உழைப்பே உயர்வுக்கு வழி என்று சொல்லும் ரிஷப ராசி நேயர்களே!
பங்குனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் உச்சம் பெற்றும், வக்ரம் பெற்றும் சஞ்சரிக்கிறார். அதே நேரம் லாபாதிபதி குரு, உங்கள் ராசியில் இருந்து பரிவர்த்தனை யோகம் பெற்றிருக்கிறார். இதன் விளைவாக தடைப்பட்ட முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தனவரவு திருப்திகரமாக இருக்கும்.
நினைத்த காரியங்களை நினைத்த நேரத்தில் செய்ய இயலும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து மகிழ்விக்கும். என்னயிருந்தாலும் ஜென்ம குருவின் ஆதிக்கம் இருக்கும்வரை கொஞ்சம் பொறுமையாகவே செயல்படுவது நல்லது.
மீன - புதன் சஞ்சாரம்
மாதத் தொடக்கத்தில் மீன ராசியில் சஞ்சரிக்கும் புதன் நீச்சம் பெற்றும், வக்ரம் பெற்றும் சஞ்சரிக்கிறார். உங்கள் ராசிக்கு 2, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். தன - பஞ்சமாதிபதி வலிமை இழப்பது அவ்வளவு நல்லதல்ல. பொருளாதாரப் பற்றாக்குறை ஏற்படும்.
என்றாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றல் உங்களுக்கு உண்டு. குறிப்பாக குடும்பத்தில் பழைய பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கும். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது. உத்தியோகத்தில் எதிர்பாராத மாற்றம் ஏற்படும்.
கும்ப - புதன் சஞ்சாரம்
பங்குனி மாதம் 4-ந் தேதி கும்ப ராசிக்கு வக்ர இயக்கத்தில் புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 10-ம் இடமான தொழில் ஸ்தானத்திற்கு புதன் வருவது யோகம்தான். தனாதிபதியான புதன் தொழில் ஸ்தானத்திற்கு வருகையில், தொழில் வளர்ச்சி திருப்தி தரும். குறுக்கீடு சக்திகள் அகலும். புதிய தொழில் தொடங்கும் சிந்தனை மேலோங்கும்.
தொழிலுக்கு மேலும் முதலீடு செய்ய நிதி நிறுவனங்களின் உதவியும், ஆதரவும் தக்க சமயத்தில் கிடைக்கும். தொழிலில் இணைந்து செயல்பட்ட பழைய கூட்டாளிகளை விலக்கிவிட்டு, புதிய கூட்டாளிகளை சேர்த்துக்கொள்வது பற்றி சிந்திப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சம்பள உயர்வு உண்டு.
மீன - சுக்ரன் வக்ரம்
மீன ராசியில் சஞ்சரிக்கும் சுக்ரன், இந்த மாதம் முழுவதும் வக்ரம் பெற்றுச் சஞ்சரிக்கிறார். மேலும் குருவோடு பரிவர்த்தனை யோகமும் பெற்றிருக்கிறார். உங்கள் ராசிக்கும், 6-ம் இடத்திற்கும் அதிபதியானவர் சுக்ரன். 6-க்கு அதிபதி வக்ரம் பெறுவது நன்மைதான்.
எதிரிகளின் பலம் குறையும். இடையூறு சக்திகள் தானாக விலகும். கல்யாணம், கடை திறப்பு விழா, கட்டிடத் திறப்பு விழா போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. அரசியல் களத்தில் உள்ளவர்களுக்கு, புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
கடக - செவ்வாய்
பங்குனி 24-ந் தேதி கடக ராசிக்குச் செல்லும் செவ்வாய், அங்கு நீச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். உங்கள் ராசிக்கு 7, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் நீச்சம் பெறும் இந்த நேரத்தில், குடும்பப் பிரச்சினை தலைதூக்கும். கொடுக்கல் - வாங்கல்களில் தடுமாற்றம் ஏற்படும். இடம், பூமி வாங்குவதிலோ, விற்பதிலோ சிக்கல்களும், சிரமங்களும் வரலாம். மன பயம் அதிகரிக்கும். எதிர்மறை சிந்தனைகளைத் தவிர்க்க வேண்டிய நேரம் இது.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புது முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு கூட்டாளிகளால் பிரச்சினைகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு உண்டு. கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். மாணவ - மாணவிகளுக்குப் படிப்பில் கவனம் தேவை. பெண்களுக்கு குடும்ப ஒற்றுமை பலப்படும். நூதனப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
மார்ச்: 16, 17, 25, 26, 29, 30, ஏப்ரல்: 4, 5, 9, 10.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.