கிரிக்கெட்
null

ஒருநாள் கிரிக்கெட் அணுகு முறையை முற்றிலும் மாற்ற வேண்டும்- முன்னாள் தேர்வுக்குழு உறுப்பினர் கருத்து

Published On 2022-12-05 11:00 GMT   |   Update On 2022-12-05 11:00 GMT
  • இளம் வீரர்களை சுதந்திரமாக விளையாட அனுமதிக்க வேண்டும்.
  • ஆடுகளம் கொஞ்சம் சவால்கள் நிறைந்ததாக இருந்தால் நமது பேட்ஸ்மேன்கள் ரன் அடிக்க திணறுகிறார்கள்.

மும்பை:

2022 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணிக்கு மிகவும் ஏமாற்றம் கொடுக்கும் ஆண்டாகவே உள்ளது. இருதரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தொடர்ந்து வெற்றியைப் பெற்றது. எனினும் டி20 உலக கோப்பையில் தோல்வியை தழுவி அரை இறுதியில் இருந்து இந்திய அணி வெளியேறியது. இந்த நிலையில் வங்கதேசத்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதனால் இந்திய அணியை ஒட்டுமொத்தமாக மாற்ற வேண்டும் என்று முன்னாள் தேர்வு குழு உறுப்பினரும் , கிரிக்கெட் வீரருமான சபா கரிம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் ஒரு நாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் நமது கவனத்தை செலுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. முதலில் நமது ஒருநாள் மற்றும் டி20 அணியில் பிரச்சனை இருப்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அந்த பிரச்சனைகளை நீங்கள் சரி செய்தாலே போதும். இந்திய அணியின் வடிவத்தை ஒட்டுமொத்தமாக மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. நான் இதை பல நாட்களாக சொல்லிக் கொண்டிருக்கிறேன். இந்திய அணியில் பிரச்சனை இருக்கிறது என்பதை நீங்கள் ஒப்புக் கொண்டால், அதனை எப்படி தீர்க்க முயற்சி செய்வீர்கள். நம்முடைய கேம் பிளானை மாற்ற வேண்டும். நாம் விளையாடும் கிரிக்கெட் ஸ்டைலையும் அடியோடு மாற்ற வேண்டும்.

ஒரு நாள் கிரிக்கெட்டை அணுகும் முறையை நாம் ஒட்டுமொத்தமாக மாற்ற வேண்டும். அப்படி நீங்கள் மாற்றினால் அதற்கு தகுந்த மாதிரி வீரர்கள் உங்கள் அணியில் இருக்கிறார்களா? இல்லையா? என்பது குறித்து யோசிக்க வேண்டும். அப்படி வீரர்கள் இருந்தால் அவர்களுக்கு ஏற்ற சூழல் நிலவுகிறது என்பதை நீங்கள் யோசிக்க வேண்டும்.

இளம் வீரர்களை சுதந்திரமாக விளையாட அனுமதிக்க வேண்டும். நீ அதிரடியாக விளையாடு என்று சொன்னால் மட்டும் போதாது. ஆடுகளம் கொஞ்சம் சவால்கள் நிறைந்ததாக இருந்தால் நமது பேட்ஸ்மேன்கள் ரன் அடிக்க திணறுகிறார்கள். என்னைப் பொறுத்தவரை ஒவ்வொரு வீரர்களுக்கும் ஒவ்வொரு பொறுப்பை கொடுத்து அவர்களுக்கு என்று ஒரு ஸ்டைலை உருவாக்க வேண்டும். அப்படி செய்தால் தான் உங்களால் அதிரடியாக விளையாட முடியும் என்று கூறினார்.

இங்கிலாந்து அணியில் 2015 உலகக் கோப்பை படுதோல்விக்கு பிறகு ஒரு நாள் கிரிக்கெட்டில் அவர்கள் புதிய கண்ணோட்டத்தில் அணுகி தற்போது ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள்.இதே போன்ற நிலையை இந்திய கிரிக்கெட்டிலும் கொண்டு வர வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர். ஏற்கனவே டி20 கிரிக்கெட்டில் சீனியர்கள் நீக்கப்பட்டு அதிரடி இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News