என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    ஆப்பிள் நிறுவனம் வை-பை ரவுட்டர் மூலம் ஐபோன்களை சார்ஜ் செய்யும் புதிய தொழில்நுட்பத்திற்கான காப்புரிமையை பதிவு செய்துள்ளதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளது.
    புதுடெல்லி:

    ஆப்பிள் நிறுவனம் வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் தகவல் பரிமாற்ற அமைப்புகளை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி ஐபோன்களை வை-பை ரவுட்டர் கொண்டு சார்ஜ் செய்யும் வசதிக்கான காப்புரிமையை ஆப்பிள் நிறுவனம் கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

    அமெரிக்க காப்புரிமை மற்றும் டிரேட்மார்க்கில் பதிவு செய்யப்பட்டுள்ள தகவல்களின் படி இரட்டை ஃபிரீக்வன்சி ஆன்டெனாக்களை கொண்டு வயர்லெஸ் முறையில் மின்சக்தியை மைக்ரோவேவ் ஃபிரீக்வன்சீக்களாக பரிமாற்றம் செய்ய பயன்படுத்தப்படுகிறது. இதற்கு தேவையான டிரான்ஸ்ஃபர் சர்க்யூட்டரி, மற்றும் பாட்ச் ஆன்டெனா உள்ளிட்டவை ஐபோன்களிலேயே கட்டமைக்கப்படும். 





    மொபைல் போன், கம்ப்யூட்டர் உள்ளிட்ட மின்சாதனங்களில் வயர்லெஸ் சர்க்யூட்கள், தகவல் பரிமாற்றங்களை வயர்லெஸ் முறையில் இயக்க தேவையான ஒன்றாக இருக்கிறது. சில சாதனங்களில் வயர்லெஸ் சார்ஜிங் வசதிகளை வழங்கவும் இவை அத்தியாவசிய தேவையாக இருக்கும் என ஆப்பிள் பதிவு செய்துள்ள காப்புரிமையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    ஏற்கனவே வெளியாகியுள்ள தகவல்களில் ஆப்பிள் தனது ஐபோன் 8 சாதனத்தில் வயர்லெஸ் சார்ஜிங் வசதியை வழங்கும் என தெரிவிக்கப்பட்டது. மேலும் லக்ஸ்ஷேர் ஆப்பிள் நிறுவனத்திற்கான வயர்லெஸ் சார்ஜர்களை தயாரிக்கும் என்றும் ஐபோன்களுக்கான வயர்லெஸ் சார்ஜர்களை ஆப்பிள் நிறுவனம் தனியே விற்பனை செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டது. 





    எனினும் தற்சமயம் வெளியாகியுள்ள தகவல்கள் புதுவகை வயர்லெஸ் சார்ஜிங் வசதிகளை வழங்கும் என தெரிவிக்கின்றன. தற்சமயம் வரை எழுத்துப்பூர்வமாக புதிய தொழில்நுட்பத்திற்கான விளக்கத்தை ஆப்பிள் வழங்கியுள்ள போதிலும், இது பயன்படுத்தக் கூடிய நிலையில் வெளியாக சில காலம் ஆகும் என்றே கூறப்படுகிறது. 

    முன்னதாக வெளியான தகவல்களில் ஐபோன் 8 செங்குத்தாக பொறுத்தப்பட்டுள்ள இரட்டை கேமரா அமைப்பு, எல்இடி பிளாஷ், டிஸ்ப்ளேவுடன் இணைக்கப்பட்ட கைரேகை ஸ்கேனர் உள்ளிட்டவை வழங்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டது. 

