search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Annamalai"

    • பொய்யான செய்திகளை பரப்புவதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
    • இது புனையப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டமா? என்ற கடுமையான சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

    பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, கச்சத்தீவு தொடர்பாக, சமீபத்தில் வெளியிட்ட ஆவணத்தின் உண்மைத்தன்மை குறித்து, சர்ச்சைக்குரிய தகவல் வெளியாகி உள்ளது.

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கு முன் கச்சத்தீவு குறித்து, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை ஒரு தகவலை வெளியிட்டார். அதாவது, வெளியுறவு துறை அமைச்சகத்தில் இருந்து, தகவல் உரிமை சட்டமான ஆர்.டி.ஐ., வாயிலாக, தனக்கு கிடைத்த தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

    அப்போது அவர் கூறியதாவது: கடந்த, 1961ல் அப்போதைய பிரதமர் நேரு, குட்டித் தீவான கச்சத் தீவுக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் தர வேண்டிய அவசியமில்லை என்றும், அதன் உரிமையை இலங்கைக்கு விட்டுத் தர தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

    இது குறித்து திமுக மாநிலங்களவை உறுப்பினர் பி. வில்சன் தனது எக்ஸ் தளபதிவில் சில கேள்விகளை எழுப்பியுள்ளார்

    அதில் கூறியிருப்பதாவது,

    கச்சத்தீவு விவகாரம் புனையப்பட்டது. எனக்கு ஆச்சரியமில்லை. அவர்கள் பொய்யான செய்திகளை பரப்புவதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

    கச்சத்தீவு குறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட RTI தகவல் தற்போது உண்மையில்லை என நிருபணமாகியுள்ளது.

    1976ல் எந்த பகுதியும் இலங்கைக்கு கொடுக்கப்படவில்லை என 2015ல் பிரதமர் மோடி அரசால் வெளியிடப்பட்ட மற்றொரு RTI தகவலில் வெளியுறவுத்துறை அமைச்சகம் இதனை தெளிவுப்படுத்தியுள்ளது.

    இது புனையப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டமா? என்ற கடுமையான சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இது மாதிரி நடத்தை விதிகளை மீறுவதைத் தவிர, அரசாங்கப் பதிவேடுகளைத் திருத்துதல் மற்றும் பொய்யாக்குதல் போன்ற கிரிமினல் குற்றங்களை ஈர்க்கவில்லையா?

    இதுபற்றி காவல்துறையில் புகார் பதிவு செய்து இந்தப் பிரச்சனையை முழுமையாக விசாரிக்க வேண்டும் என்றும் நான் நினைக்கிறேன்.

    2024 பாராளுமன்ற தேர்தல் வரும் நேரத்தில் மட்டும் நாட்டின் பிரதமரால் கச்சத்தீவு பற்றி கண்டுபிடிக்க முடியும்? இது தேர்தல் பாசாங்குதனம் இல்லையா? 2024 ஜனவரியில் இருந்து மட்டும் எப்படி தமிழகத்தை நினைவு கூர்ந்தார்களோ அதேபோல் தான் கச்சத்தீவு விவகாரத்திலும் நுழைந்து இருக்கிறார்கள். கச்சத்தீவை மீட்பத்தில் பா.ஜ.க. அரசுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்திருந்தால் 2014 முதல் 2024 வரை ஏன் ஒரு சிறு விரலை கூட அசைக்கவில்லை? என்று அவர் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறார்.

    • பாராளுமன்ற தேர்தலில் தெலுங்கானா மக்கள் பா.ஜ.க.வுக்கு வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
    • தெலுங்கானா காங்கிரஸ் முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி ஆரம்பத்தில் பிரதமர் மோடியை புகழ்ந்தார்.

    திருப்பதி:

    தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெலுங்கானா மாநிலத்தில் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.

    அவர் தெலுங்கானா பா.ஜ.க முன்னாள் தலைவர் பண்டி சஞ்சயை ஆதரித்து கரீம் நகரில் பிரசாரம் செய்தார்.

