ஆஸ்திரேலியாவில் ஒரு ஓவரின் அனைத்து பந்திலும் விக்கெட் வீழ்த்தி சாதனை
- கடைசி ஓவரில் 4 ரன்கள் தேவை என்ற நிலையில், கைவசம் 6 விக்கெட் இருந்தது.
- கேட்ச் மூலம் 4 விக்கெட், போல்டு மூலம் இரண்டு விக்கெட் கைப்பற்றினார் பந்து வீச்சாளர்.
ஆஸ்திரேலியாவில் 3-வது டிவிசன் போட்டியில் கிரிக்கெட் வீரர் ஒருவர் ஒரு ஓவரில் 6 பந்துகளிலும் விக்கெட் வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார்.
காரேத் மோர்கன் மாவட்ட கிரிக்கெட் கிளப் அணியான முட்கீரபா நெராங்காவின் கேப்டனாக இருந்து வருகிறார். இவர் கடந்த சனிக்கிழமை சர்பர்ஸ் பாரடைஸ் அணிக்கெதிராக விளையாடினார்.
முதலில் விளையாடிய முட்கீரபா நெராங்கா 177 ரன்கள் எடுத்தது. பின்னர் சர்பர்ஸ் பாரடைஸ் அணி 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது. 40 ஓவர்கள் கொண்ட போட்டியில் பாரடைஸ் அணி 39 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்திருந்தது.
கடைசி ஓவரில் 4 ரன்கள் தேவைப்பட்டது. கைவசம் 6 விக்கெட் இருந்தது. கடைசி ஓவரை காரேத் மோர்கன் வீசினார். யாரும் எதிர்பாராத வகையில் ஆறு பந்துகளிலும் விக்கெட் வீழ்த்தினார். இதனால் சர்பர்ஸ் பாரடைஸ் அணி 174 ரன்களில் ஆல்-அவுட் ஆகி தோல்வியை சந்தித்தது.
இதன்மூலம் ஒரே ஓவரில் அனைத்து பந்துகளிலும் விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை காரேத் மோர்கன் படைத்துள்ளார். இதில் முதல் நான்கு விக்கெட்டுகளையும் கேட்ச் மூலமாகவும், கடைசி இரண்டு விகெ்கெட்டுகளை போல்டு மூலமாகவும் வீழ்த்தினார்.
தொழில்முறை கிரிக்கெட்டில் நியூசிலாந்து வீரர் நீல் வாக்னர் ஒரே ஓவரில் ஐந்து விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். வங்காளதேசம வீரர் அல்-அமின் ஹொசைன், இந்தியாவின் அமிமன்யூ மிதுன் ஆகியோரும் ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளனர்.