    மேலும் புதிய ஐபோனிலும் 3.5 எம்எம் ஆடியோ ஜாக் நீக்கப்படும் என்றும் முழுமையான எட்ஜ்-டூடஎட்ஜ் OLED டிஸ்ப்ளே வழங்கப்படும் என்றும் ஹோம் பட்டன் நீக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
    ஐபோன்களின் பத்தாவது ஆண்டையொட்டி 2017-இல் வெளியாக இருக்கும் ஐபோன் மிக சிறப்பானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஐபோன் 8 கான்செப்ட் வீடியோ இணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    ஆப்பிளின் ஐபோன் 8 சார்ந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன. அந்தவகையில் ஐபோன் எடிஷன் என்றும் கூறப்படும் ஐபோன் 8 கான்செப்ட் வீடியோ யூடியூப் தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

    கான்செப்ட்ஸ்ஐபோன் என்ற பெயரில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள புதிய வீடியோவில் ஐபோன் 8-இல் பெசல்-லெஸ் டிஸ்ப்ளே, டூயல் கேமரா செட்டப் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த வீடியோவில் இரட்டை கேமரா செங்குத்தாக பொறுத்தப்பட்டுள்ளது. 

    வீடியோவில் ஐபோன் எடிஷன் என்ற பெயரில் கருப்பு மற்றும் வெள்ளை நிற மெட்டல் பாடியும், போனின் கீழ்பக்கம் ஸ்பீக்கர் கிரில் மற்றும் யுஎஸ்பி போர்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.




    செல்ஃபி கேமரா மற்றும் கைரேகை ஸ்கேனர் உள்ளிட்டவை டிஸ்ப்ளேவினுள் பொறுத்தப்பட்டுள்ளது. ஐபோன் எடிஷன் எப்படி காட்சியளிக்கும் என்பதை விளக்கும் வீடியோ வெளியகியுள்ள போதிலும் உண்மையில் ஐபோன் 8 எவ்வாறு காட்சியளிக்கும் என்பதை உறுதியாக அறிந்து கொள்ள சில மாதங்கள் ஆகும். 

    முன்னதாக வெளியான தகவல்களில் தயாரிப்பு பணிகளின் காரணமாக 2017 ஐபோன் வெளியீடு தாமதமாகலாம் என கூறப்பட்டது. எனினும் புதிய ஐபோன் திட்டமிட்டபடி அறிமுகம் செய்து விநியோகத்தை மட்டும் தாமதம் செய்ய ஆப்பிள் முடிவு செய்துள்ளது என்றும் கூறப்படுகிறது.



    சீனாவின் பிரபல ஐபோன் வல்லுநரான மிங்-சி கியோ வெளியிட்டுள்ள தகவல்களில் புதிய ஐபோனில் 3D சென்சிங் ஆக்மெண்ட்டெட் ரியாலிட்டி வசதி கொண்ட செல்ஃபி கேமரா வழங்கப்படலாம் என்றும் இன்பராரெட் டிரான்ஸ்மிட்டர் மற்றும் ரிசீவர் மாட்யூல் தொழில்நுட்பங்களின் மூலம் வாடிக்கையாளர்களின் பயன்பாட்டை முற்றிலுமாக மாற்றியமைக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

    இத்துடன் சாம்சங் OLEDக்களுக்கு மாற்றாக ஆப்பிள் தனது புதிய சாதனங்களில் மைக்ரோ-எல்இடிக்களை பொறுத்தலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

    ஐபோன் 8 கான்செப்ட் வீடியோவை இங்கு காணலாம்..,

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி வரும் நிலையில், புதிய ஒன்பிளஸ் 5 ஸ்மார்ட்போனில் டூயல் பிரைமரி கேமரா வழங்கப்படும் என கூறப்படுகின்றது.
    புதுடெல்லி:

    ஒன்பிளஸ் புதிய ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி வரும் நிலையில், ஒன்பிளஸ் 5 ஸ்மார்ட்போனின் புதிய புகைப்படம் மற்றும் சிறப்பம்சங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதன் படி ஒன்பிளஸ் 5 ஸ்மார்ட்போனில் டூயல் பிரைமரி கேமரா அமைப்பு வழங்கப்படலாம் என தெரியவந்துள்ளது.

    தற்சமயம் வெளியாகியுள்ள ஒன்பிளஸ் 5 ஏற்கனவே வெளியான ஒன்பிளஸ் 3T மிட்நைட் பிளாக் வெர்ஷன் போன்று காட்சியளிக்கிறது. இந்த பதிப்பில் வளைந்த எட்ஜ் கொண்ட அலுமினிய வடிவமைப்பு கொண்டிருந்தது. எனினும் புதிய புகைப்படத்தின் பின்பக்கம் கைரேகை ஸ்கேனர் வழங்கப்படாத நிலையில் முன்பக்கம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.