    பண்டி சஞ்சய் மற்றும் தெலுங்கானா மாநில தலைவர்களின் பாத யாத்திரைகள் இந்த மாநிலத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தின. இதனை பார்த்து தான் நான் தமிழகத்தில் நடை பயணம் மேற்கொண்டேன். மக்களுக்காக நடப்பது எளிதல்ல.

    கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி பொய்யான உத்தரவாதங்களை அழித்து தெலுங்கானா மாநிலத்தில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சியின் வஞ்சகத்தை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்.

    இதனால் பாராளுமன்ற தேர்தலில் தெலுங்கானா மக்கள் பா.ஜ.க.வுக்கு வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.


    இன்னும் 5 நாட்கள் தான் தேர்தல் பிரசாரம் நடைபெற உள்ளது. பா.ஜ.க. தொண்டர்கள் ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று 100 வாக்குகளை பெறுங்கள். தெலுங்கானா காங்கிரஸ் முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி ஆரம்பத்தில் பிரதமர் மோடியை புகழ்ந்தார்.

    சோனியா காந்தியின் அழைப்பிற்கு பிறகு அவர் பிரதமருக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். அமித்ஷா குறித்த போலி வீடியோக்களை உருவாக்குவதில் காங்கிரஸ் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    ஆனால் பாஜக தலைவர்கள் சட்ட விரோத முஸ்லிம் இட ஒதுக்கீடுகளுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகின்றனர். இதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மேலும் முதல் மந்திரி ரேவந்த் ரெட்டியின் விமர்சனங்களுக்கு எதிராகவும் அண்ணாமலை பதிலடி கொடுத்து வருகிறார். இதனால் அவருடைய பிரசாரம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    • வரும் ஆண்டுகளில் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு அரசு மருத்துவக் கல்லூரி என்ற இலக்கையும் பிரதமர் மோடி நிச்சயம் நிறைவேற்றுவார்.
    • வருங்காலத்தில் நீட் தேர்வு மூலம், தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும், நமது குழந்தைகள் தலைசிறந்த மருத்துவர்களாக உருவெடுப்பார்கள் என்பது உறுதி.

    சென்னை:

    தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    இன்றைய தினம், நீட் தேர்வு எழுதவிருக்கும் மாணவ மாணவியர் அனைவருக்கும், மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    சாமானிய குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும், மருத்துவக் கல்வியில் சாதனை படைக்க வாய்ப்பு வழங்கும் நீட் தேர்வு, தமிழக மாணவர்களைப் பெருமளவில் ஈர்த்துள்ளது என்பது, ஆண்டுதோறும் நீட் தேர்வு எழுதும் மாணவ- மாணவியர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருப்பதில் இருந்து தெரிகிறது.

    தமிழகத்தில், மருத்துவக் கல்வி இடங்களை கடந்த 10 ஆண்டுகளில் இரு மடங்காக உயர்த்தியுள்ள பிரதமர் மோடி, வரும் ஆண்டுகளில் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு அரசு மருத்துவக் கல்லூரி என்ற இலக்கையும் நிச்சயம் நிறைவேற்றுவார். வருங்காலத்தில் நீட் தேர்வு மூலம், தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும், நமது குழந்தைகள் தலைசிறந்த மருத்துவர்களாக உருவெடுப்பார்கள் என்பது உறுதி.

    இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.

    • நெல்லை கிழக்கு மாவட்டத் தலைவர் ஜெயக்குமார் சடலமாக மீட்கப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது.
    • சாமானிய பொதுமக்கள் எதிர்கொள்ளும் சட்ட ஒழுங்கு பாதுகாப்பு குறித்த கேள்வி பலமாக எழுகிறது.

    சென்னை:

    நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    ஜெயக்குமாரை கடந்த 2 நாட்களாக காணவில்லை என மகன் கருத்தையா ஜெப்ரின் புகார் அளித்திருந்த நிலையில் அவர் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    காணாமல் போனதாகத் தேடப்பட்டு வந்த காங்கிரஸ் கட்சியின், நெல்லை கிழக்கு மாவட்டத் தலைவர் ஜெயக்குமார் சடலமாக மீட்கப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது.

