ரிஷபம் - தமிழ் மாத ஜோதிடம்

2026 தை மாத ராசிபலன்

Published On 2026-01-13 08:14 IST   |   Update On 2026-01-13 08:15:00 IST

ரிஷப ராசி நேயர்களே!

தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் சுக்ரன், தனாதிபதி புதனோடு இணைந்து 'புத சுக்ர யோக'த்தை உருவாக்குகிறார். அதோடு செவ்வாய் உச்சம் பெற்றுச் சஞ்சரிக்கிறார். எனவே தைரியத்தோடு எதையும் செய்ய முன்வருவீர்கள். 'கட்டிய வீட்டை விற்றுவிட்டோமே' என்று கவலைப்பட்டவர்களுக்கு, இப்பொழுது வீடு வாங்கும் யோகமும், வியக்கும் தகவல்களும் வந்த வண்ணமாக இருக்கும். கூட்டுக்கிரக யோகத்தோடு இந்த மாதம் பிறப்பதால், அதற்கு ஏற்ற விதத்தில் வாழ்க்கைத் தரம் உயரும். சுபகாரியங்கள் கைகூடும்.

வக்ர குரு

மிதுன ராசியில் உள்ள குரு, இந்த மாதம் முழுவதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசிநாதன் சுக்ரனுக்கு, குரு பகைக் கிரகம் ஆவார். எனவே குரு வக்ரம் பெறுவது ஒரு வகையில் நன்மைதான். 'கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்' என்பதற்கேற்ப திடீர் மாற்றங்களையும், திரவிய லாபத்தையும் தந்து உள்ளத்தை மகிழ்விக்கப்போகிறார். உங்கள் ராசிக்கு 8, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு என்பதால், இதுவரை ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்ய புதிய வாய்ப்புகளை உருவாக்குவார். இடமாற்றம் அல்லது வீடு மாற்றத்தைக் கொடுத்து நன்மைகள் பெற வழிகாட்டுவார்.

குருவின் பார்வை 6, 8, 10 ஆகிய இடங்களில் பதிவதால், உத்தியோகத்தில் ஊதிய உயர்வும், பதவி உயர்வும் கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்த இலக்கை அடைய குறுக்கீடாக இருந்தவர்கள் விலகுவர். ஆன்மிகப் பயணம் அதிகரிக்கும். பிரிந்துசென்ற உறவினர்கள் மீண்டும் வந்து இணைவர். தொல்லை கொடுத்து வந்த தொழில் பங்குதாரர்கள், இப்பொழுது உங்கள் சொல்லுக்கு கட்டுப்படுவர். நூதனப் பொருள் சேர்க்கை உண்டு. 'தொழிலை விரிவு செய்யவும், மேலும் முதலீடு செய்யவும் பணமில்லையே' என்று கவலைப்பட்டவர்களுக்கு, கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும்.

கும்ப - புதன்

உங்கள் ராசிக்கு 2, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர், புதன். அவர் 29.1.2026 அன்று தொழில் ஸ்தானத்திற்கு செல்கிறார். எனவே தொழில் முன்னேற்றம் திருப்திகரமாகவே இருக்கும். 'பழைய கூட்டாளிகளை விலக்கிவிட்டு, புதிய கூட்டாளிகளை இணைத்துக் கொள்ளலாமா?' என்று சிந்தித்தவர்களுக்கு இப்பொழுது நல்ல முடிவு கிடைக்கும். புதிய பணியாளர்கள் வந்திணைந்து பொருளாதாரநிலை உயர வழிவகுத்துக் கொடுப்பர். அதிக முயற்சி எடுத்தும் முடிவடையாத காரியங்கள், இப்பொழுது முடிவடையும். உயர்ந்த மனிதர்களின் சந்திப்பால் உங்கள் வாழ்வில் பலவிதமான மாற்றங்கள் ஏற்படும் மாதம் இது.

கும்ப - சுக்ரன்

மகரத்தில் சஞ்சரித்து வரும் சுக்ரன், 7.2.2026 அன்று கும்ப ராசிக்கு செல்லவிருக்கிறார். உங்கள் ராசிநாதன் தொழில் ஸ்தானத்திற்குச் செல்வது, அற்புதமான நேரமாகும். தொழிலில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். வாகனம் வாங்கி மகிழும் யோகம் உண்டு. ஆன்மிகச் சுற்றுலாக்களில் அதிக கவனம் செலுத்துவீர்கள். வெளிநாட்டில் இருந்து சொந்த ஊர் திரும்ப முடியாமலும், சொந்த ஊரில் இருந்து வெளிநாடு செல்ல முடியாமலும் தத்தளித்தவர்களுக்கு, இப்பொழுது நல்ல பதில் கிடைக்கும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு யோகமான நேரம் இது. புதிய பொறுப்புகளும், பதவி வாய்ப்புகளும் கிடைக்கும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் அரங்கேறும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்கள் அதன் நெளிவு, சுளிவுகளை அறிந்து செய்வது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வாய்ப்புகள் வாசல் தேடிவரும். கலைஞர்களுக்கு கவுரவம், அந்தஸ்து உயரும். மாணவ - மாணவிகளுக்கு மதிப்பெண் உயர்வும், அதனால் மகிழ்ச்சியும் ஏற்படும். பெண்களுக்கு எதிர்பாராத தனலாபம் உண்டு. கொடிகட்டிப் பறந்த குடும்ப பிரச்சனை படிப்படியாக குறையும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

ஜனவரி: 20, 21, 24, 25, 30, 31, பிப்ரவரி: 3, 4.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ரோஸ்.

Similar News