    புகைப்படம்: இந்தியா டுடே

    ஒன்பிளஸ் 3T போன்றே புதிய ஒன்பிளஸ் 5 மாடலிலும் 16 எம்பி பிரைமரி கேமரா வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. ஏற்கனவே வெளியான தகவல்களில் 5.5 இன்ச் QHD டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட், 6ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்டிருக்கும் என கூறப்படுகின்றது.

    சியோமி Mi6, ஐபோன் 7 பிளஸ் போன்ற ஸ்மார்ட்போன்களில் டூயல் கேமரா அமைப்பு வழங்கப்படலாம் என்ற நிலையில் ஒன்பிளஸ் சாதனத்திலும் டூயல் கேமரா அமைப்பு வழங்கப்படலாம் என்ற தகவல் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
    கிட்டி ஹாக் நிறுவனம் உருவாக்கி வரும் பறக்கும் கார் திட்டத்தின் முதல் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. கூகுள் இணை-நிறுவனர் லார்ரி பேஜ், கிட்டி ஹாக் நிறுவனத்தின் பின்புலமாக இருந்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது.
    சான்பிரான்சிஸ்கோ:

    கிட்டி ஹாக் எனும் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக பறக்கும் கார்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. கூகுள் இணை-நிறுவனர் லார்ரி பேஜ் பின்புலமாக இருந்து வரும் இந்நிறுவனம் பணியாற்றி வரும் பறக்கும் கார் திட்டத்தின் முதல் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

    கிட்டி ஹாக் வெளியிட்டுள்ள ப்ரோட்டோடைப் வீடியோவில் சில அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது. கிட்டி ஹாக் ஃபிளையர் என அழைக்கப்படும் புதிய வாகனம் முற்றிலும் மின்சாரம் கொண்டு இயங்கும் ஏர்கிராஃப்ட். முதற்கட்டமாக தண்ணீரின் மேல் பறக்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளதோடு இதை இயக்க விமானிகளுக்கான உரிமம் தேவையில்லை. 

    பொது மக்கள் இதை இயக்க சில நிமிடங்களே போதுமானது. மேலும் இந்த வாகனம் வணிக ரீதியிலான பயன்பாட்டிற்கு இந்த ஆண்டு இறுதிக்குள் வரும் என்றும் கூறப்பட்டுள்ளது. எனினும் கிட்டி ஹாக் முதற்கட்டமாக அமெரிக்காவில் மட்டும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 



    அமெரிக்காவில் பயன்படுத்த பாதுகாப்பானதாகவும், சோதனை செய்யப்பட்டு சட்ட ரீதியாக இயக்கும் உரிமம் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் FAA விதிமுறைகளின் கீழ் அதிக கூட்ட நெரிசல் இல்லாத பகுதிகளில் மட்டும் இயக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக தண்ணீரின் மேல் பறக்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இறுதிகட்ட ஃபிளையர் இந்த ஆண்டின் இறுதிக்குள் நிறைவடையும் என கிட்டி ஹாக் தெரிவித்துள்ளது.   

    இந்த வீடியோ வணிக ரீதியிலான சோதனை அடிப்படையில் படமாக்கப்பட்டுள்ளது. கிட்டி ஹாக் ஃபிளையர் படகு போக்குவரத்திற்கு மாற்றாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஃபிளையரின் வணிக ரீதியிலான விலை இன்னும் நிர்ணயம் செய்யப்படவில்லை.
    ஸ்மார்ட்போன்களை கொண்டு அதிக வீடியோக்களை எடுப்பவர்களுக்கு பயனுள்ள புதிய சாதனத்தை சியோமி வெளியிட்டுள்ளது. இதை கொண்டு வீடியோக்களை தெளிவாக படமாக்க முடியும்.
    பீஜிங்:

