search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    இந்திய ரெயில்வே - கோப்புப்படம்
    X
    இந்திய ரெயில்வே - கோப்புப்படம்

    ரெயில் பயணத்தை சிறப்பாக மாற்றும் புதிய திட்டம் - விரைவில் அறிமுகம் செய்யும் இந்தியன் ரெயில்வே

    இந்தியாவில் ரெயில் பயணங்களை சிறப்பாக மாற்றும் புதிய திட்டத்தை விரைவில் செயல்படுத்த இந்தியன் ரெயில்வே திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



    இந்தியன் ரெயில்வே துறை அதன் பயணிகளுக்கு பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் நோக்கில் இலவசமாக வீடியோ ஸ்டிரீமிங் சேவையை வழங்க இருக்கிறது. விரைவில் ரெயில் பயணங்களின் போது பயணிகள் திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றை தங்களது மொபைல் அல்லது டேப்லெட் சாதனங்களில் கண்டுகளிக்க முடியும்.

    புதிய சேவையை பயணிகள் ரெயில்வே நிலையங்கள் மற்றும் ரெயிலில் பயணிக்கும் போதும் பயன்படுத்தலாம். ஏற்கனவே விமானங்களில் இன்-ஃபிளைட் ஏர்கிராஃர்ட் என்டர்டெயின்மென்ட் சிஸ்டம் எனும் சேவையில் இதுபோன்ற வசதி வழங்கப்படுகிறது. அந்த வகையில இதுபோன்ற சேவை ரெயில்வே துறையிலும் அறிமுகம் செய்யப்பட்டு விரைவில் அமலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    “பயணிகளுக்கு இது மிகவும் பிடித்தமான ஒன்றாக இருக்கும். விரைவில் உங்களுக்கு பிடித்த திரைப்படங்கள், நிகழ்ச்சிகள் மற்றும் இசையை ரெயிலில் பயணம் செய்யும் போதும் ரெயில்வே நிலையங்களிலும் ஸ்டிரீம் செய்யலாம்”, என இந்திய ரெயில்வே துறை மந்திரி பியூஷ் கோயல் தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

    வீடியோ ஸ்டிரீமிங் - கோப்புப்படம்

    புதிய சேவையை வழங்க இந்தியன் ரெயில்வே ரெயில்டெல் நிறுவனத்தை தேர்வு செய்துள்ளது. இந்தியன் ரெயில்வேயின் பிரிவாக செயல்படும் இந்நிறுவனம் ரெயில்வே நிலையங்களில் இலவச வைபை சேவையை வழங்கி வருகிறது. எதிர்காலத்தில் இந்நிறுவனம் வீடியோ ஸ்டிரீமிங் சேவையை வழங்கும் என எதிர்பார்க்கலாம். தற்சமயம் வரை இதன் வெளியீடு பற்றி அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.

    எனினும், ரெயில்டெல் நிறுவனம் வீடியோ தரவுகளை பல்வேறு மொழிகளில் வழங்கும் என்றும் இதில் இசை, பொழுதுபோக்குகளான தொலைக்காட்சி சீரியல்கள், ஆன்மீக தொடர்கள், வாழ்வியல் நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை வழங்கப்படும் என கூறப்படுகிறது. ரெயில்டெல் இலவச வைபை வழங்கும் ரெயில் நிலையங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிகிறது.
    Next Story
    ×