    கடந்த ஏப்ரல் 30-ந்தேதியே மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஜெயக்குமார் புகார் அளித்திருப்பதாகத் தெரிகிறது. குறிப்பாக, நாங்குநேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் தங்கபாலு உள்ளிட்டவர்கள் பெயர்களை, அந்தப் புகார் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். ஆனாலும், காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.

    காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவரின் புகாருக்கே, திமுக ஆட்சியில் இதுதான் நிலைமை என்றால், சாமானிய பொதுமக்கள் எதிர்கொள்ளும் சட்ட ஒழுங்கு பாதுகாப்பு குறித்த கேள்வி பலமாக எழுகிறது.

    உடனடியாக, மறைந்த காங்கிரஸ் திருநெல்வேலி கிழக்கு மாவட்டத் தலைவர் ஜெயக்குமார் புகாரில் குறிப்பிட்டுள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டுமென்று திமுக அரசை வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    • பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அரசியலுக்கு வருவதற்கு முன்பு போலீஸ் அதிகாரியாக இருந்தார்
    • அண்மைக்காலமாக விஷால் பாஜகவுக்கு ஆதரவான கருத்துகளைப் பேசி வருகிறார்

    ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடித்து தயாராகியுள்ள படம் 'ரத்னம்'. இந்த படம் வெளியானதில் இருந்து கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது.

    அடுத்ததாகக விஷால் துப்பறிவாளன் 2 மற்றும் முத்தையா இயக்கும் புதிய படம் ஆகியவற்றில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

    இந்நிலையில், விஷால் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பயோபிக்கில் நடிக்க உள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது.

    பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அரசியலுக்கு வருவதற்கு முன்பு போலீஸ் அதிகாரியாக இருந்தார். எனவே, அவர் எப்படி போலீஸ் அதிகாரியாக மாறினார். அதன்பிறகு எப்படி அரசியலுக்குள் நுழைந்தார் என்பதை வாழ்க்கை வரலாற்று படத்தில் மக்களுக்கு காட்ட இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

    பாஜக சமீப காலமாக எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்து உள்ளது. தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை பேச்சு, செயல்பாடு மிகவும் சிறப்பாக உள்ளது. அவரது பொறுமை எனக்கு பிடித்து உள்ளது என்று விஷால் பேசியிருந்தார்.

    அதனால் பாஜகவினரான அண்ணாமலை பயோபிக்கில் விஷால் நடிப்பது கிட்டத்தட்ட உறுதி என்றே சொல்லப்படுகிறது.

    நடிகர் விஷால் கடந்த சில நாட்களுக்கு முன்பு நான் அரசியலுக்கு வருவது உறுதி மற்றவர்களை போல இப்போது வருகிறேன் அப்போது வருகிறேன் என்று சொல்லமாட்டேன். கண்டிப்பாக வரும் 2026-ஆம் ஆண்டு அரசியலுக்கு வருவேன் என்று கூறி இருந்தார்.

    இந்த சூழலில் அவர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கவுள்ளதாக வெளியான தகவல் அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.

    • ஒவ்வொரு வார்டிலும் எத்தனை ஓட்டுகள் விழும் என்று ஆய்வு செய்ய வேண்டும்.
    • தற்போது வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

    கோவை:

    கோவை பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபட்ட பா.ஜ.க. நிர்வாகிகள், தொண்டர்களுடனான கலந்துரையாடல் கூட்டம் கோவையில் நடந்தது. இந்த கூட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 500 நாட்களே உள்ளன. நாம் அனைவரும் களத்தில் முன்கூட்டியே பணிபுரிய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம். இவை அனைத்திற்கும் அடிப்படை களப்பணி தேவை. நம் தொண்டர்கள் ஒவ்வொருவரும் களத்தில் இருக்க வேண்டும். வாக்காளர் பட்டியலை சரிபார்க்க வேண்டும். விடுபட்டவர்களை இணைக்க வேண்டும். முகவரி மாறியவர்களை கண்டறிந்து பட்டியலில் சேர்க்க வேண்டும். இறந்தவர்களை நீக்க வேண்டும். ஓட்டு இல்லாதவர்களுக்கு ஓட்டு பெற்றுத்தர வேண்டும். பூத் லெவல் கமிட்டிகளை பலமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    ஒவ்வொரு வார்டிலும் எத்தனை ஓட்டுகள் விழும் என்று ஆய்வு செய்ய வேண்டும். ஆதரவாளர்கள், நடுநிலையாளர்கள், எதிர்பார்ப்பாளர்கள் என்று மூன்று விதமாக பிரித்து களப்பணி மேற்கொள்ள வேண்டும். பூத் கமிட்டிகளை வலுப்படுத்துவது அவசியம். மத்திய அரசு திட்டங்கள், அனைத்து தரப்பு மக்களிடமும் போய் சேர வேண்டும். ஒவ்வொரு பகுதிக்கும் பூத் கமிட்டி பொறுப்பாளர்களை நியமிக்க வேண்டும். ஒரு கட்சியின் வளர்ச்சி என்பது அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்துவதில் தான் உள்ளது. அதை கட்சி நிர்வாகிகள் ஒவ்வொருவரும் கற்றுக் கொள்வது அவசியம் ஆகும்.