    சியோமி வெளியிட்டுள்ள புதிய சாதனம் 3-ஆக்சிஸ் ஷூட்டிங் ஸ்டேபிலைசர் என அழைக்கப்படுகிறது. இதை கொண்டு ஸ்மார்ட்போனில் வீடியோக்களை எவ்வித தடுமாற்றமும் இன்றி தெளிவாக படமாக்க முடியும். சீனாவில் CNY 799 அதாவது இந்திய மதிப்பில் ரூ.7,500 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    சியோமியின் புதிய சாதனம் DJI-இன் ஆஸ்மோ மொபைல் போன்று இல்லாமல் பல்வேறு அதிநவீன சென்சார்கள் கொண்டுள்ளது. இத்துடன் நான்கு வெவ்வேறு ஷூட்டிங் மோட்கள் வழங்கப்பட்டுள்ளதால் வீடியோக்களை பல்வேறு கோணங்களில் படமாக்க முடியும். 

    வழக்கமான ஷூட்டிங் ஸ்டேபிலைசர் சாதனங்களை போன்று ஸ்மார்ட்போன் வீடியோக்களை எவ்வித தடுமாற்றமும் இன்றி படமாக்கக் கூடிய வகையில் சியோமியின் 3-ஆக்சிஸ் ஷூட்டிங் ஸ்டேபிலைசர் வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்சமயம் சியோமி கிரவுட்ஃபன்டிங் தளத்தில் இந்த சாதனம் பட்டியலிடப்பட்டுள்ளது. 

    சியோமியின் புதிய சாதனம் 450 கிராம் எடையில் 1050 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இதனால் தொடர்ச்சியாக நான்கு மணி நேரத்திற்கு பேக்கப் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த சாதனத்தை சர்வதேச சந்தையில் வெளியிடுவது குறித்து எவ்வித தகவலும் இல்லை.
    மோட்டோரோலாவின் மோட்டோ Z2 பிளே ஸ்மார்ட்போன் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த ஸ்மார்ட்போனின் புதிய தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளது.
    புதுடெல்லி:

    மோட்டோரோலா கடந்த ஆண்டு வெளியிட்ட மோட்டோ Z பிளே ஸ்மார்ட்போனின் அப்டேட் செய்யப்பட்ட மாடல் விரைவில் வெளியாகும் என ஏற்கனவே வெளியான தகவல்களில் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், வெளியான தகவல்களை கிட்டத்தட்ட உறுதி செய்யும் வகையில் புதிய ஸ்மார்ட்போனின் புதிய தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளது. 

    முந்தைய மோட்டோ Z பிளே போன்று காட்சியளிப்பதோடு மோட்டோ Z2 பிளே கேமரா மற்றும் செல்ஃபி பிளாஷ் அம்சங்கள் மாற்றப்படாமல் இருப்பது தெரியவந்துள்ளது. இத்துடன் லெனோவோ மோட்டோ மாட்ஸ் சாதனங்களை இணைக்கும் கனெக்டர் பின் உள்ளிட்டவையும் இடம்பெற்றுள்ளது.

    வடிவமைப்பு அம்சங்களை பொருத்த வரை ஹோம் பட்டனில் சிறிய மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி இம்முறை ஹோம் பட்டன் முந்தைய மாடல்களை விட அழகாக காட்சியளிக்கிறது. இத்துடன் சமீபத்தில் வெளியிடப்பட்ட மோட்டோ ஜி5 சீரிசில் வழங்கப்பட்ட ஜெஸ்ட்யூர் கண்ட்ரோல்களும் வழங்கப்படும் என கூறப்படுகிறது.  

    இதுதவிர பேட்டரி பேக்கப், ஏற்கனவே வழங்கப்பட்டதை விட சிறப்பான டிஸ்ப்ளே மற்றும் கேமரா உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படும் என கூறப்படுகின்றது.
    எச்டிசி நிறுவனத்தின் வைவ் விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் இந்திய விலை ரூ.92,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    தாய்வானை சேர்ந்த மின்சாதன நிறுவனமான எச்டிசி புதிய வகை விர்ச்சுவல் ரியாலிட்டி அமைப்பான எசட்டிசி வைவ் ஹெட்செட்  சாதனத்தை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. 

