இதய ஆரோக்கிய விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டி: சீருடைகள் அறிமுக விழா
- பிரசாந்த் பல்நோக்கு மருத்துவமனை சார்பில் கார்ப்பரேட் கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது
- கார்ப்பரேட் நிறுவனங்களின் அதிகாரிகள் கலந்துகொண்டு சீருடைகளை அறிமுகப்படுத்தினர்.
பொன்னேரி:
இளம் வயதில் மாரடைப்பால் ஏற்படும் உயிர் இழப்புகளை தவிர்க்கும் வகையில் இளைஞர்களிடம், உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு போன்றவற்றின் அவசியத்தை வலியுறுத்தி சென்னையில் உள்ள பிரசாந்த் பல்நோக்கு மருத்துவமனை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக பொன்னேரியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் கார்ப்பரேட் கிரிக்கெட் என்ற பெயரில் கிரிக்கெட் விழிப்புணர்வு விளையாட்டுப் போட்டி நடைபெற உள்ளது. ஜனவரி 21 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 5ஆம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் 36 தனியார் நிறுவனங்கள் சார்பில் 36 அணிகள் களம் இறங்க உள்ளன.
இந்த போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் அணிந்து கொள்ளும் சீருடைகள் அறிமுக விழா நடைபெற்றது. இதில் 36 கார்ப்பரேட் நிறுவனங்களின் அதிகாரிகள் கலந்துகொண்டு சீருடைகளை அறிமுகப்படுத்தினர்.
இதுகுறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறுகையில், இளம் இதயங்களைக் காப்போம் என்ற தலைப்பில் இளைஞர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இதுபோன்ற போட்டிகளை நடத்துவதாக தெரிவித்தனர்.