ரிஷபம் - தமிழ் மாத ஜோதிடம்

2025 ஐப்பசி மாத ராசிபலன்

Published On 2025-10-16 07:32 IST   |   Update On 2025-10-16 07:33:00 IST

ரிஷப ராசி நேயர்களே!

ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் நீச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். ஐப்பசி 17-ந் தேதி துலாம் ராசிக்குச் சென்று ஆட்சி பெறுகிறார். எனவே மாதத்தின் முற்பாதியைக் காட்டிலும் பிற்பாதி பலன் தரும். எதிர்பார்த்தபடி பொருளாதாரநிலை உயரும். உத்தியோகத்தில் நீடிப்பும் உயர் அதிகாரிகளின் ஆதரவும் உண்டு. மனப்பயம் அகன்று மகிழ்ச்சி கூடும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்குப் புதிய பொறுப்புகள் கிடைக்கும் யோகம் உண்டு.

உச்சம் பெற்ற குரு

மாதத் தொடக்கத்தில் குரு பகவான் கடக ராசியில் உச்சம் பெற்றுச் சஞ்சரிக்கிறார். உங்கள் ராசிநாதன் சுக்ரனுக்கு பகைக் கிரகமாக விளங்குபவர் குரு பகவான். அவர் சுக்ரனுக்கு பகைக்கிரகமாக உச்சம் பெற்றாலும் நவக்கிரகத்தில் சுபகிரகம் என்று செயல்படுவதால், அதன் பார்வைக்குப் பலன் உண்டு. அந்த அடிப்படையில் கல்யாண முயற்சி கைகூடும். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். முன்னோர் வழி சொத்துக்களில் முறையான பங்கீடுகள் கிடைக்கும். ஆர்வம் காட்டிய புதிய தொழிலில் அதிக லாபம் கிடைக்கும்.

சனி - ராகு சேர்க்கை

மாதம் முழுவதும் தொழில் ஸ்தானத்தில் சனி, ராகு சேர்க்கை பெற்று சஞ்சரிக்கிறார்கள். சனி வக்ரம் பெற்றிருந்தாலும் தன் சொந்த வீட்டில் சஞ்சரிப்பதால் தொழில் வளர்ச்சி சிறப்பாகவே இருக்கும். ஒரு சில குறுக்கீடுகள் ஏற்படலாம். தைரியத்தோடு எதையும் சமாளிக்கும் ஆற்றல் உங்களுக்கு உண்டு என்பதால் எதைப் பற்றியும் நீங்கள் கவலைப்பட வேண்டாம். இல்லம் தேடி லாபம் வந்து கொண்டேயிருக்கும். பாக்கிய ஸ்தானாதிபதியாகவும் சனி இருப்பதால், குடும்ப முன்னேற்றம் திருப்தி தரும். இதுவரை குடும்பத்தில் நடைபெறாதிருந்த சுபகாரியம் இப்பொழுது நடைபெறும்.

விருச்சிக - செவ்வாய்

ஐப்பசி 10-ந் தேதி விருச்சிக ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 7, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் சப்தம ஸ்தானத்திற்கு வரும்பொழுது இடம், பூமியால் ஏற்பட்ட பிரச்சனைகள் அகலும். எதிர்பாராத பயணங்களால் லாபம் கிடைக்கும். துணிந்து சில முடிவுகளை எடுத்து மற்றவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துவீர்கள். தொழில் ரீதியாக முக்கிய முடிவெடுக்கும் பொழுது, அனுபவஸ்தர்களைக் கலந்து ஆலோசிப்பது நல்லது. உடன்பிறப்புகளின் வழியில் திருமண நிகழ்ச்சிகள் நடைபெறலாம். பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு இக்காலம் ஒரு பொற்காலமாகும்.

துலாம் - சுக்ரன்

ஐப்பசி 17-ந் தேதி, துலாம் ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அப்பொழுது 'புத சுக்ர யோக'மும், 'புத ஆதித்ய யோக'மும் ஏற்படுகிறது. எனவே இக்காலத்தில் உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். அரசுவழிச் சலுகைகள் கிடைக்கும். ஆபரணப் பொருள் சேர்க்கை உண்டு. அரசாங்க வேலைக்கு முயற்சித்தவர்களுக்கு அது கைகூடும். தொழில் போட்டிகள் அகலும். வருமானம் உயரும். வாகனம் வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு. 'உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கவில்லையே' என்று வருந்தியவர்களுக்கு, இப்பொழுது உரிய பலன் கிடைக்கும்.

பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் கூடும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு போட்டிகள் அகலும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர்பதவி உண்டு. கலைஞர்களுக்கு பாராட்டும், புகழும் கூடும். மாணவ - மாணவிகளுக்கு கல்வியில் தேர்ச்சி உண்டு. பெண்களுக்கு பகை மாறும். பணத்தேவை உடனுக்குடன் பூர்த்தியாகும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

அக்டோபர்: 18, 19, 29, 30, நவம்பர்: 2, 4, 9, 10.

மகிழ்ச்சி தரும் வண்ணம்: நீலம்.

Similar News