கிரிக்கெட்

நானே காரணம்...வாஷிங்டன் சுந்தர் ரன் அவுட் குறித்து சூர்யகுமார் யாதவ் கருத்து- வீடியோ

Published On 2023-01-30 11:19 GMT   |   Update On 2023-01-30 11:19 GMT
  • மைதானத்தின் தன்மை சற்று வித்தியாசமாக இருந்தது. அதனால் இறுதி வரை கொண்டு சென்று விளையாட வேண்டும் என்று நினைத்தேன்.
  • வாஷிங்டன் சுந்தர் ஆட்டம் இழந்ததும் நிச்சயம் ஒருவர் கடைசி வரை நிக்க வேண்டும் என்பதனாலேயே நான் இறுதிவரை களத்தில் நின்றேன்.

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டியில் இந்தியா கடைசி ஓவரில் த்ரில் வெற்றியை பெற்றது. இதனால் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது இந்தியா.

இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்ற சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்த போட்டியில் வாஷிங்டன் ரன் அவுட் ஆனதற்கு நானே காரணம் என சூர்யகுமார் யாதவ் கூறினார்.

இது குறித்து சூர்யகுமார் யாதவ் கூறியதாவது:-

இன்றைய போட்டியில் நான் விளையாடிய விதம் மிகவும் வித்தியாசமாகவே இருந்தது. ஏனெனில் மைதானத்தில் உள்ள சூழ்நிலையை நாம் கருத்தில் கொண்டு விளையாட வேண்டியது அவசியம். அந்த வகையில் நான் இன்று பேட்டிங் செய்ய களமிறங்கும் போது மைதானத்தின் தன்மை சற்று வித்தியாசமாக இருந்தது. அதனால் இறுதி வரை கொண்டு சென்று விளையாட வேண்டும் என்று நினைத்தேன்.


வாஷிங்டன் சுந்தர் ஆட்டம் இழந்ததும் நிச்சயம் ஒருவர் கடைசி வரை நிக்க வேண்டும் என்பதனாலேயே நான் இறுதிவரை களத்தில் நின்றேன். வாஷிங்டன் சுந்தர் ஆட்டம் இழந்தது முற்றிலுமாக என்னுடைய தவறுதான். அது கண்டிப்பாக ரன் கிடையாது. ஆனால் நான் பந்து எங்கு சென்றது என்று கவனிக்காமலே ஓடி வந்து அவர் ஆட்டமிழக்க காரணமாக அமைந்தேன்.

இந்த மைதானத்தில் பேட்டிங் செய்வது மிகவும் கடினமாக இருந்தது. முதல் இன்னிங்சை விட இரண்டாவது இன்னிங்ஸில் பந்து அதிக அளவு திரும்பியது. எனவே பொறுமையாக இருந்து இறுதிவரை அணியை கொண்டு செல்ல வேண்டும் என்று நினைத்தேன். அதேபோன்று இறுதி நேரத்தில் ஹார்டிக் பாண்டியா என்னிடம் வந்து கண்டிப்பாக இந்த பந்தில் உன்னால் போட்டியை ஃபினிஷிங் செய்ய முடியும் என்று எனக்கு தைரியத்தை அளித்தார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News