    தற்போது வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இதில் கோவை நிர்வாகிகளும் பங்கேற்று பிரசாரம் மேற்கொள்ள வேண்டும். இதன் வாயிலாக அங்கு களப்பணி எப்படி மேற்கொள்ளப்படுகிறது. எந்தெந்த நடைமுறைகளை, எப்படியெல்லாம் பின்பற்றுகின்றனர் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நானே முதுகுவலி சிகிச்சைக்காக சென்னையில் தங்கி இருக்கிறேன்.
    • திட்டமிட்டு எனக்கு எதிரான சதி வேலையை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள்.

    சென்னை:

    ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை வைகோ தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலையுடன் போனில் பேசியதாகவும் இது தி.மு.க.வில் அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாகவும் தகவல்கள் பரவியது.

    ஏற்கனவே திருச்சியில் நடைபெற்ற கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் பேசிய போது, உயிரே போனாலும் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடமாட்டேன் என்று கூறினார். அது தேர்தல் நேரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் அண்ணாமலையுடன் பேசினார் என்பது கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி துரை வைகோவிடம் கேட்டபோது அண்ணாமலையை தொடர்பு கொண்டு பேசியதாக வெளியாகிய தகவலை மறுத்தார்.

    அவர் கூறியதாவது:- அண்ணாமலையுடன் நான் ஏன் பேசப் போகிறேன். நானே முதுகுவலி சிகிச்சைக்காக சென்னையில் தங்கி இருக்கிறேன். இந்த மாதிரி பொய்யான தகவல்களை பரப்பி ம.தி.மு.க.வுக்கும் தி.மு.க.வுக்கும் இடையே சிண்டு முடிய பார்க்கிறார்கள். இது தி.மு.க.வுக்கும் தெரியும். அவர்களும் நம்ப போவதில்லை. தேர்தலின் போது தி.மு.க. ஒத்துழைக்கவில்லை என்றார்கள். எனக்கும் என் அப்பாவுக்கும் மனஸ்தாபம் என்கிறார்கள். திட்டமிட்டு எனக்கு எதிரான சதி வேலையை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வரும் மு.க.ஸ்டாலின் பின்னர் அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானலுக்கு வருகை தருகிறார்.
    • வருகிற மே 4-ந்தேதி வரை தனியார் விடுதியில் குடும்பத்துடன் தங்கி ஓய்வெடுக்க உள்ளார்.

    கொடைக்கானல்:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19-ந்தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது அரசியல் கட்சி தலைவர்கள், பிரமுகர்கள் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

    தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ந் தேதி நடைபெறும் என்பதால் அரசியல் கட்சியினர் ஓய்வெடுக்க தொடங்கியுள்ளனர். தமிழகத்தில் தற்போது வெப்ப அலை வீசி வரும் நிலையில் மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் இதமான சீதோஷ்ணம் நிலவி வருகிறது.

    இதனால் அரசியல் கட்சித் தலைவர்கள், கட்சி நிர்வாகிகள் கொடைக்கானலுக்கு குடும்பத்துடன் படையெடுத்து இங்கு தங்கி சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து வருகின்றனர்.

    இதனிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓய்வெடுப்பதற்காக வருகிற 29-ந்தேதி (திங்கட்கிழமை) கொடைக்கானலுக்கு வருகை தர உள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலத்தீவுக்கு சென்று ஓய்வு எடுப்பதாக தகவல் வெளியான நிலையில் கொடைக்கானல் வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வரும் மு.க.ஸ்டாலின் பின்னர் அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானலுக்கு வருகை தருகிறார். வருகிற மே 4-ந்தேதி வரை இங்குள்ள தனியார் விடுதியில் குடும்பத்துடன் தங்கி ஓய்வெடுக்க உள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்லும் இடங்கள், ரோடுகள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் தலைமையில் நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இன்று நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பூங்கொடி, டி.ஐ.ஜி. அபிநவ், எஸ்.பி. பிரதீப், கொடைக்கானல் ஆர்.டி.ஓ. உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

    2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் முடிந்த பின்பு ஓய்வுக்காக மு.க.ஸ்டாலின் குடும்பத்துடன் கொடைக்கானல் பாம்பார்புரத்தில் உள்ள தனியார் விடுதியில் 1 வாரம் தங்கினார். பின்னர் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று தமிழக முதலமைச்சரானார். பாராளுமன்ற தேர்தலிலும் இதே போன்ற வெற்றியை பெற வேண்டும் என்று சென்டிமெண்டாக அதே விடுதியில் தங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக பாதுகாப்பு பணியில் 1500 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடைக்கானல் வருகையை முன்னிட்டு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் அவர் தங்கும் விடுதி மற்றும் அங்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

    இதனிடையே தமிழக பா.ஜ.க. தலைவரும் கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை தனது குடும்பத்தினருடன் கொடைக்கானலுக்கு வருகை தந்தார். பாம்பார்புரத்தில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கி ஓய்வெடுத்து வருகிறார். நாளை மறுநாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தர உள்ள நிலையில் அண்ணாமலை இன்று கொடைக்கானலில் இருந்து தனது சொந்த ஊருக்கு செல்கிறார். மேலும் மற்ற மாவட்டங்களில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் கொடைக்கானலுக்கு பல்வேறு ஊர்களில் இருந்தும் அரசியல் கட்சியினர், முக்கிய பிரமுகர்கள் படையெடுத்து வருவதால் விடுதிகள் நிரம்பி வருகிறது.

    • கோவையில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோரின் பெயர்கள் வாக்காளர்கள் பட்டியலில் இல்லை
    • ஒரு வீட்டில் கணவருக்கு ஓட்டு உள்ளது. மனைவிக்கு இல்லாத நிலை உள்ளது - அண்ணாமலை

    இந்தியாவில் 18-வது பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் மாதம் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் தமிழகம், புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

    தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெற்ற ஏப்ரல் 19 ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்து பேசிய அண்ணாமலை, "கோவையில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோரின் பெயர்கள் வாக்காளர்கள் பட்டியலில் இல்லை" என்று குற்றம் சாட்டினார்.

    மேலும், "ஒரு வீட்டில் கணவருக்கு ஓட்டு உள்ளது. மனைவிக்கு இல்லாத நிலை உள்ளது. கணவருக்கு ஒரு வாக்குச்சாவடியிலும், மனைவிக்கு ஒரு வாக்குச்சாவடியிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த பலரின் வாக்குரிமை மறுக்கப்பட்டுள்ளது. பல வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரப்படவில்லை. பெயர்கள் நீக்கத்தில் அரசியல் இருக்குமோ என சந்தேகம் எழுகிறது என்று அவர் கூறியிருந்தார்.

    இந்நிலையில், கோவையில் 'எங்கள் ஓட்டை காணவில்லை' என்று பாஜகவினர் போராட்டம் நடத்தியுள்ளனர்.

    தேர்தலில் ஓட்டு போட்ட மை அடையாளத்துடன் வந்து ஓட்டை காணவில்லை என பாஜகவினர் போராட்டம் நடத்திய வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். 

