கார்

நவம்பர் மாதத்தில் வாகனங்களின் பதிவு 18 சதவீதம் குறைவு

Published On 2025-12-09 13:26 IST   |   Update On 2025-12-09 13:26:00 IST
  • வாகனங்களின் எண்ணிக்கை இந்த மாதம் அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது.
  • கடந்த ஆண்டு (2024) நவம்பர் மாதத்தில் 1 லட்சத்து 69 ஆயிரத்து 33 வாகனங்கள் பதிவாகியிருந்தன.

ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு கடந்த நவம்பர் மாதம் தெலுங்கானா நீங்கலாக நாடு முழுவதும் பதிவான வாகனங்களின் விவரங்களை வௌியிட்டுள்ளது.

அதன்படி கடந்த மாதம் 25 லட்சத்து 46 ஆயிரத்து 184 இருசக்கர வாகனங்கள், 1 லட்சத்து 33 ஆயிரத்து 951 ஆட்டோக்கள், 3 லட்சத்து 94 ஆயிரத்து 152 தனிநபர் பயன்பாட்டுக்கான கார்கள், 1 லட்சத்து 26 ஆயிரத்து 33 டிராக்டர்கள், 94 ஆயிரத்து 935 வணிக பயன்பாட்டுக்கான வாகனங்கள் உள்பட 33 லட்சத்து 832 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

கடந்த அக்டோபர் மாதம் 40 லட்சத்து 23 ஆயிரத்து 923 வாகனங்கள் பதிவாகி இருந்தது. இதோடு ஒப்பிடுகையில் நவம்பர் மாதம் பதிவான வாகனங்களின் எண்ணிக்கை 17.97 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 73 ஆயிரத்து 577 டிராக்டர்கள் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், நவம்பர் மாதம் 1 லட்சத்து 26 ஆயிரத்து 33 ஆக அதிகரித்துள்ளது. இது 71.29 சதவீதம் அதிகம் ஆகும்.

இதுகுறித்து ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறும்போது, 'தீபாவளி, நவராத்திரி என விழாக்காலத்துக்கு பிந்தைய மாதம் என்பதால் வாகனங்களின் பதிவு குறைந்துள்ளது. ஜி.எஸ்.டி. வரி குறைப்பு, வாகனங்களுக்கு கட்டண சலுகைகள் அறிவிப்பு என்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பதிவு செய்யப்படும் வாகனங்களின் எண்ணிக்கை இந்த மாதம் அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது என்றனர்.

தமிழகத்தில் கடந்த நவம்பர் மாதம் 1 லட்சத்து 55 ஆயிரத்து 602 இருசக்கர வாகனங்கள், 4 ஆயிரத்து 769 ஆட்டோக்கள், 7 ஆயிரத்து 297 வணிக பயன்பாட்டுக்கான வாகனங்கள், 27 ஆயிரத்து 297 தனிநபர் பயன்பாட்டுக்கான வாகனங்கள், 2 ஆயிரத்து 500 டிராக்டர்கள் உள்பட 1 லட்சத்து 97 ஆயிரத்து 848 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு (2024) நவம்பர் மாதத்தில் 1 லட்சத்து 69 ஆயிரத்து 33 வாகனங்கள் பதிவாகியிருந்தன. கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் தமிழகத்தில் பதிவான வாகனங்களின் எண்ணிக்கை 17.05 சதவீதம் அதிகரித்துள்ளது.

Tags:    

Similar News