கிரிக்கெட் (Cricket)

ஏலம் முடிந்த பிறகும் என்னால் அழுகையை அடக்க முடியவில்லை: சிஎஸ்கே வீரர் உருக்கம்

Published On 2025-12-17 12:46 IST   |   Update On 2025-12-17 12:46:00 IST
  • ஏலம் முடிந்த பிறகும் நான் அழுதுகொண்டே இருந்தேன்.
  • என்னைச் சுற்றியிருந்தவர்கள் எல்லாம் மகிழ்ச்சியில் நடனமாடினார்கள்.

ஐபிஎல் தொடரின் 19-வது சீசனுக்கான மினி ஏலம் நேற்று நடைபெற்றது. இதில் ராஜஸ்தானை சேர்ந்த 19 வயதான கார்த்திக் சர்மா (அன்கேப்ட் வீரர்) அடிப்படை விலை ரூ.30 லட்சத்தில் இருந்து ரூ.14.20 கோடிக்கு ஏலம் போனார். இவரை சிஎஸ்கே அணி ஏலம் எடுத்தது.

கார்த்திக் சர்மாவை வாங்க ஆரம்பத்தில் லக்னோ மற்றும் மும்பை அணிகள் ஆர்வம் காட்டின. பின்னர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தீவிரமாகப் களமிறங்கியது. கொல்கத்தா அவரை வாங்கிவிடும் என்று நினைத்த நேரத்தில், சிஎஸ்கே உள்ளே புகுந்து விலையை எகிற வைத்தது. 10 கோடியைத் தாண்டியதும் ஐதராபாத் (SRH) அணி போட்டிக்கு வந்தது. ஆனால், விடாப்பிடியாக நின்ற சிஎஸ்கே, இறுதியில் ரூ.14.2 கோடிக்கு கார்த்திக் சர்மாவைத் தட்டித் தூக்கியது.

ஏலத்தை கார்த்திக் சர்மா, நேரலையில் பார்த்துக் கொண்டிருந்தார். தனக்கான ஏலம் தொடங்கிய விதம் குறித்தும், அது முடிந்த பிறகு தனது மனநிலை குறித்தும் அவர் உருக்கமாகப் பேசியுள்ளார். அதில், நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். ஆனால் அந்தத் தருணத்தில் என்னால் அழுகையை அடக்க முடியவில்லை. ஏலம் தொடங்கியபோது, 'என்னை யாரும் எடுக்க மாட்டார்களோ?' என்று பயந்தேன். ஆனால் ஏலம் சூடுபிடித்துத் தொகை எகிறத் தொடங்கியதும், என் கண்களில் இருந்து கண்ணீர் கொட்டத் தொடங்கியது.

ஏலம் முடிந்த பிறகும் நான் அழுதுகொண்டே இருந்தேன். என்னைச் சுற்றியிருந்தவர்கள் எல்லாம் மகிழ்ச்சியில் நடனமாடினார்கள். ஆனால் நானோ அழுதுகொண்டிருந்தேன். அந்த அளவுக்கு நான் மகிழ்ச்சியாக இருந்தேன். என் உணர்வுகளை விவரிக்க வார்த்தைகளே இல்லை.

முதல்முறையாக நான் மஹி பாய் (தோனி) உடன் விளையாடப் போகிறேன். அவரிடம் இருந்து நிறையக் கற்றுக்கொள்ளலாம் என்பதால் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். முதன்முறையாக ஏலத்தில் எடுக்கப்பட்டதே இவ்வளவு பெரிய தொகைக்கு என்பது நம்பமுடியாத ஒன்று என கார்த்திக் கூறினார்.

Tags:    

Similar News