ரிஷபம் - தமிழ் மாத ஜோதிடம்

2025 மார்கழி மாத ராசிபலன்

Published On 2025-12-14 08:34 IST   |   Update On 2025-12-14 08:34:00 IST

ரிஷப ராசி நேயர்களே!

மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்திலேயே உங்கள் ராசிநாதன் சுக்ரன், தன - பஞ்சமாதிபதியான புதனோடு இணைந்து சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இந்த யோகமான நேரத்தில் பொருளாதார நிலை உயரும். புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். குடும்ப முன்னேற்றம் கூடும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். கடுமையாக முயற்சித்தும் இதுவரை நடைபெறாத காரியங்கள் இப்பொழுது துரிதமாக நடைபெறும். விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து இணைவர். ஆயினும் ஆரோக்கியத்தில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது.

மிதுன - குரு

மார்கழி 6-ந் தேதி, மிதுன ராசிக்கு குரு வக்ர இயக்கத்தில் செல்கிறார். அப்பொழுது அவரது பார்வை பதியும் இடங்கள் அனைத்தும் புனிதம் அடைகின்றன. உங்கள் ராசிக்கு அஷ்டம - லாபாதிபதியானவர் குரு. அவரது பார்வை பலத்தால் உத்தியோகம், தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த ஒரு சில காரியங்கள் இப்பொழுது துரிதமாக முடிவடையும். எதிரிகள் விலகுவர். லாபம் வரும் வழியைக் கண்டுகொள்வீர்கள். சென்ற மாதத்தில் தொழிலில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்ய புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.

பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும் என்றாலும், குரு வக்ரமாக இருப்பதால் ஒரு சில சமயங்களில் மன வருத்தமும் வந்துசேரும். வெளிநாடு சென்று பணிபுரிய வேண்டு மென்று நினைத்தவர்களுக்கு, இப்பொழுது அதற்கான சூழல் உருவாகும். வாடகைக் கட்டிடத்தில் நடைபெற்ற தொழிலை, சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றும் முயற்சி கைகூடும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகள் சில நுணுக்கங்களை கற்றுக்கொடுப்பர்.

தனுசு - சுக்ரன்

மார்கழி 7-ந் தேதி, தனுசு ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு அதிபதியாகவும், 6-ம் இடத்திற்கு அதிபதியாகவும் விளங்குபவர் சுக்ரன். அவர் அஷ்டமத்தில் சஞ்சரிப்பது அற்புதமான நேரமாகும். எதிர்பாராத திருப்பங்கள் பலவும் ஏற்படும். இடமாற்றம், வீடு மாற்றம் இனிமை தரும் விதம் அமையும். உத்தியோகத்தில் கூடுதல் உயர்வு கிடைத்து, சம்பள உயர்வு எதிர்பார்த்தபடி அமையும். எந்த காரியத்தை முயற்சித்தாலும், அது உடனடியாக முடிவடையும் நேரம் இது.

மகர - செவ்வாய்

மார்கழி 30-ந் தேதி மகர ராசிக்கு செல்லும் செவ்வாய், அங்கு உச்சம் பெறுகிறார். விரயாதிபதி உச்சம்பெறுவதால் இந்த நேரத்தில் விரயங்கள் அதிகரிக்கும். வீண் விரயங்களில் இருந்து விடுபட சுபவிரயங்களை மேற்கொள்ளுங்கள். பிள்ளைகளின் திருமணத்தை முன்னிட்டு சீர்வரிசைப் பொருட்களை வாங்குவதில் கவனம் செலுத்தலாம். கட்டிய வீட்டைப் பழுது பார்க்கும் யோகம் உண்டு. வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் முயற்சி கைகூடும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பொறுப்புகளில் மாற்றம் ஏற்படும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு அதை விரிவு செய்யும் முயற்சி வெற்றி பெறும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். கலைஞர்களுக்கு கவுரவம் உயரும். மாணவ - மாணவிகள் கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களை படித்து முடிப்பது உத்தமம். பெண்களுக்கு பணவரவு திருப்தி தரும். சுபச்செய்திகள் வந்துசேரும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

டிசம்பர்: 23, 24, 27, 28, ஜனவரி: 3, 4, 7, 8.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- நீலம்.

Similar News