    புதிய விர்ச்சுவல் ரியாலிட்டி சாதனத்துடன் விர்ச்சுவல் ரியாலிட்டி கண்ட்ரோலர், ரூம்-ஸ்கேல் மூவ்மென்ட் மற்றும் பில்ட்-இன் கேமரா கொண்ட ஹெட்-மவுண்டெட் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ரூ.92,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ள புதிய விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட் பிரத்தியேகமாக அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   

    ஆன்லைன் விற்பனையை தொடர்ந்து இந்தியாவில் இயங்கி வரும் எச்டிசி விற்பனை மையங்களில் இன்-ஸ்டோர் அனுபவத்தை வாடிக்கையாளர்கள் விரைவில் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு வைவ் சாதனத்தை பிரத்தியேகமாக விளக்குவதோடு சாதனத்தை பயன்படுத்தியும் பார்க்கலாம் என எச்டிசி தெரிவித்துள்ளது.
    வாட்ஸ்அப் செயலியில் வாடிக்கையாளர்களுக்கு புதிய வசதிகளை வழங்குவதற்கான அப்டேட்கள் அவ்வப்போது வழங்கப்பட்டு வரும் நிலையில் அந்நிறுவனம் விரைவில் வழங்க இருக்கும் அம்சங்களை பற்றி இங்கு பார்ப்போம்.
    புதுடெல்லி:

    வாட்ஸ்அப் செயலியில் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் அவ்வப்போது வாடிக்கையாளர்களுக்கு புதிய வசதிகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் வாட்ஸ்அப் செயலியில் வழங்குவதற்கென பல்வேறு அம்சங்களை வாட்ஸ்அப் சோதனை செய்து வருகிறது. 

    ஏற்கனவே வாட்ஸ்அப்பில் இருந்து வரும் இன்டர்ஃபேஸ்-ஐ மாற்றி புதிய வகை இன்டர்ஃபேஸ் வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருவது தெரியவந்துள்ளது. இவ்வாறு ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் வாட்ஸ்அப் வழங்க இருக்கும் புதிய வசதிகள் எவை என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

    ஆண்ட்ராய்டு:



    * நேரலையில் இருப்பிடத்தை பகிர்ந்து கொள்ளும் லைவ் லொகேஷன் ஷேரிங் வசதி வழங்குவதற்கான சோதனைகள் நடைபெற்று வருகிறது. இந்த அப்டேட் மூலம் மெசேஜ் டைப் செய்யும் போது மேப்ஸ் இன்டர்ஃபேஸ் செல்லாமல் இருப்பிடத்தை பகிர்ந்து கொள்ள முடியம்.

    * வாட்ஸ்அப் சாட் அல்லது குரூப்களில் பின் செய்யப்பட்ட தகவல்கள் ஹைலைட் செய்யப்படுவதில்லை. இந்த அம்சம் மேம்படுத்தப்பட்டு குரூப்களை விட்டு வெளியேறும்போது குறிப்பிட்ட குரூப்பினை அன்பின் (unpin) செய்யக் கோரும் தகவல் திரையில் தெரியும். தற்சமயம் வரை இந்த அம்சம் ஆண்ட்ராய்டு பீட்டா பதிப்பில் மறைத்து வைக்கப்பட்டுள்ளது.   

    * சில சமயங்களில் புதிய அம்சங்களை மேம்படுத்த பீட்டா பதிப்பில் அவை வழங்கப்பட மாட்டாது. இவ்வாறு செய்யப்படும் போது ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள அம்சங்களுடன் புதிய அம்சங்கள் குறுக்கிடாமல் இருக்கும். மேலும் பீட்டா பதிப்பின் மூலம் வீடியோக்களை எடிட் செய்ய புதிய யூசர் இன்டர்ஃபேஸ் வழங்கப்பட்டுள்ளது. 

    ஐஓஎஸ்:



    * வாட்ஸ்அப் செயலியின் புதிய யூசர் இன்டர்ஃபேஸ் மாற்றப்பட்டுள்ளது. மேலும் செயலியின் காண்டாக்ட் தகவல்கள் அம்சம் மாற்றப்பட்டு லோகோவின் பின்னணியில் தெரியும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்துடன் ‘Chat History’ பட்டன் ‘Groups in common’ ஆப்ஷனுடன் வழங்கப்பட்டுள்ளது. 

