கார்

இந்தியாவில் டாடா டியாகோ EV வினியோகம் துவக்கம்

Published On 2023-02-04 12:03 GMT   |   Update On 2023-02-04 12:03 GMT
  • டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய டியாகோ EV மாடலை வாங்குவதற்கான காத்திருப்பு காலம் நான்கு மாதங்களாக உள்ளது.
  • டாடா டியாகோ EV மாடலை முழுமையாக சார்ஜ் செய்தால் 315 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது டியாகோ EV ஹேச்பேக் மாடலின் வினியோகத்தை துவங்கி விட்டது. நாடு முழுக்க 133 நகரங்களில் 2 ஆயிரம் யூனிட்கள் முதற்கட்டமாக வினியோகம் செய்யப்பட்டன. இதுவரை டாடா டியாகோ EV மாடலை வாங்க சுமார் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர் என டாடா மோட்டார்ஸ் தெரிவித்து இருக்கிறது. இவற்றில் முதல் 10 ஆயிரம் முன்பதிவுகள் முதல் நாளிலேயே நடைபெற்று இருக்கிறது.

அறிமுக நிகழ்வில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது டியாகோ EV மாடலை வாங்கும் முதல் 10 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு அறிமுக விலை பொருந்தும் என அறிவித்து இருந்தது. எனினும், அமோக வரவேற்பு காரணமாக அறிமுக விலையை மேலும் 10 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு நீட்டித்தது.

தற்போது டாடா டியாகோ EV மாடலின் விலை ரூ. 8 லட்சத்து 49 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 11 லட்சத்து 79 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. முன்பதிவுகள் அதிகமாகி வருவதால், இந்த விலை விரைவில் மாற்றப்படும் என்றே தெரிகிறது.

இந்திய சந்தையில் டாடா டியாகோ EV மாடல் 19.2 கிலோவாட் ஹவர் மற்றும் 24 கிலோவாட் ஹவர் என இருவித பேட்டரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவற்றில் 24 கிலோவாட் ஹவர் பேட்டரி கொண்ட மாடலின் வினியோகத்திற்கு டாடா மோட்டார்ஸ் முன்னுரிமை அளித்து வருகிறது. இம்மாத இறுதியில் 19.2 கிலோவாட் ஹவர் பேட்டரி கொண்ட கார்களின் வினியோகம் துவங்க இருக்கிறது.

இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி டாடா டியாகோ EV மாடலின் நீண்ட ரேன்ஜ் வழங்கும் வேரியண்டை வினியோகம் பெற வாடிக்கையாளர்கள் அதிகபட்சம் நான்கு மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும் என்றும் சற்றே குறைந்த ரேன்ஜ் கொண்ட மாடல்களை வினியோகம் எடுக்க ஐந்து முதல் ஆறு மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும் என கூறப்படுகிறது.

Tags:    

Similar News