கிரிக்கெட் (Cricket)

ஒளிபரப்பு நிறுவனத்திடம் இருந்து சட்ட நடவடிக்கை சந்திக்க நேரிடும்- பாகிஸ்தானுக்கு ஐசிசி மீண்டும் எச்சரிக்கை

Published On 2026-02-04 13:19 IST   |   Update On 2026-02-04 13:19:00 IST
  • பாகிஸ்தானின் ஆண்டு வருவாய் பகிர்வான ரூ.316 கோடியை ஐ.சி.சி. நிறுத்தி வைத்துள்ளது.
  • ஐ.சி.சி.யின் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

துபாய்:

20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுடன் விளையாட மாட்டோம் என்று பாகிஸ்தான் அரசு அறிவித்தது. அதே நேரத்தில் 20 ஓவர் உலகக் கோப்பையில் ஆடுவோம் என்றும் தெரிவித்து இருந்தது.

இதை தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) எச்சரிக்கை விடுத்தது. கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் இதனால் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியது.

பாகிஸ்தான் அரசின் முடிவுப்படி இந்தியாவுக்கு எதிராக விளையாட இயலாது என்ற முடிவில் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் உறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை ஐ.சி.சி. மீண்டும் எச்சரித்துள்ளது.

பாகிஸ்தானுடனான போட்டியை புறக்கணித்தால் ஒளிபரப்பு நிறுவனத்திடம் இருந்து சட்ட நடவடிக்கையை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளது.

பாகிஸ்தானின் ஆண்டு வருவாய் பகிர்வான ரூ.316 கோடியை ஐ.சி.சி. நிறுத்தி வைத்துள்ளது. அந்த நிதியில் இருந்து ஒளிபரப்பாளர்களுக்கு ஐ.சி.சி. செலுத்த வாய்ப்புள்ளது. ஒளிபரப்பு நிறுவனம் தொடுக்கும் வழக்கில் பாகிஸ்தானுக்கு எந்த விதத்திலும் ஐ.சி.சி. உதவியாக இருக்காது என்றும் கூறப்படுகிறது. டி.ஆர்.சி. குழுவிடம் ஒளிபரப்பு நிறுவனம் மேல் முறையீடு செய்யலாம்.

இதற்கிடையே ஐ.சி.சி.யின் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags:    

Similar News