    • சர்வதேச மையம் என்ற பெயரில் ஆக்கிரமிக்கும் பணியை மீண்டும் தொடங்கியிருக்கிறது திமுக.
    • பக்தர்களின் விருப்பத்திற்கு எதிராக சத்திய ஞான சபையை ஆக்கிரமிக்கும் முயற்சிகளை, திமுக அரசு உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்.

    சென்னை :

    தமிழக பா.ஜ.க. மாநில தலைவரும், கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    பாராளுமன்றத் தேர்தலுக்காக வாலைச் சுருட்டிக் கொண்டிருந்த திமுக அரசு, தேர்தல் முடிந்ததும் மீண்டும் முருங்கை மரம் ஏறியிருக்கிறது. வடலூரில், வள்ளலார் நிறுவிய சத்திய ஞானசபைக்குச் சொந்தமான இடத்தை, சர்வதேச மையம் என்ற பெயரில் ஆக்கிரமிக்கும் பணியை மீண்டும் தொடங்கியிருக்கிறது திமுக.

    கடலூர் மாவட்டம் வடலூரில், வள்ளலாரின் ஆன்மீகப் பணிகளுக்காக, பொதுமக்கள் மனமுவந்து தானமாக வழங்கிய நிலத்தில், 150 ஆண்டுகளுக்கும் மேலாக, அனைவரின் பசி தீர்க்கும் மேன்மையான பணி நடைபெறுவதோடு, ஆண்டுதோறும், லட்சக்கணக்கான பக்தர்கள், தைப்பூச தினத்தன்று ஜோதி தரிசனமும் பெற்று வருகின்றனர்.

    இந்த நிலையில், திமுக ஆட்சிக்கு வந்ததும், சத்திய ஞானசபைக்குச் சொந்தமான இடம் கண்ணை உறுத்த, சர்வதேச மையம் என்று கூறி ஆக்கிரமிக்க முயற்சித்து வருவதை, கடந்த ஜனவர் 26 அன்று, குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதியில் என் மண் என் மக்கள் யாத்திரையின்போது சுட்டிக்காட்டி, உண்மையிலேயே திமுக அரசின் நோக்கம் சர்வதேச மையம் அமைப்பதுதான் என்றால், சத்திய ஞானசபைக்குச் சொந்தமான ஏற்கனவே ஆக்கிரமிக்கப்பட்டுள்ள சுமார் 30 ஏக்கர் நிலத்தை மீட்டோ, அல்லது வேறு இடத்திலோ அமைக்க வேண்டுமே தவிர, மீண்டும் சத்திய ஞானசபைக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமிக்கக் கூடாது என்று கண்டனம் தெரிவித்திருந்தோம்.

    அதன்பிறகு, வள்ளலாரின் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் கடும் எதிர்ப்பு காரணமாகவும், பாராளுமன்ற மக்களவை பொதுத்தேர்தல் காரணமாகவும், கட்டுமானப் பணிகளை நிறுத்தி வைத்து நாடகமாடிய திமுக, தற்போது காவல்துறை பாதுகாப்புடன் மீண்டும் கட்டுமானப் பணிகளைத் தொடங்கியிருப்பதாகத் தெரிய வருகிறது. பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் விருப்பத்திற்கு எதிராகச் செயல்படும் திமுகவின் இந்த அராஜகப் போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

    அரசுக்குச் சொந்தமாக பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் இருக்கையில், விவசாய நிலங்களை அழித்து சிப்காட் அமைப்பது, வள்ளலார் அவர்களின் கொள்கைக்கு விரோதமாக, சத்திய ஞான சபைக்குச் சொந்தமான இடத்தில் சர்வதேச மையம் அமைப்பது என, திமுக அரசின் செயல்பாடுகள் அனைத்தும் சந்தேகத்திற்குரியதாகவே இருக்கிறது.

    பக்தர்களின் விருப்பத்திற்கு எதிராக சத்திய ஞான சபையை ஆக்கிரமிக்கும் முயற்சிகளை, திமுக அரசு உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



    • குகேசுக்கு தமிழக அரசு முழு ஆதரவை வழங்குவதில் பெருமிதம் கொள்கிறது.
    • செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றிருப்பது தமிழகத்திற்கு உலக அளவில் பெருமை சேர்த்து இருக்கிறது.

