ஆன்மிகம்

விநாயகர் வழிபாடு - தீரும் பிரச்சனைகளும், தோஷங்களும்

Published On 2018-10-09 07:33 GMT   |   Update On 2018-10-09 07:33 GMT
வன்னி மரத்தடியில் வீற்றிருக்கும் விநாயகரை அவிட்ட நட்சத்திரத்தன்று நெல்பொரியால் அர்ச்சனை செய்து அபிஷேகங்கள் செய்து வழிபாடு செய்தால் திருமணத்தடைகள் நீங்கி நல்வாழ்க்கை அமையும்.
திருமணத் தடை நீங்க :

வன்னி மரத்தடியில் வீற்றிருக்கும் விநாயகரை அவிட்ட நட்சத்திரத்தன்று நெல்பொரியால் அர்ச்சனை செய்து அபிஷேகங்கள் செய்து வணங்குவதுடன் ஏழைப் பெண்களுக்கு முடிந்தவரை தானங்கள் செய்வதனால் நமக்குள்ள திருமணத்தடைகள் நீங்கி நல்வாழ்க்கை அமையும். அதுவும் வலம்புரி விநாயகராக இருந்தால் வளமான வாழ்வு பெறலாம்.

தொழில் லாபம் கிட்டுவதற்கு :

அவிட்ட நட்சத்திரத்தன்று வன்னி மரத்தடியில் வீற்றிருக்கும் விநாயகருக்கு பொரியைப் நைவேத்தியமாகப் படைத்து அதை குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால் தொழிலில் நல்ல லாபம் அடையலாம்.

ஐந்து வகை எண்ணெய் வழிபாடு :

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் தேங்காய் எண்ணெய், நல்ல எண்ணெய், இலுப்ப எண்ணெய், விளக்கு எண்ணெய், பசு நெய் ஆகிய ஐந்து வகை எண்ணெய்களால் பஞ்ச தீபம் ஏற்றி விநாயகரை வழிபட்டால் மனதிற்கு ஏற்ற இல்லற வாழ்வு அமையும், செய்யும் தொழில் செழிப்பாக இருக்கும்.

உதவிகள் பெறுவதற்கு :

மேற்கு நோக்கியுள்ள அரசமரத்தடியில் அமர்ந்திருக்கும் விநாயகர் மிகவும் சக்தி வாய்ந்தவர். பூச நட்சத்திரத்தன்று அன்னாபிஷேகம் செய்து வழிபட்டால் விளைச்சல் பெருகி விவசாயம் தழைக்கும், உறவினர்கள் மனம் மகிழ்ந்து உதவி புரிவார்கள், பணக்கஷ்டங்கள் நீங்கி செழிப்பான வாழ்க்கை வாழ வகை செய்வார் கணபதி.

பதவி மாற்றம், இடமாற்றம் அடைய :

மூல நட்சத்திரத்தன்று சுந்தர விநாயகருக்கு பால்கோவாவை நைவேத்தியமாகப் படைத்து அந்த பால்கோவாவை தானமாக அளித்தால் பதவி மாற்றம், இடமாற்றம் போன்றவை எளிதாகும். நீங்கள் விரும்பியபடியே மாற்றங்கள் நிகழும்.

இழந்த வேலையை, பதவியை திரும்பப் பெற :

திருவாதிரை நட்சத்திரத்தன்று நர்த்தன விநாயகருக்கு கோதுமையால் செய்யப்பட்ட அல்வாவைக் கொண்ட காப்பிட்டு வந்தால் அபாண்டமாக பழி சுமத்தப்பட்டு பதவியை இழந்தவர்கள், வேலையிலிருந்து நீக்கப்பட்டவர்கள் போன்றவர்கள் மீண்டும் இழந்த பதவியையும் மன நிம்மதியையும் பெறுவார்கள்.

நவக்கிரக தோஷம் போக்கும் விநாயகர் :

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் திறந்த வெளியில் சோலைகளின் நடுவில் வன்னி மரத்தடியில் காட்சி தருகிறார் விநாயகர். அவரைச் சுற்றிலும் வன்னி, வேம்பு, மந்தாரை, அத்தி, நெல்லி, அரசு, வில்வம், பவளமல்லி, நாவல் ஆகிய ஒன்பது மரங்கள் காணப்படுகின்றன. ஒன்பது விருட்சங்களுடன் கூடிய விநாயகரை தரிசிப்பதால் நவக்கிரக தோஷங்கள் நீங்கி நல்வாழ்வு பெறலாம் என்பது ஐதீகம்.
Tags:    

Similar News