    * காண்டாக்ட் தகவல்களை எடிட் செய்து பார்க்கும் வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த பகுதிக்கென வேகமாக குறுந்தகவல் அனுப்பும் ஷார்ட்கட், வீடியோ மற்றும் ஆடியோ கால்களை திரையில் இருந்து மேற்கொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளது. 

    * செயலியின் அழைப்புகளை மேற்கொள்ள உதவும் பகுதியில் வாட்ஸ்அப் புரொஃபைல் புகைப்படம், கால் வகை மற்றும் + என்ற சின்னம் வழங்கப்பட்டுள்ளது. இதை கொண்டு ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகளை மேற்கொள்ளலாம். 

    * வாட்ஸ்அப் காண்டாக்ட் லிஸ்டில் இல்லாதவர்களுக்கென காண்டாக்ட் கார்ட்ஸ் எனும் வசதி வழங்குவதற்கான சோதனைகள் நடைபெற்று வருகிறது. இதை கொண்டு மற்றவர்கள் அனுப்பிய காண்டாக்ட் கார்டுகளை பார்க்க முடியும். இறுதியாக சிரி உதவியுடன் வாட்ஸ்அப் குறுந்தகவல்களை படித்து அவற்றிற்கு பதில் அனுப்பும் வசதியும் வழங்கப்பட இருக்கிறது.
    எச்டிசி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட எச்டிசி யு மாடல் ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி ஒருவழியாக உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இதற்கான டீசர் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    சாம்சங் மற்றும் எல்ஜி நிறுவனஙகளின் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்கள் வெளியிடப்பட்டு விரைவில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இந்நிலையில், எச்டிசி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட யு ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து எச்டிசி வெளியிட்டுள்ள டீசரில் வெளியீட்டு தேதியுடன் பல்வேறு சிறப்பம்சங்களும் தெரியவந்துள்ளது.

    எச்டிசி யு ஸ்மார்ட்போன் மே மாதம் 16-ந்தேதி அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எச்டிசி நிறுவனத்தின் டீசர் வீடியோ ட்விட்டரில் வெளியிடப்பட்டது. இதில் எச்டிசி யு ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் எட்ஜ் சென்சார் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. 

    ஏற்கனவே வெளியான தகவல்களில் இந்த சென்சார்கள் ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளேவை சுற்றி மேல் பகுதியில் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த டச் சென்சிட்டிவ் ஃபிரேம் கொண்டு சத்தத்தை மாற்றியமைத்தும், செயலிகளை இயக்கவும் வழி செய்யும். 



    எனினும் இந்த அம்சங்கள் ஸ்மார்ட்போனில் வழங்கப்படும் அழுத்தத்தை கொண்டே இயங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஸ்மார்ட்போனில் எவ்வித பட்டன்களும் இல்லாத உலகின் முதல் ஸ்மார்ட்போன் என கூறப்படுகிறது.   

    சிறப்பம்சங்களை பொருத்த வரை எச்டிசி யு 5.5 இன்ச் QHD டிஸ்ப்ளே கார்னிங் கொரில்லா கிளாஸ் 5, குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் வழங்கப்படும் என கூறப்படுகின்றது. இததுடன்  4ஜிபி /6ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி அல்லது 128 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்படலாம். 

    புகைப்படங்களை எடுக்க 16 எம்பி செல்ஃபி கேமராவும், 12 எம்பி பிரைமரி கேமரா வழங்கப்படலாம் என்றும் 3000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் என்றும் குவிக் சார்ஜ் 3.0 வசதி வழங்கப்படும் என்றும் கூறப்படுகின்றது.
    பேஸ்புக் F8 நிகழ்ச்சியின் இரண்டாவது நாளில் அந்நிறுவனத்தின் எதிர்கால திட்டங்கள் சார்ந்த அறிவிப்புகள் திரையிடப்பட்டன. அதில் மனதில் நினைப்பதை பிழையின்றி டைப் செய்யும் தொழில்நுட்பமும் இடம்பெற்றிருந்தது.
    கலிபோர்னியா:

    பேஸ்புக் நிறுவனத்தின் F8 டெவலப்பர் கான்ஃபெரென்ஸ் நிகழ்ச்சியின் முதல் நாள் நிகழ்ச்சியில் அந்நிறுவனத்தின் எதிர்கால திட்டங்கள் சார்ந்த அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன. இத்துடன் சில சாதனங்களும் புதிய தொழில்நுட்பங்களும் அறிமுகம் செய்யப்பட்டன. 

