கிரிக்கெட் (Cricket)

U19 உலகக் கோப்பை: இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் அரைஇறுதியில் இன்று மோதல்

Published On 2026-02-04 08:00 IST   |   Update On 2026-02-04 08:00:00 IST
  • இந்திய அணி 10-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைய தீவிரமாக உள்ளது.
  • ஆப்கானிஸ்தான் அணி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற போராடும்.

ஹராரே:

16-வது இளையோர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) ஜிம்பாப்வே மற்றும் நமிபியாவில் நடந்து வருகிறது. 16 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் சூப்பர் சிக்ஸ் சுற்று முடிவில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் (குரூப் 1), இந்தியா, இங்கிலாந்து (குரூப் 2) அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின. இதில் ஹராரேயில் இன்று (புதன்கிழமை) அரங்கேறும் இரண்டாவது அரைஇறுதியில் இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகள் (பிற்பகல் 1 மணி) மோதுகின்றன.

5 முறை சாம்பியனான இந்திய அணி லீக்கில் அமெரிக்கா, வங்காளதேசம், நியூசிலாந்தையும், சூப்பர் சிக்ஸ் சுற்றில் ஜிம்பாப்வே, பாகிஸ்தானையும் துவம்சம் செய்து அரைஇறுதியை எட்டியது.

ஆயுஷ் மாத்ரே தலைமையிலான இந்திய அணியில் பேட்டிங்கில் அபிக்யான் குண்டு (199 ரன்), 'அதிரடி புயல்' வைபவ் சூர்யவன்ஷி (196), விஹான் மல்கோத்ரா (172), வேதாந்த் திரிவேதி சிறப்பாக செயல்படுகிறார்கள். ஆனால் தொடக்கம் தான் திருப்திகரமாக இல்லை. தொடக்க விக்கெட்டுக்கு 50 ரன்களுக்கு மேல் ஒரு முறை கூட எடுக்கவில்லை. தொடர்ந்து சொதப்பும் தொடக்க ஆட்டக்காரர் ஆரோன் ஜார்ஜ் நிலைத்து நின்று ஆட வேண்டியது அவசியமானதாகும். பந்து வீச்சில் ஹெனில் பட்டேல், அம்ப்ரிஷ் (தலா 11 விக்கெட்), ஹிலான் பட்டேல் பலம் சேர்க்கின்றனர். பந்து வீச்சில் நல்ல பங்களிப்பை அளிக்கும் ஆயுஷ் மாத்ரே பேட்டிங்கிலும் கணிசமாக ரன் எடுத்தால் பேட்டிங் மேலும் வலுவடையும்.

ஆப்கானிஸ்தான் அணி லீக்கில் தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட்இண்டீஸ், தான்சானியாவையும், சூப்பர் சிக்ஸ் சுற்றில் அயர்லாந்தையும் வீழ்த்தியது. இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

ஆப்கானிஸ்தான் அணியில் பேட்டிங்கில் பைசல் ஷினோஜதா (325 ரன்), உஸ்மான் சதத் (183), கேப்டன் மக்பூப் கானும் (178), பந்து வீச்சில் நூரிஸ்டானி ஓமர்ஜாய், அப்துல் அஜிசும் நம்பிக்கை அளிக்கின்றனர்.

வலுவான இந்திய அணி 10-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைய தீவிரமாக உள்ளது. நடப்பு தொடரில் ஆதிக்கம் செலுத்தும் இந்திய அணியின் சவாலை சமாளிப்பது ஆப்கானிஸ்தானுக்கு எளிதான விஷயமாக இருக்காது. அதேநேரத்தில் ஆப்கானிஸ்தான் அணி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற போராடும். எனவே ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

இளையோர் ஒரு நாள் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 12 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் 10-ல் இந்தியாவும், 2-ல் ஆப்கானிஸ்தானும் வெற்றி பெற்றுள்ளன.

Tags:    

Similar News