    சென்னை:

    கனடாவில் நடந்த கேன்டிடேட் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற சென்னையை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் டி.குகேசுக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி:

    தமிழ்நாட்டை சேர்ந்த குகேஷ் மிக இளம் வயதில் பீடே கேன்டிடேட் சர்வதேச போட்டியில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தமைக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்:

    பீடே கேன்டிடேட்ஸ் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் எலைட் விளையாட்டு வீரர் மற்றும் கிராண்ட்மாஸ்டர் டி.குகேசுக்கு வாழ்த்துக்கள். 17 வயதான சென்னையின் பெருமை இந்திய செஸ்சில் அபாரமான சாதனையை நிகழ்த்தியுள்ளது. விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு கேண்டிடேட்ஸ் போட்டியில் வெற்றி பெற்ற இரண்டாவது இந்திய வீரர் குகேஷ் ஆவார். உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்திற்காக டிங்லிரனுக்கு சவால் விடும் வகையில் அவர் தயாராகும் அவருக்கு நல்வாழ்த்துக்கள். குகேசுக்கு தமிழக அரசு முழு ஆதரவை வழங்குவதில் பெருமிதம் கொள்கிறது.

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை:

    17 வயதில் கேன்டிடேட் செஸ் போட்டியில் வெற்றி பெற்று உலக சரித்திரம் படைத்த கிராண்ட் மாஸ்டர் குகேசுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    உங்களது உறுதியும், விடா முயற்சியும் நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளது. செஸ் உலகில் மிகப்பெரிய இடத்தைப் பிடிக்க விரும்பும் அனைத்து இளம் திறமையாளர்களுக்கும் குகேஷ் உத்வேகமாக இருக்கிறார்.

    தமிழ்நாட்டைச் சேர்ந்த குகேஷ் கேண்டி டேட்ஸ் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றிருப்பது தமிழகத்திற்கு உலக அளவில் பெருமை சேர்த்து இருக்கிறது.

    17 வயதாகும் சென்னையைச் சேர்ந்த குகேஷ் உலக சாம்பியனுடன் போட்டியிட உள்ளார் என்பது தமிழகத்திற்கு பெருமையாக இருக்கிறது. இந்திய நாட்டிற்கு புகழ் சேர்க்கிறது. உலக அளவில் இளம் வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றிருக்கும் குகேசை தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் பாராட்டி, வாழ்த்துகிறேன்.



    • குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட திமுகவினரை இன்னும் இந்த திமுக அரசு கைது செய்ததாகத் தெரியவில்லை.
    • உடனடியாக குற்றச் செயலில் ஈடுபட்டவர்களைக் கைது செய்து கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    சென்னை:

    தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    கடலூர் மாவட்டம் ஶ்ரீமுஷ்ணம் அருகே உள்ள பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த கோமதி என்பவர், வாக்குப்பதிவு நாளன்று, குடும்பத்தினர் கண்முன்னே திமுகவினரால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

    தேர்தலில், தங்கள் கூட்டணிக்கு வாக்களிக்கவில்லை என்பதற்காக, திமுகவினர் இந்தப் பாதகச் செயலை செய்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இந்தக் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட திமுகவினரை இன்னும் இந்த திமுக அரசு கைது செய்ததாகத் தெரியவில்லை.

    அரசியலமைப்புச் சட்டம், குடிமக்களுக்கு வழங்கியிருக்கும் அடிப்படை உரிமையான வாக்களிக்கும் உரிமையைக் கூட, தங்கள் விருப்பப்படிதான் நடத்த வேண்டும் என்ற திமுகவின் சர்வாதிகாரப் போக்கு, ஜனநாயகத்துக்கு மிகுந்த ஆபத்தானது.

    இந்தியாவைக் காப்பாற்றப் போவதாகக் கனவு கண்டு கொண்டிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், முதலில் தனது கட்சிக்காரர்களிடம் இருந்து தமிழக மக்களைக் காப்பாற்றும் வேலையைப் பார்க்க வேண்டும். உடனடியாக, இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டவர்களைக் கைது செய்து, கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அண்ணாமலை அந்த பதிவில் கூறியுள்ளார்.

    ×