ரிஷப ராசி நேயர்களே!
ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் சுக்ரன் தன ஸ்தானத்தில் குருவோடு இணைந்து சஞ்சரிக்கிறார். முரண்பாடான இந்தக் கிரகச் சேர்க்கையின் காரணமாக ஏற்றமும், இறக்கமும் கலந்த சூழ்நிலை உருவாகும். ஒரு சமயம் மிதமிஞ்சிய பொருளாதார நிலை இருக்கும். மற்றொரு சமயம் வறட்சி நிலை நிலவும். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. திடீர், திடீரென மாற்றங்கள் வந்து தேவையைப் பூர்த்தி செய்து கொடுக்கும். அசுர குரு, தேவ குரு ஆகிய இரண்டு கிரகங்களின் சேர்க்கையும் குடும்ப ஸ்தானத்தில் இருப்பதால், குடும்பத்தில் பழைய பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கும்.
கடக - சுக்ரன்
ஆவணி 5-ந் தேதி, கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3-ம் இடமான சகாய ஸ்தானத்தில், உங்கள் ராசிநாதன் சுக்ரன் சஞ்சரிப்பது உங்களுக்கு சாதகமான நிலையை ஏற்படுத்தும். அவர் அங்குள்ள புதனோடு இணைவதால் 'புத சுக்ர யோகம்' செயல்படுகிறது. எனவே பூமி வாங்கும் யோகமும், பூர்வீக சொத்துகளால் லாபமும் உண்டு. உடன்பிறப்புகளின் வழியில் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். வழக்குகள் சாதகமாக அமையும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். தொழில் நடத்துபவர்களுக்கு நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த மூலதனம் ஏற்படலாம்.
சிம்ம - புதன்
ஆவணி 9-ந் தேதி சிம்ம ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் 4-ம் இடத்திற்கு வருவது யோகம்தான். அங்குள்ள சூரியனோடு இணைந்து 'புத ஆதித்ய யோக'த்தையும் உருவாக்குகிறார். எனவே கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். கடமையில் இருக்கும் தொய்வு அகலும். படித்து முடித்து வேலை இல்லாமல் இருக்கும் வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைக்கும். அதன்மூலம் வரும் உதிரி வருமானத்தில் குடும்பச்சுமை கொஞ்சம் குறையும். 'வீடு கட்டியும் நீண்ட நாட்களாக வாடகைக்கு விட முடியவில்லையே' என்று கவலைப்பட்டவர்களுக்கு, இப்பொழுது நல்ல தகவல் கிடைக்கும். தாயின் உடல்நலம் சீராகும். பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பொறுப்புகள் கிடைக்கும்.
துலாம் - செவ்வாய்
ஆவணி 29-ந் தேதி, துலாம் ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு விரயாதிபதியான செவ்வாய் 6-ல் சஞ்சரிப்பது யோகம்தான். எதிர்பாராத விதத்தில் இனிமை தரும் மாற்றங்கள் வந்துசேரும். சொத்துப் பிரச்சினைகள் சுமுகமாக முடியும். துணிந்து நீங்கள் எடுத்த முடிவுகளைக் கண்டு அருகில் இருப்பவர்கள் ஆச்சரியப்படுவர். பூமி பிரச்சினை அகலும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த மாற்றங்கள் உண்டு. மேல்அதிகாரிகளால் ஏற்பட்ட மனக்குழப்பம் மாறும். கேட்ட நிதியுதவி கிடைக்கும்.
சிம்ம - சுக்ரன்
ஆவணி 30-ந் தேதி, சிம்ம ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு அதிபதி சுக ஸ்தானத்திற்கு செல்லும் இந்த நேரத்தில் மகிழ்ச்சி வந்து சேரும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. வெளிநாட்டு முயற்சியில் ஆதாயம் கிடைக்கும். குடும்பத்தில் நீண்ட நாட்களாக நிலவி வந்த குழப்பம் அகலும். கொடுக்கல் - வாங்கல்கள் சிறப்பாக இருக்கும். புகழ்பெற்ற ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வரவேண்டும் என்ற எண்ணம் நிறைவேறும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி நீடிப்பு கிடைக்கும். கலைஞர்களுக்கு முயற்சியில் வெற்றி உண்டு. மாணவ - மாணவி களுக்கு, பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவு திருப்தி தரும். பெண்களுக்கு வாழ்க்கைத் தரம் உயரும். வசதி பெருகும். நல்ல தகவல் கிடைக்கும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஆகஸ்டு: 19, 20, 23, 24, செப்டம்பர்: 5, 6, 9, 10, 15, 16.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.