும்பகோணம் வந்து காவிரி ஆற்றில் நீராடி தர்ப்பணமும் செய்தான்.

‘எவ்வளவோ புண்ணிய நதிகளில் நீராடி தர்ப்பணம் செய்து விட்டேன். இன்னமும் பித்ருக்கள் யாரும் நேரில் காட்சி தந்து பிண்டங்களை வாங்க வில்லையே நம் நாட்டுக்கே திரும்பிச் சென்று விடலாமா?....’ என்று மனம் உடைந்து வருந்தினான் மன்னன். அப்போது நாரதர், மன்னன் முன் தோன்றினார். ‘‘கலங்காதே மன்னா! நான் கூறிய புண்ணியத்தலத்தின் அருகில் நீ வந்து விட்டாய் இங்கிருந்து கிழக்கே திருநாகேஸ்வரம் தலம். அதையடுத்து திருவீழிழலை... அதற்கு அப்பால் சிலகாததூரம் சென்றால் ‘திலதைப்பதி’ என்ற புண்ணியதலம் உள்ளது.

அங்கு ஓடும் ‘அரசி’ லாற்றில் நீராடி, தென்புலத் தாராகிய உன் பித்ருக்களுக்கு தில தர்ப்பணமும், பிண்டதானமும் செய்தால் அவர்கள் உன் முன் தோன்றி அதை வாங்கி உண்பார்கள்...’ என்று அருளாசி வழங்கினார். திலதைப்பதி வந்த நற்சோதிமன்னன் அங்கே தவம் செய்து கொண்டிருந்த காலவ முனிவரை வணங்கி ஆசி பெற்றான்.

மன்னன் வந்த நோக்கம் அறிந்த முனிவர், சிவாலயத்துக்குள் அழைத்துச் சென்று பொற்கொடி அன்னையையும், மந்தாரவனேஸ்வரர் பெருமானையும் தரிசனம் செய்வித்தார்! அமாவாசை தினத்தன்று பிரம்ம தீர்த்தத்தில் நீராடி நடுப்பகலில் சங்கல்பத்துடன் திலதர்ப்பணம், பிண்டம் (அன்னம்) இவற்றை படைத்தான் மன்னன் பித்ருக்கள் அவன் முன் தோன்றி தங்கள் கரங்களால் பிண்டத்தை ஏந்தி சாப்பிட்டு மகிழ்ந்து நல்லாசி அளித்து மறைந்தனர்!

‘திலம்’ என்றால் ‘எள்’ என்று பொருள். ‘தர்ப்பணம்’ என்றால் இறந்தவர்களுக்காக செய்யப்படும் பித்ரு கடன்கள் ‘புரி’ என்றால் தலம். எனவே ‘திலதர்ப்பணபுரி’ என்றால் எள் தர்பணம் செய்ய சிறந்த தலம் என்று பொருள். இந்த ஆதி விநாயகர் கோவிலின் வழியாகச் சென்ற ஸ்ரீராமன் இங்கு தான் தன் தந்தை தசரத மகாராஜாவுக்கு பித்ருகடன் செய்துள்ளார்.

பித்ரு சாபம், பித்ரு தோஷம் போன்றவற்றுக்கு இங்கு நேரில் வந்து தர்ப்பணம் செய்து பரிகாரம் காணலாம். தவிர, தாங்கள் மூதாதையர் இறந்த நாள் தெரியவில்லை என்றாலும் இந்த ஆதி விநாயகர் கோவிலில் எப்போது வேண்டுமானாலும் பித்ருகடன் செய்யலாம். ஆதி விநாயகர் என்று அழைக்கப்படும் நரமுக கணபதி மனித உருவத்தோடு ஜடாமுடி ஆயுதங்களை இரு கைகளிலும், வலக்கையை இடக்காலின் மீது வைத்த படியும் காட்சி கொடுக்கிறார்.

ஆதியில் பார்வதி தேவி பிடித்து வைத்த மஞ்சள் பிள்ளையார் தான் இப்படி நரமுக விநாயகராகக் காட்சியளித்தார் என்று சொல்லப்படுகிறது.
இந்த கோவிலின் ஈசன் பெயர் முக்தீஸ்வரர். இறைவி பெயர் சொர்ணவல்லி.

திருவாரூர் - மயிலாடுதுறை செல்லும் பஸ்சில் ஏறி பூந்தோட்டம் என்ற ஊரில் இறங்க வேண்டும். பின்பு அங்கிருந்து எரவாஞ்சேரி வழித்தடத்தில் இரண்டு கிலோ மீட்டர் சென்றால் ஆதி விநாயகர் கோவிலை அடையலாம்.
Tags:    

Similar News