தமிழகத்தில் கடந்த ஆண்டு 21.18 லட்சம் வாகனங்கள் பதிவு
- கடந்த டிசம்பர் மாதம் மட்டும் தமிழகத்தில் 1 லட்சத்து 75 ஆயிரத்து 648 வாகனங்கள் பதிவாகியிருக்கிறது.
- நவம்பர் மாதத்தில் பதிவானதைவிடவும் 56.55 சதவீதம் அதிகம் ஆகும்.
ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தெலுங்கானா நீங்கலாக நாடு முழுவதும் கடந்த ஆண்டு பதிவாகிய வாகனங்களின் விவரத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2 கோடியே 2 லட்சத்து 95 ஆயிரத்து 650 இருசக்கர வாகனங்கள், 13 லட்சத்து 9 ஆயிரத்து 953 ஆட்டோக்கள், 44 லட்சத்து 75 ஆயிரத்து 305 தனிநபர் பயன்பாட்டுக்கான வாகனங்கள், 9 லட்சத்து 96 ஆயிரத்து 633 டிராக்டர்கள், 10 லட்சத்து 9 ஆயிரத்து 654 வணிக பயன்பாட்டுக்கான வாகனங்கள் உள்பட 2 கோடியே 81 லட்சத்து 61 ஆயிரத்து 228 வாகனங்கள் பதிவாகியிருக்கிறது.
இது கடந்த 2024-ம் ஆண்டு 2 கோடியே 61 லட்சத்து 45 ஆயிரத்து 445 வாகனங்கள் பதிவாகியிருந்தது. இதோடு ஒப்பிடுகையில் 2025-ம் ஆண்டு 7.71 சதவீதம் அதிகம் ஆகும். இதேபோல கடந்த டிசம்பர் மாதம் 20 லட்சத்து 28 ஆயிரத்து 821 வாகனங்கள் பதிவாகியுள்ளது. இது அதற்கு முந்தைய மாதத்தைவிடவும் 38.54 சதவீதம் குறைவு ஆகும். அதாவது 33 லட்சத்து 832 வாகனங்கள் பதிவாகியிருக்கிறது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு 16 லட்சத்து 24 ஆயிரத்து 961 இருசக்கர வாகனங்கள், 55 ஆயிரத்து 167 ஆட்டோக்கள், 78 ஆயிரத்து 409 வணிக பயன்பாட்டுக்கான வாகனங்கள், 3 லட்சத்து 26 ஆயிரத்து 737 தனிநபர் பயன்பாட்டுக்கான வாகனங்கள், 28 ஆயிரத்து 58 டிராக்டர்கள் உள்பட 21 லட்சத்து 18 ஆயிரத்து 458 வாகனங்கள் பதிவாகியிருக்கிறது. இது 2024-ம் ஆண்டு 19 லட்சத்து 53 ஆயிரத்து 524 ஆக இருந்தது.
இதோடு ஒப்பிடுகையில் கடந்த ஆண்டு 8.44 சதவீதம் அதிகம் ஆகும். கடந்த டிசம்பர் மாதம் மட்டும் தமிழகத்தில் 1 லட்சத்து 75 ஆயிரத்து 648 வாகனங்கள் பதிவாகியிருக்கிறது. இது அதற்கு முந்தைய மாதமான நவம்பர் மாதத்தில் பதிவானதைவிடவும் 56.55 சதவீதம் அதிகம் ஆகும். கடந்த நவம்பர் மாதம் 1 லட்சத்து 12 ஆயிரத்து 202 வாகனங்கள் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.