சினிமா

என்னை விட கமல்ஹாசன் படங்களுக்கு நல்ல பாடல்களை கொடுத்திருக்கிறார் - இளையராஜா விழாவில் ரஜினி பேச்சு

Published On 2019-02-04 05:25 GMT   |   Update On 2019-02-04 05:25 GMT
தயாரிப்பாளர் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட இளையராஜா 75 இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற ரஜினி, எனது படங்களை விட கமல்ஹாசன் படங்களுக்கு நல்ல பாடல்களை கொடுத்திருக்கிறார் என்றார். #Ilayaraja75 #Rajinikanth
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில், இளையராஜா 75வது பிறந்தநாளை முன்னிட்டு இளையராஜா 75 என்ற இசை நிகழ்ச்சி சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடந்தது.

2-வது நாள் நிகழ்ச்சியாக நேற்று இளையராஜாவின் இசை கச்சேரி நடந்தது. இதில் முன்னணி பாடகர்-பாடகிகள் பங்கேற்று இளையராஜா இசையமைத்த படங்களில் இருந்து பாடல்களை பாடினார்கள். ஹங்கேரி இசை குழுவினரும் இதில் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:-

இளையராஜாவுக்கு இசை அருள் இருக்கிறது. தானாக வளர்வது சுயம்பு லிங்கம். இளையராஜாவின் இசையும் சுயம்பு லிங்கம் போன்றது. அவர் இசை உலகின் சுயம்பு லிங்கம். முதல் படத்தில் இருந்து இப்போது வரை அவருடைய இசை உயிரோடு இருக்கிறது. தயாரிப்பாளர்கள் சங்கம் இளையராஜாவுக்கு 75-வது பிறந்தநாள் விழாவையும், பாராட்டு விழாவையும் நடத்தி உள்ளது.



இதில் நானும் பங்கேற்பதில் மகிழ்ச்சி. இளையராஜாவை ‘சார்’ என்று தான் நான் அழைத்து வந்தேன். ஒருகட்டத்தில் ஆன்மிகவாதியாக பார்த்தேன். ரமண மகரிஷியை எனக்கு அறிமுகம் செய்துவைத்தது இளையராஜாதான். எப்போதும் மாலை அணிந்துகொண்டு இருக்கும் இளையராஜாவை பார்த்து நான், பின்னர் ‘சாமி’ என்று அழைக்க ஆரம்பித்தேன்.

பாடல்களை மட்டும் வைத்து பிரபலமானவர் என்று இளையராஜாவை மதிப்பிட முடியாது. அதற்கும் மேலாக அவர் வாழ்க்கை தியாகம் நிறைந்தது. கஷ்டப்பட்ட எத்தனையோ தயாரிப்பாளர்களுக்கு உதவி செய்து இருக்கிறார். 1980 கால கட்டங்களில் பொங்கல், தீபாவளி பண்டிகைகளுக்கு 13, 14 படங்கள் என்று வெளியாகும். அவற்றில் 10, 12 படங்கள் இளையராஜா இசையமைத்தவைகளாகவே இருக்கும்.

நிறைய தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களுக்கு ரீ-ரிக்கார்டிங் செய்ய இளையராஜா ஸ்டூடியோவில் வரிசையில் நிற்பார்கள். அவர் பாடல்களுக்கு இசையமைத்து ரீ-ரிக்கார்டிங் செய்துவிட்டால், அந்த படத்தின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுவிடும்.

ஒரே நாளில் 3 படங்களுக்கு கூட தூங்காமல் ரீ-ரிக்கார்டிங் செய்திருக்கிறார். ஆனால் இப்போது ஒரு படத்துக்கு ரீ-ரிக்கார்டிங் செய்ய 30 நாட்கள் ஆகிறது. தயாரிப்பாளர்கள் கஷ்டப்படக்கூடாது என்ற ஒரே காரணத்துக்காக அவர் இப்படி உழைத்தார்.

டைரக்டர்கள் கதை சொல்லும்போது சரியாக இல்லாமல் இருந்தால் அதில் சில திருத்தங்கள் சொல்வார். அதுமட்டுமின்றி தயாரிப்பாளர்களிடம் பணம் வாங்காமல் கூட இருந்திருக்கிறார். இதனால் தான் அவரின் காலில் விழுகிறார்கள். பாடல்களுக்கு 70 சதவீதம் இளையராஜாவே பல்லவி போட்டிருக்கிறார்.



மற்ற பாடல் வரிகளிலும் அவருடைய பங்களிப்பு இருக்கிறது. சினிமா துறைக்கு பெரிய தியாகம் செய்திருக்கிறார். அவர் நீண்ட காலம் நிம்மதியாக வாழவேண்டும். ‘மன்னன்’ படத்தில் என்னையும் பாடவைத்தார். 6 வரிகள் தான். ஆனால் அதை பாட எனக்கு 6 மணி நேரம் ஆனது.

‘பொதுவாக என் மனசு தங்கம்...’, ‘ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும்...’, ‘ஊரை தெரிஞ்சுக்கிட்டேன்...’ என்று எனது படங்களுக்கு அவர் இசையமைத்த எத்தனையோ பாடல்கள் என் மனதில் நிற்கின்றன. ஆனாலும் எனது படங்களை விட கமல்ஹாசன் படங்களுக்கு நல்ல பாடல்களை கொடுத்திருக்கிறார். இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.

விழாவில் நடிகர் கமல்ஹாசன் கலந்துகொண்டு மகள் ஸ்ருதியுடன் இணைந்து ‘ஹேராம்’ மற்றும் ‘சிவப்பு ரோஜாக்கள்’ பட பாடல்களை மேடையில் பாடினார்.

விழாவில் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், டைரக்டர்கள் மணிரத்னம், ஷங்கர், தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால் உள்ளிட்ட நடிகர்-நடிகைகள் மற்றும் ஏ.சி.சண்முகம், ஐசரி கணேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர். #Ilayaraja75 #Rajinikanth #KamalHaasan

Tags:    

Similar News