ரிஷபம் - தமிழ் மாத ஜோதிடம்

2025 ஆடி மாத ராசிபலன்

Published On 2025-07-17 07:33 IST   |   Update On 2025-07-17 07:35:00 IST

ரிஷப ராசி நேயர்களே!

ஆடி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் சுக்ரன் உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கிறார். அதுமட்டுமல்ல தனாதிபதி புதனும் தன ஸ்தானத்திலேயே இருக்கிறார். எனவே பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சென்ற மாதத்தில் நடைபெறாத சில காரியங்கள், இந்த மாதத்தில் துரிதமாக நடைபெறும். குடும்பத்தில் தடைப்பட்டு வந்த சுபகாரியங்கள், இப்பொழுது நடைபெற்று மகிழ்ச்சியை வழங்கும். 'இடம் வாங்க வேண்டும், வீடு கட்ட வேண்டும்' என்றெல்லாம் கனவு கண்டவர்களுக்கு, அந்தக் கனவுகள் நனவாகி சந்தோஷத்தை வழங்கும்.

மிதுன - சுக்ரன்

ஆடி 10-ந் தேதி, மிதுன ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிநாதன் சுக்ரன் தன ஸ்தானத்திற்கு சென்று, அங்குள்ள தனாதிபதி புதனோடு இணைவதால் இக்காலம் ஒரு இனிய காலமாக அமையும். எதிர்பார்த்த காரியங்கள் எளிதாக நடைபெறும். முன்னேற்றப் பாதையில் இருந்த முட்டுக்கட்டை அகலும். புண்ணிய தலங்களுக்கு சென்று வழிபட்டு வர வேண்டும் என்ற ஆசை நிறைவேறும். குடும்பத்தில் நீண்ட நாட்களாக நிலவி வந்த குழப்பங்கள் தீரும். சமுதாயத்தில் உயர்ந்த மனிதர்களின் பழக்கம் கிடைக்கும். எதை எந்த நேரத்தில் செய்யவேண்டும் என்று விரும்பினாலும், அதை அந்த நேரத்தில் செய்துமுடிப்பீர்கள்.

கன்னி - செவ்வாய்

ஆடி 13-ந் தேதி, கன்னி ராசிக்கு செவ்வாய் செல்கிறார். இவர் உங்கள் ராசிக்கு 7, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர். சப்தம - விரயாதிபதியாக விளங்கும் செவ்வாய், 5-ம் இடத்திற்கு வரும்பொழுது பிள்ளைகள் வழியில் சுபச்செலவு ஏற்படும். அவர்களின் கல்யாணக் கனவு மட்டுமின்றி, கடல்தாண்டிச் சென்று பணிபுரிய வேண்டுமென்ற விருப்பமும், கல்வி மேம்பாட்டிற்கான முயற்சியும் கைகூடலாம். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்தபடி சம்பள உயர்வு கிடைக்கும். பூர்வீக சொத்துப் பிரச்சினை நல்ல முடிவிற்கு வரும். மங்கல ஓசை மனையில் கேட்க வழிபிறக்கும்.

கடக - புதன்

ஆடி 18-ந் தேதி, கடக ராசிக்குப் புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் சகோதர - சகாய ஸ்தானத்திற்கு வரும்போது உடன்பிறப்புகளின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படும். அவர்களின் திருமணத் தடை அகலும். படித்து முடித்து வேலை இல்லாமல் இருக்கும் உடன்பிறப்புகளுக்கு வேலை கிடைத்து உதிரி வருமானங்களும் வந்துசேரும். அதோடு அண்ணன் - தம்பிகளுக்குள் இருந்த பிரச்சினைகள் மறையும். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். புதனோடு சூரியன் இணைந்து 'புத ஆதித்ய யோகம்' உருவாவதால், தொழில் வளம் சிறப்பாக இருக்கும். தொல்லை தரும் எதிரிகளின் பலம் குறையும். பொன், பொருள் சேர்க்கை உண்டு. அரசியல் களத்தில் இருப்பவர்களுக்கு நல்ல பொறுப்புகள் கிடைக்கும். வெளிநாட்டு முயற்சி கைகூடும்.

பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு நல்ல மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்பு உண்டு. வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு, இந்த மாதத்தின் முற்பகுதி லாபம் தரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு திருப்திகரமாக இருக்கும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். மாணவ - மாணவிகளுக்கு பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவு உண்டு. பெண்களுக்கு சொந்த பந்தங்களால் நன்மை ஏற்படும். சொத்துக்களால் லாபமும் கிடைக்கும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

ஜூலை: 17, 22, 23, 27, 28, ஆகஸ்டு: 9, 10, 13, 14.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- நீலம்.

Similar News