சினிமா

அரசு பள்ளிகளை நடிகர் - நடிகைகள் தத்து எடுக்க வேண்டும் - நடிகை ஓவியா

Published On 2018-10-30 06:15 GMT   |   Update On 2018-10-30 06:15 GMT
அரசு பள்ளிகளை நடிகர் - நடிகைகள் தத்து எடுக்க வேண்டும் என்று மேல்மலையனூரில் அரசு பள்ளி கட்டிடத்தை திறந்துவைத்த நடிகை ஓவியா தெரிவித்துள்ளார். #RaghavaLawrence #Oviyaa
விழுப்பபுரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே செவலபுரை கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் பழுதடைந்த கட்டிடம் ஒன்று இருந்தது.

இதை புதுப்பித்து தரும்படி அந்த கிராமத்தை சேர்ந்த நடிகர் ராகவா லாரன்ஸ் மக்கள் சேவை மன்ற செயலாளர் சங்கர் மற்றும் பொதுமக்கள், நடிகரும், நடன இயக்குனருமான ராகவா லாரன்சிடம் கோரிக்கை வைத்தனர்.

இதன் பேரில் ரூ.5 லட்சம் செலவில் அந்த கட்டிடத்தை நடிகர் ராகவா லாரன்ஸ் புதுப்பித்து கொடுக்க ஒப்புக்கொண்டார். அதன்படி அந்த கட்டிட வேலைகள் நடந்து முடிந்தது.

அதன் திறப்பு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி தலைமை தாங்கினார். செஞ்சி மாவட்ட கல்வி அலுவலர் ரோஸ் நிர்மலா, மேல்மலையனூர் வட்டார கல்வி அலுவலர் ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியை விஜயலட்சுமி வரவேற்றார்.



இதில் நடிகை ஓவியா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்த பின்னர் ஓவியா பேசியதாவது,

உங்களை இங்கு சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். நானும் ஒரு அரசு பள்ளியில் படித்தவள் தான். அரசு பள்ளிகளில் படிக்க அனைவரும் முன்வரவேண்டும். பெரிய பள்ளியில் படித்தால் தான் பெரிய ஆளாக வரமுடியும் என்பது கிடையாது.

விடா முயற்சியும், தன்னம்பிக்கையும் இருந்தால் யார் வேண்டுமானாலும் பெரிய ஆளாக வரலாம். அரசு பள்ளியை நடிகர் - நடிகைகள் தத்தெடுத்து அதன் வளர்ச்சிக்கு உதவ முன்வர வேண்டும். இந்த பள்ளி கட்டிடத்தை திறந்து வைக்க எனக்கு வாய்ப்பு அளித்த மாஸ்டர் ராகவா லாரன்சுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார். #RaghavaLawrence #Oviyaa #SchoolRenovation

Tags:    

Similar News