null
U19 ஆசிய கோப்பை: இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா இந்தியா? 139 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை
- இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 138 ரன்கள் எடுத்தது.
- இந்திய தரப்பில் ஹெனில் படேல், கனிஷ்க் சௌஹான் ஆகியோர் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
துபாய்:
19 வயதுக்குட்பட்டோருக்கான (இளையோர்) 12-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் நடந்து வருகிறது. இதில் இன்று நடக்கும் அரையிறுதியில் ஆயுஷ் மாத்ரே தலைமையிலான இந்திய அணி, இலங்கையுடன் மோதுகிறது.
இந்த போட்டி இன்று காலை 10.30 மணிக்கு தொடங்க வேண்டியது. மழை காரணமாக டாஸ் கூட போடமுடியாமல் இருந்தது. இதனையடுத்து போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சை தேர்வு செய்தது. மழை காரணமாக ஆட்டம் 20 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
இந்நிலையில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 28 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனையடுத்து கேப்டன் விமத் தின்சாரா மற்றும் சாமிக ஹீனடிகல ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 45 ரன்கள் சேர்த்தது. 32 ரன்கள் எடுத்த போது தின்சாரா ஆட்டமிழந்தார்.
அதனை தொடர்ந்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். 7-வது விக்கெட்டுக்கு சாமிக ஹீனடிகலவுடன் செத்மிகா செனவிரத்ன ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி 52 ரன்கள் பாட்னர்ஷிப் அமைத்தது. இதனால் இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 138 ரன்கள் எடுத்தது. இந்திய தரப்பில் ஹெனில் படேல், கனிஷ்க் சௌஹான் ஆகியோர் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.