ரிஷபம் - தமிழ் மாத ஜோதிடம்

2025 கார்த்திகை மாத ராசிபலன்

Published On 2025-11-15 09:53 IST   |   Update On 2025-11-15 09:54:00 IST

ரிஷப ராசி நேயர்களே!

கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன், தன - பஞ்சமாதிபதி புதனுடன் இணைந்து சஞ்சரிக்கிறார். அந்த வகையில் 'புத சுக்ர யோகம்' ஏற்படுவதால் பொன், பொருள் சேர்க்கை உண்டு. பூமியால் லாபம் வந்துசேரும். புதிய முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் சம்பாதிக்கும் வாய்ப்பு உண்டு. குருவின் பார்வை உங்கள் ராசிக்கு சப்தம ஸ்தானத்தில் பதிவதால் கல்யாண முயற்சிகள் கைகூடும். சுபச்செய்திகள் அதிகம் கேட்கும் மாதம் இது.

குரு வக்ரம்

மாதத் தொடக்கத்தில் குரு பகவான் உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். அவர் கார்த்திகை 2-ந் தேதி முதல் வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிநாதன் சுக்ரனுக்கு குரு பகவான் பகைக் கிரகம் என்பதால், இந்த வக்ர காலம் வளர்ச்சி அதிகரிக்கும் காலமாகவே இருக்கும். திட்டமிடாமலேயே சில காரியங்களில் வெற்றி கிடைக்கும். தொழிலில் திடீர் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம், இலாகா மாற்றம் ஏற்படலாம். பணத்தேவை உடனுக்குடன் பூர்த்தியாகும். வெளிநாட்டு முயற்சி பலன் தரும்.

விருச்சிக - சுக்ரன்

கார்த்திகை 11-ந் தேதி விருச்சிக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிநாதன் சுக்ரன் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்கள் ராசியையே பார்ப்பது யோகம்தான். இது ஒரு பொன்னான நேரம் மட்டுமல்ல புதிய திருப்பங்கள் ஏற்படும் நேரமும் ஆகும். அங்குள்ள சூரியன் மற்றும் செவ்வாயோடு சுக்ரன் இணைவதால் 'சுக்ர மங்கள யோகம்' ஏற்படுகிறது. எனவே உங்களுக்கோ, உங்கள் உடன்பிறப்புகளுக்கோ, தாமதித்த திருமணம் தடையின்றி நடைபெறும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

தனுசு - செவ்வாய்

கார்த்திகை 20-ந் தேதி, தனுசு ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 7, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் அஷ்டமத்திற்கு வரும் இந்த நேரம் ஆரோக்கியத் தொல்லை உண்டு. அதனால் மனக்கலக்கமும், மருத்துவச் செலவும் அதிகரிக்கும். 'சேமிப்பு கரைகின்றதே' என்று கவலைப்படுவீர்கள். வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை. இடமாற்றம், ஊர் மாற்றம் எதிர்பாராமல் வந்துசேரும்.

விருச்சிக - புதன்

கார்த்திகை 20-ந் தேதி விருச்சிக ராசிக்கு புதன் வருகின்றார். உங்கள் ராசிக்கு 2, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரம் பொன்னான நேரமாகும். பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். மண், பூமி வாங்கும் யோகம் உண்டு. மாமன், மைத்துனர் வழியில் ஏற்பட்ட மனக்கசப்பு மாறும். பயணங்களால் பலன் உண்டு.

பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயரதிகாரிகளின் ஆதரவு திருப்தி தரும். கலைஞர்களுக்கு நட்பால் நன்மை கிடைக்கும். மாணவ- மாணவிகளுக்கு படிப்பில் அக்கறை கூடும். பெண்களுக்கு குடும்ப முன்னேற்றம் திருப்தி தரும். கொடுக்கல் - வாங்கல்கள் ஒழுங்காகும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

நவம்பர்: 25, 26, 27, 30, டிசம்பர்: 1, 7, 8, 9.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பச்சை.

Similar News