கிரிக்கெட்

இறுதிப் போட்டியில் டெல்லியுடன் மோதுவது யார்? மும்பை-உ.பி. வாரியர்ஸ் அணிகள் நாளை மோதல்

Update: 2023-03-23 12:10 GMT
  • மும்பை 2-வது இடத்தையும், உ.பி. 3-வது இடத்தையும் பிடித்து `பிளே ஆப்’ சுற்றுக்கு முன்னேறின.
  • இரு அணிகளும் மோதிய `லீக்’ சுற்றில் தலா ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றன.

மும்பை:

முதலாவது மகளிர் பிரீமியர் `லீக்' 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் நடைபெற்று வருகிறது.

இதில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் ஜெயன்ட்ஸ், உ.பி.வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்றன. `லீக்' ஆட்டத்தில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதின. கடந்த 4-ந்தேதி தொடங்கிய இந்தப் போட்டியில் `லீக்' சுற்று நேற்று முன்தினம் முடிவடைந்தது.

இதன் முடிவில் டெல்லி, மும்பை அணிகள் தலா 6 வெற்றி, 2 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்றன. நிகர ரன் ரேட் அடிப்படையில் டெல்லி முதல் இடத்தை பிடித்து நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

மும்பை 2-வது இடத்தையும், உ.பி. 3-வது இடத்தையும் பிடித்து `பிளே ஆப்' சுற்றுக்கு முன்னேறின. உ.பி. 8 புள்ளி (4 வெற்றி, 4 தோல்வி) பெற்றது. பெங்களூரு, குஜராத் தலா 4 புள்ளியுடன் (2 வெற்றி, 6 தோல்வி) 4-வது, 5-வது இடங்களை பிடித்து வெளியேறின.

2 நாட்கள் ஓய்வுக்கு பிறகு எலிமினேட்டர் ஆட்டம் டி.ஒய்.பட்டீல் மைதானத்தில் நாளை (24-ந்தேதி) இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் மும்பை-உ.பி. அணிகள் மோதுகின்றன.

வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டியில் டெல்லியுடன் மோதும். இறுதி ஆட்டம் 26-ந்தேதி நடக்கிறது. தோல்வி அடையும் அணி வெளியேறும்.

இதனால் வெற்றிக்காக மும்பை இந்தியன்ஸ், உ.பி. வாரியர்ஸ் அணிகள் கடுமையாக போராடும். இரு அணிகளும் மோதிய `லீக்' சுற்றில் தலா ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றன. எனவே நாளைய ஆட்டம் சுவாரசியமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News