    இதைத் தொடர்ந்து F8 நிகழ்ச்சியின் இரண்டாவது நாளில் அந்நிறுவனம் புதிய சாதனங்களை வெளியிட்டது. இவை முற்றிலும் வித்தியாசமானதாகவும், அபாயகரமானதாகவும் இருந்தது. இத்துடன் சில திட்டங்களுக்கான முன்னோட்ட வீடியோக்களும் திரையிடப்பட்டன. 

    அவ்வாறு பேஸ்புக் நிறுவனம் நேற்று அறிமுகம் செய்த சாதனங்கள் எவை என்பதை தொடர்ந்து பார்ப்போம்..,

    சரவுண்டு 360 கேமராக்கள்:



    பேஸ்புக் நிறுவனத்தின் புதிய 360 டிகிரி டெவலப்பர் கேமராக்கள் அறிமுகம் செய்யப்பட்டன. X24 மற்றும் X6 என அழைக்கப்படும் இந்த கேமராக்கள் பேஸ்புக் நிறுவனம் கடந்த ஆண்டின் F8 நிகழ்வில் அறிமுகம் செய்த பேஸ்புக் சரவுண்டு 360 மாடல்களின் அப்டேட் செய்யப்பட்ட மாடல் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி கண்ணாடிகள்:



    ஆகுலஸ் நிறுவனத்தின் தலைமை ஆராய்ச்சியாளர் மைக்கேல் அப்ராஷ் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி (AR) மற்றும் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி கண்ணாடிகள் இடையேயான வித்தியாசம் குறித்து பேசினார். 'முழுமையான ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி என்பது ஆடியோ மற்றும் வீடியோ என இரண்டையும் இயக்கும் திறன் கொண்டிருக்கும். இது அவ்வப்போது பயன்படுத்தப்படும் சாதாரண ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி போன்று இருக்காது', என அவர் தெரிவித்தார். 

    இம்மாதிரியான தொழில்நுட்பம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் பிரபலமாகி, வணிக ரீதியிலான பயன்பாட்டிற்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.    

    பில்டிங் 8:



    பேஸ்புக்கின் ரெஜினா டௌகன், அந்நிறுவனத்தின் மர்மமான பில்டிங் 8 திட்டம் குறித்து விளக்கினார். இந்த திட்டமானது மனதில் நினைப்பதை வார்த்தைகளாக டைப் செய்யும் வழிமுறை ஆகும். மனித மூளையில் அனைத்து செயல்களையும் மேற்கொள்ள உதவும் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிறிய சிப்செட்கள், மூளை நினைப்பதை அப்படியே டைப் செய்ய வழி செய்கிறது. 

    அதாவது, மூளையின் ஸ்பீச் சென்டரில் இருந்து வரும் வார்த்தைகளை, நிமிடத்திற்கு 100 வார்த்தைகள் என்ற வேகத்தில் டைப் செய்ய வைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சாதாரணமாக ஒருவர் தனது ஸ்மார்ட்போனில் டைப் செய்வதை விட ஐந்து மடங்கு வேகமானது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

    முதற்கட்டமாக நிமிடத்திற்கு 8 வார்த்தைகளை டைப் செய்ய முடியும் என டௌகன் தெரிவித்துள்ளார்.  
    சியோமி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi6 ஸ்மார்ட்போன் பீஜிங் நகரில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் வழங்கப்பட்டுள்ள முழு சிறப்பம்சங்களை இங்கு பார்ப்போம்.
    பீஜிங்:

    சியோமி நிறுவனத்தின் 2017 ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் சீனாவின் பீஜிங் நகரில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய Mi6 ஸ்மார்ட்போன் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் மற்றும் 6ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. சியோமி கடந்த ஆண்டு வெளியிட்ட Mi5 ஸ்மார்ட்போனை விட அதிக மேம்படுத்தப்பட்டுள்ளது.  

