எவரிடமும் எளிதில் பழகும் ரிஷப ராசி நேயர்களே!
விசுவாவசு வருடம் புத்தாண்டில் சித்திரை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். மேலும் குருவோடு பரிவர்த்தனை யோகமும் பெறுகிறார். நீச்சம் பெற்ற புதனோடு இணைந்து 'நீச்ச பங்க ராஜயோக'த்தை உருவாக்குகிறார்.
'புத சுக்ர யோக'மும் இருக்கிறது. எனவே மனக்கவலை மாறும். பணக்கவலை தீரும். புதிய முயற்சிகள் யாவிலும் வெற்றி கிட்டும். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியிலும் ஆதாயம் கிடைக்கும். நினைத்த காரியங்கள் ஒவ்வொன்றாக நடைபெறும் நேரம் இது. விரய ஸ்தானத்தில் சூரியன் இருப்பதால் மருத்துவச் செலவு உண்டு.
குரு- சுக்ர பரிவர்த்தனை
உங்கள் ராசியில் சஞ்சரிக்கும் குரு பகவான் லாப ஸ்தானத்தில் உச்சம்பெற்ற சுக்ரனோடு பரிவர்த்தனை யோகம் பெறுகிறார். எனவே தொட்டது துலங்கும். தொழில் முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைத்து வருமானம் வந்துசேரும். இதுவரை கடுமையாக முயற்சித்தும் முடிவடையாத காரியங்கள் இப்பொழுது துரிதமாக முடிவடையும். தனவரவு திருப்தி தரும். வெளிநாட்டு நிறுவனங்களில் இருந்து வரும் அழைப்பு வியக்க வைக்கும்.
கும்ப -ராகு, சிம்ம- கேது
சித்திரை 13-ந் தேதி கும்ப ராசியில் ராகுவும், சிம்ம ராசியில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். இதன் விளைவாக தொழில் வளம் சிறப்பாக அமையும். பழைய நிறுவனங்களை கொடுத்துவிட்டு, புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். வாடகைக் கட்டிடத்தில் நடைபெற்ற தொழிலை, சொந்தக் கட்டிடத்திற்கு மாற்ற முன்வருவீர்கள்.
உத்தியோகத்தில் உள்ளவர்கள் விருப்ப ஓய்வு பெற்றுக் கொண்டு வெளியில் வந்து, சுயதொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவர். சுக ஸ்தான கேதுவின் பலத்தால் ஆரோக்கியத் தொல்லைகளும், மருத்துவச் செலவுகளும் உண்டு. பயணம் அதிகரிப்பதன் காரணமாக உடல் அசதி, காலம் தாழ்ந்து சாப்பிடுதல் உருவாகும். இக்காலத்தில் சர்ப்ப கிரகங்களுக்குரிய ஆலயங்களுக்கு யோகபலம் பெற்ற நாளில் சென்று வழிபட்டு வருவது நல்லது.
மேஷ - புதன் சஞ்சாரம்
சித்திரை 17-ந் தேதி மேஷ ராசிக்கு புதன் வருகிறார். அங்குள்ள சூரியனோடு இணைந்து 'புத ஆதித்ய யோக'த்தை உருவாக்குகிறார். உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் புதன் வருவதால் 'மறைந்த புதனால் நிறைந்த தனலாபம் உண்டு' என்ற நியதிப்படி வருமானம் அதிகரிக்கும். ஆனால் இருமடங்கு செலவு ஏற்படும். குடும்பப் பிரச்சினை கூடும். பெற்றோர் மற்றும் சகோதரர்கள் வாயிலாக வரும் பிரச்சினையால் மன அமைதி குறையும். இடமாற்றம் மற்றும் வீடு மாற்றம் செய்ய முன்வருவீர்கள். மனக்குழப்பம் அதிகரிக்கும் நேரம் இது.
மிதுன - குரு சஞ்சாரம்
சித்திரை 28-ந் தேதி, மிதுன ராசிக்கு குரு வருகிறார். இந்தக் குருப்பெயர்ச்சியின் விளைவாக அவரது பார்வை பதியும் இடங்கள் எல்லாம் புனிதமடைகிறது. எனவே உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இழப்புகளை ஈடுசெய்ய புதிய வழிபிறக்கும். தொழில் மாற்ற சிந்தனை அதிகரிக்கும். கூட்டாளிகளை விலக்கிவிட்டுத் தனித்து இயங்கலாமா? என்று சிந்திப்பீர்கள். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். முன்னேற்றப் பாதையில் இருந்த குறுக்கீடு அகலும். வெளிநாட்டில் உள்ள நண்பர்கள் மூலம் அனுகூலத் தகவல் உண்டு.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்குப் பொன்னான நேரம் இது. வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு கூட்டாளிகளால் நன்மை உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இடமாற்றம் இனிமை தரும். கலைஞர்களுக்கு கைநழுவிச் சென்ற வாய்ப்புக் கைகூடிவரும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் ஆர்வம் கூடும். பெண்களுக்கு குடும்பச்சுமை கூடினாலும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஆடை- ஆபரண சேர்க்கை உண்டு.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஏப்ரல்: 22, 23, 25, 26, மே: 2, 3, 6, 7.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பச்சை.