ரிஷபம் - தமிழ் மாத ஜோதிடம்

2025 ஆனி மாத ராசிபலன்

Published On 2025-06-20 14:57 IST   |   Update On 2025-06-20 14:58:00 IST

பேச்சால் கவர்ந்திழுக்கும் திறன்பெற்ற ரிஷப ராசி நேயர்களே!

ஆனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் சுக்ரன் மாத தொடக்கத்தில் விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கின்றார். எனவே அத்தியாவசிய செலவுகளும், ஆடம்பரச் செலவுகளும் அதிகரிக்கும். லாபாதிபதி குரு தன ஸ்தானத்தில் இருப்பதால் தேவைக்கேற்ற பணம் வந்துசேரும். என்றாலும், திடீர் திடீரென செலவுகள் அதிகரிக்கும். ஒருசிலருக்கு இடமாற்றமும், வீடுமாற்றமும் அமையும். வீண் விரயங்களிலிருந்து விடுபட சுபவிரயங்களை மேற்கொள்வது நல்லது.

கடக - புதன்

ஆனி மாதம் 8-ந் தேதி கடக ராசிக்கு புதன் செல்கின்றார். உங்கள் ராசிக்கு 2, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். தனாதிபதியாகவும், பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதியாகவும் விளங்கும் புதன், சகாய ஸ்தானத்திற்கு வரும்பொழுது எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். கொடுக்கல் - வாங்கல்கள் சிறப்பாக அமையும். உடல்நலம் சீராகி உற்சாகத்தோடு இயங்குவீர்கள். அண்ணன், தம்பிகளுக்குள் இருந்த அரசல் புரசல்கள் மாறும். பாகப்பிரிவினைகளுக்காக எடுத்த முயற்சி பலன் தரும். நெருங்கிய நண்பர்கள் உங்களின் நிகழ்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்வர். வருமானம் உயர வழிபிறக்கும்.

ரிஷப - சுக்ரன்

ஆனி 15-ந் தேதி ரிஷப ராசிக்கு சுக்ரன் செல்கின்றார். உங்கள் ராசிநாதன் சுக்ரன் உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கும்போது அற்புதமான நேரமாகும். எதை எந்த நேரம் செய்ய நினைத்தீர்களோ அதை உடனடியாகச் செய்யும் அளவிற்கு பொருளாதார நிலை உயரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு திருப்தி தரும். கேட்ட பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவைகள் கிடைக்கும். பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். திருமணத் தடை அகலும். மங்கல ஓசை மனையில் கேட்க வழிபிறக்கும். பழைய தொழிலை விட்டுவிட்டுப் புதிய தொழில் தொடங்கும் சிந்தனை அதிகரிக்கும். கட்டிய வீட்டைப் பழுது பார்ப்பது போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த மின்சாதனப் பொருட்கள் மற்றும் ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டு. கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல பொறுப்புகள் கிடைக்கும்.

செவ்வாய் - சனி பார்வை

மாதம் முழுவதும் கும்ப ராசியில் சஞ்சரி்க்கும் சனியை சிம்ம ராசியில் சஞ்சரிக்கும் செவ்வாய் பார்க்கின்றார். சனியோடு ராகுவும் கூட்டுக்கிரக சேர்க்கையாக இருக்கின்றது. எனவே மிகுந்த கவனத்தோடு செயல்பட வேண்டும். ஆரோக்கியத் தொல்லையும், மருத்துவச் செலவும் உண்டு. கடன்சுமை காரணமாக வாங்கிய இடத்தையோ, வீட்டையோ விற்க நேரிடும். எதிர்காலத்தைப் பற்றிய பயம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகள் கூடுதல் பொறுப்பைக் கொடுத்து கவலையை உருவாக்குவர். இதுபோன்ற நேரங்களில் யோகபலம் பெற்ற நாளைத் தேர்ந்தெடுத்து அங்காரகனுக்கும், சனிக்கும் உரிய வழிபாடுகளை முறையாகச் செய்வது நல்லது.

பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய திருப்பங்கள் ஏற்படும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு மாற்றினத்தவர்களின் உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் வந்துசேரும். கலைஞர்களுக்கு நல்ல சந்தர்ப்பங்கள் நாடிவரும். மாணவர்களுக்கு ஆசிரியர்களின் ஆதரவு கிடைக்கும். பெண்களுக்கு சேமிப்பு உயரும். உங்கள் பெயரிலேயே சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு.

இம்மாதம் முருகப்பெருமான் வழிபாடு முன்னேற்றம் வழங்கும்.

Similar News