    மற்ற சிறப்பம்சங்களை பொருத்த வரை 5.15 இன்ச் டிஸ்ப்ளே, கைரேகை ஸ்கேனர், மெட்டல் வடிவமைப்பு கொண்ட வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. மேலும் புகைப்படங்களை எடுக்க 12 எம்பி டூயல் பிரைமரி கேமரா மற்றும் புகைப்படங்களை தெளிவாக எடுக்க உதவும் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 8 எம்பி செல்ஃபி கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. 



    சியோமி Mi6 ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டுள்ள 3350 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி நாள் முழுக்க பேக்கப் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாட்டர் ப்ரூஃப் வசதி கொண்டுள்ள Mi6 ஸ்மார்ட்போனில் கைரேகை ஸ்கேனர் மற்றும் இன்ஃப்ராரெட் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. 

    விலையை பொருத்த வரை 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட மாடல் CNY 2,499 அதாவது இந்திய மதிப்பில் ரூ.25,000, 128ஜிபி மெமரி மற்றும் 6ஜிபி ரேம் கொண்ட மாடல் CNY 2,899 அதாவது இந்திய மதிப்பில் ரூ.29,000 மற்றும் கேமரா ரிங்-இல் 18 கேரட் தங்க முலாம் பூசப்பட்ட 128ஜிபி மெமரி மற்றும் 6ஜிபி ரேம் கொண்ட மாடல் CNY 2,999 அதாவது இந்திய மதிப்பில் ரூ.30,000 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    4ஜி எல்டிஇ, வை-பை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி கனெக்டிவிட்டி வழங்கப்பட்டுள்ள Mi6 ஸ்மார்ட்போன் சீனாவில் ஏப்ரல் 28-ந்தேதி முதல் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்படுவது குறித்து எவ்வித தகவலும் இல்லை.
    சீன நிறுவனம் தயாரித்த தாணியங்கி டிரக் சோதனையில் வெற்றி பெற்றுள்ளதாக அந்நிறுவனத்தின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    பீஜிங்:

    சீனாவின் முன்னணி டிரக் தயாரிக்கும் நிறுவனமான FAW ஜைஃபாங் தாணியங்கி முறையில் இயங்கும் டிரக் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த டிரக்-இன் சோதனைகள் வெற்றி பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த ஆண்டின் துவக்கத்தில் இந்த டிரக் வணிக ரீதியிலான வியாபாரத்தற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    சாலையில் செல்லும் போது இடர்பாடுகளை அறிந்து கொண்டு, இந்த டிரக் வேகத்தை தானாக குறைத்து, வேகத்தை கூட்டவும் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் அதிநவீன சென்சார்கள் போக்குவரத்து விளக்குகளை சரியாக அறிந்து, ரிமோட் கமாண்ட்களை வெற்றிகரமாக புரிந்து கொள்வதாக அந்நிறுவனத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.      



    தாணியங்கி டிரக்களை உருவாக்கி, விற்பனை செய்து அவற்றை சர்வீஸ் செய்ய பல்வேறு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதே போல் பல்வேறு நிறுவனங்கள் ஒன்றிணைந்தால் கனரக வாகனங்களில் தொழில்நுட்பத்தை புகுத்துவது மேலும் எளிமையாகி விடும் என FAW ஜைஃபாங் நிறுவனத்தின் பொது மேளாலர் ஹூ ஹன்ஜி தெரிவித்தார். 

    சீனாவில் FAW ஜைஃபாங் நிறுவனம் மட்டுமில்லாமல் பைடூ மற்றும் டென்செண்ட் போன்ற சீன நிறுவனங்களும் தாணியங்கி வாகனங்களை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. பைடூ நிறுவனம் ஏற்கனவே தாணியங்கி கார்களை சோதணை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.     
    ×