சினிமா செய்திகள்
null

மனிதாபிமானமற்ற செயலுக்கு மன்னிப்பு கோரிய நாகர்ஜுனா

Published On 2024-06-24 03:49 GMT   |   Update On 2024-06-24 04:23 GMT
  • தனுஷ் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகும் புதிய படம் குபேரா.
  • இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனுஷ் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகும் புதிய படம் குபேரா. சேகர் கம்முலா இயக்கும் இந்த படத்தில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நாகர்ஜூனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. பெரும் தயாரிப்பாளரான ஸ்ரீ வெங்கடேஷ்வர சினிமாஸ் நிறுவனம் இப்படத்தை இணைந்து தயாரிக்கிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைப்பெறவுள்ளது அதில் நாகர்ஜுனா மற்றும் தனுஷ் இடையிலான சண்டை காட்சி படமாக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில் கலந்து கொள்வதற்காக நாகர்ஜுனா மற்றும் தனுஷ் நேற்று ஐதராபாத் விமான நிலையம் வந்தனர். அப்போது நாகர்ஜுனா நடந்து வருகையில் ஏர்போர்ட்டில் பணியாற்றும் ஒரு முதியவர் நாகர்ஜுனாவை காண அவரை நெருங்குகிறார்.

ஆனால் நாகர்ஜுனாவின் பாதுகாவலர் அந்த நபரை நாகர்ஜூனாவை நெருங்க விடாமல் பிடித்து தள்ளி விடுகிறார். அதில் அந்த முதியவர் நிலை தடுமாறி விழப்போக பின் தட்டு தடுமாறி அவர் விழாமல் நிற்கிறார். இதை நடிகர் நாகர்ஜுனா பார்த்தும் பார்க்காததுப் போல் கடந்து போகிறார். அவருக்கு பின் வந்த தனுஷ் இவரையும் அந்த ஊழியரையும் மாற்றி மாற்றி பார்த்துவிட்டு கடந்து செல்கிறார்.

இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் இந்த பதிவை பார்த்து விட்டு நாகர்ஜுனா செய்தது மிகப்பெரிய தவறு, மனிதாபமற்ற செயல், இதற்கு அவர் கண்டிப்பாக அந்த முதியவரிடம் மன்னிப்பு கேட்டே தீர வேண்டும் என கமெண்ட்சுகளை பதிவு செய்து வருகின்றனர்.

இதையடுத்து, நடிகர் நாகர்ஜூனா தனது எக்ஸ் தள பதிவில் விமான நிலைய சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பான பதிவில் அவர், இந்த விவகாரம் இப்போது தான் என் கவனத்திற்கு வந்தது. இந்த சம்பவம் நடந்திருக்கக்கூடாது. அந்த ஜென்டில்மேனிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கிறேன், என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News