கிரிக்கெட் (Cricket)

உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியா சாதனை.. இலங்கை வேதனை

Published On 2023-10-17 11:14 IST   |   Update On 2023-10-17 11:14:00 IST
  • இலங்கைக்கு எதிராக ஆஸ்திரேலியா 35.2 ஓவர்களில் 215 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
  • நடப்பு தொடரில் ஆஸ்திரேலியாவின் முதல் வெற்றி இதுவாகும்.

லக்னோ:

13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த நிலையில் லக்னோவில் நேற்று அரங்கேறிய 14-வது லீக்கில் முன்னாள் சாம்பியன்களான ஆஸ்திரேலியாவும், இலங்கையும் மல்லுக்கட்டின. இதில் டாஸ் வென்ற இலங்கை பொறுப்பு கேப்டன் குசல் மென்டிஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

அதன்படி களமிறங்கிய இலங்கை அணி 43.3 ஓவர்களில் 209 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இலங்கை அணி கடைசி 44 ரன்னுக்கு 8 விக்கெட்டுகளை பறிகொடுத்தது கவனிக்கத்தக்கது. ஆஸ்திரேலியா தரப்பில் ஆடம் ஜம்பா 4 விக்கெட்டும், கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் 210 ரன் இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலிய அணி 35.2 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 215 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இலங்கை தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் மதுஷன்கா 3 விக்கெட் வீழ்த்தினார். ஆடம் ஜம்பா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

நடப்பு தொடரில் ஆஸ்திரேலியாவின் முதல் வெற்றி இதுவாகும். தனது முதல் இரு ஆட்டங்களில் தோற்று இருந்தது. இன்னும் வெற்றிக் கணக்கை தொடங்காத இலங்கை தொடர்ச்சியாக சந்தித்த 3-வது தோல்வியாகும். இலங்கை அணி இனி எஞ்சிய 6 லீக்கிலும் வெற்றி பெற்றால் மட்டுமே அரைஇறுதி குறித்து நினைத்து பார்க்க முடியும்.

ஆஸ்திரேலியா சாதனை- இலங்கை வேதனை

* உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இலங்கையின் 42-வது தோல்வி (83 ஆட்டத்தில்) இதுவாகும். இதன் மூலம் உலகக் கோப்பையில் அதிக தோல்விகளை சந்தித்த மோசமான அணிகளின் சாதனை பட்டியலில் ஜிம்பாப்வேயை (42 தோல்வி) சமன் செய்துள்ளது.

* உலகக் கோப்பையில் 1996-ம் ஆண்டுக்கு பிறகு ஆஸ்திரேலியாவை தோற்கடித்ததில்லை என்ற இலங்கையின் சோகம் தொடருகிறது. இலங்கைக்கு எதிராக ஆஸ்திரேலியாவின் 9-வது வெற்றி இதுவாகும். உலகக் கோப்பையில் குறிப்பிட்ட ஒரு அணிக்கு எதிராக அதிக வெற்றிகளை குவித்த அணியாக ஆஸ்திரேலியா வலம் வருகிறது.

Tags:    

Similar News