இளம் இந்திய வீரர்களுக்கு இன்ஸ்டாவில் ஸ்டோரி வைத்த ரோகித்
- 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
- இரு அணிகளுக்கு இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி வருகிற 23-ந் தேதி தொடங்குகிறது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்தும், அடுத்த இரண்டு போட்டிகளில் இந்திய அணியும் வெற்றி பெற்று தொடரில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்டில் 22 வயதே ஆகும் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடித்து அணியின் வெற்றிக்கு உதவினார். 2-வது இன்னிங்சில் 236 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட அவர் 214 ரன்கள் குவித்தார்.
மற்றொரு இந்திய பேட்ஸ்மேன் சர்பராஸ் கான் இந்த போட்டியில்தான் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் ஆகியுள்ளார். அவர் முதல் இன்னிங்சில் 62 ரன்களும், 2-வது இன்னிங்சில் 68 ரன்களும் எடுத்து இந்திய அணி நல்ல ஸ்கோரை எட்டுவதற்கு உதவினார். குறிப்பாக சர்பராஸும் - ஜெய்ஸ்வாலும் இணைந்து 2-வது இன்னிங்சில் 5-வது விக்கெட்டுக்கு 172 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
இதேபோன்று இந்த டெஸ்டில் அறிமுகமான விக்கெட் கீப்பர் துருவ் ஜுரெல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அணியில் சீனியர் ஆட்டக்காரர்கள் இல்லாத நிலையில் இளம் வீரர்களே சிறப்பான ஆட்டத்தை விளையாடி அணிக்கு வெற்றி தேடித் தந்துள்ளனர். இவர் 2-வது இன்னிங்சில் சிறப்பான ஒரு ரன் அவுட் செய்து ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளார்.
இந்நிலையில் இவர்கள் 3 பேரையும் தனது சமூக வலைதள பக்கத்தில் ஸ்டோரியாக வைத்து இந்த நாட்களில் குழந்தைகள் என பதிவிட்டிருந்தார். இது தற்போது வைரலாகி வருகிறது.