கிரிக்கெட்

ஹாட்ரிக் வெற்றி ஆர்வத்தில் சிஎஸ்கே: லக்னோ சூப்பர் ஜெயன்ட்சுடன் நாளை மோதல்

Published On 2024-04-18 08:15 GMT   |   Update On 2024-04-18 08:15 GMT
  • சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த 3 ஆட்டத்திலும் சி.எஸ்.கே. வெற்றி பெற்றது.
  • லக்னோ அணி 3 வெற்றி, 3 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் உள்ளது.

லக்னோ:

17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 22-ந் தேதி சென்னையில் தொடங்கியது. இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இந்த போட்டி தொடர் நடைபெற்று வருகிறது.

இதில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் உள்ளூர், வெளியூர் என தலா 14 ஆட்டங்களில் மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும்.

நடப்பு சாம்பியனும், ஐ.பி.எல். கோப்பையை 5 முறை வென்ற அணியுமான சென்னை சூப்பர் கிங்ஸ் 4 வெற்றி, 2 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளது.

சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த 3 ஆட்டத்திலும் சி.எஸ்.கே. (பெங்களூரு 6 விக்கெட் , குஜராத் 63 ரன், கொல்கத்தா 7 விக்கெட்) வெற்றி பெற்றது. வெளியூரில் ஆடிய 3 போட்டியில் ஒன்றில் (மும்பை) வென்றது. டெல்லி, ஐதராபாத்திடம் தோற்றது.

ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்சை நாளை ( 19-ந் தேதி) எதிர் கொள்கிறது. இந்த ஆட்டம் இரவு 7.30 மணிக்கு லக்னோவில் நடக்கிறது.

லக்னோவை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் 5-வது வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. சி.எஸ்.கே. அணி தொடர்ச்சியாக 2 ஆட்டத்தில் வெற்றி பெற்று இருந்தது. இதனால் நாளைய போட்டியில் ஹாட்ரிக் வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சென்னை சூப்பர் கிங்ஸ் சம பலத்துடன் திகழ்கிறது.

பேட்டிங்கில், ஷிவம் துபே (242 ரன்) கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் (224), டோனி ஆகியோர் மிகவும் நல்ல நிலையில் உள்ளன.

தொடக்க வீரர் ரவீந்திரா, மிச்சேல், ரகானே ஆகியோர் பேட்டிங்கில் முன்னேற்றம் அடைவது அவசியமாகும். புதுமுக வீரர் சமீர் ரிஸ்விக்கு வாய்ப்பு கொடுத்து முன் வரிசையில் ஆட வைக்க வேண்டும்.

பந்து வீச்சில் முஸ்டாபிசுர் ரகுமான் (10 விக்கெட்), பதிரனா (8 விக்கெட்), ஜடேஜா ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

லக்னோ அணி 3 வெற்றி, 3 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் உள்ளது. அந்த அணி பஞ்சாப் (21 ரன்), பெங்களூரு (28 ரன்) குஜராத் (33 ரன்) ஆகிய வற்றை வென்று இருந்தது. ராஜஸ்தான் (20 ரன்), டெல்லி (6 விக்கெட்), கொல்கத்தா (8 விக்கெட்) ஆகியவற்றிடம் தோற்றது.

லக்னோ ஹாட்ரிக் தோல்வியை தவிர்த்து 4-வது வெற்றியை பெறும் வேட்கையில் உள்ளது. அந்த அணியில் கேப்டன் லோகேஷ் ராகுல், நிக்கோலஸ் பூரன், ஸ்டோன்ஸ், யாஸ் தாக்கூர், ரவி பிஷ்னோய் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

இரு அணிகளும் இதுவரை 3 முறை மோதியுள்ளன. இதில் இரு அணிகளும் தலா ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றன. ஒரு போட்டி முடிவு இல்லை.

Tags:    

Similar News